Published : 16 Jun 2017 10:14 AM
Last Updated : 16 Jun 2017 10:14 AM
நான் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ‘சங்கராபரணம்’ வெளியானது. அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகளில் ஆலயத்துக்கு மக்கள் செல்வது போன்ற மனநிலை நிலவியது. இயக்குநர் கே. விஸ்வநாத்தைப் பற்றி தீவிரமும் மரியாதையும் தொனிக்க எங்கள் கல்லூரி வளாகத்தில் எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த நாட்களில் எனது விடுதி அறையில் ‘சங்கராபரண’த்திலிருந்து ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தபோது, அடுத்த அறையிலிருந்து ஒரு பையன், அந்தப் பாடலின் புனிதத்தை என் ஸ்ருதிப் பிசகாலும், மோசமான குரலாலும் கெடுப்பதாக என்னைக் கடிந்துகொண்டான். நான் ஏதாவது வணிகப் படத்தின் பாடலை ஸ்ருதிப் பிசகுடன் பாடினால், அவன் அப்படி எதிர்வினை ஆற்றியிருக்க மாட்டான்.
தனது ‘சங்கராபரணம்’ படம் மூலமாகப் பார்வையாளர்கள் மீது கே.விஸ்வநாத் ஏற்படுத்தியிருந்த தாக்கம் அது. அந்தச் சமயத்தில் அவருக்குப் பலவிதமான பாராட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவரது கால்களைத் தொட்டுக் கும்பிடுவதும் சால்வைகள் போர்த்துவதுமாகக் கிட்டத்தட்ட வழிபாட்டைப் போல அந்த நிகழ்ச்சிகள் இருந்தன. முன்பாகவே அவர் நிறைய நல்ல படங்களை எடுத்திருந்தாலும் ‘சங்கராபரணம்’தான் அவருக்கு ஒரு கடவுளின் அந்தஸ்தைக் கொண்டுவந்தது.
தட்டிக்கொடுத்தவர்
அதைத் தொடர்ந்து ‘சப்தபதி’, ‘சாகர சங்கமம்’ எனப் பிரமாதமான படங்கள் வந்தன. நாங்கள் யாரும் அவரது படங்களைத் தவறவிட்டதே இல்லை. கே. ராகவேந்திர ராவ், தாசரி நாராயண ராவ் அல்லது கோதண்டராமி ரெட்டி ஆகியோரின் சினிமாக்களுக்குப் போகும் மனநிலையிலிருந்து முழுக்க வேறுபட்ட மனநிலையில்தான் கே. விஸ்வநாத்தின் படங்களுக்குச் சென்றோம். அவர் எடுத்த சில படங்கள் வெற்றிபெற்றன. சில அந்த அளவு போகவில்லை. ஆனால், யாரும் அவரது படத்தைப் பற்றி மோசமாகச் சொன்னதாக எனக்கு நினைவில் இல்லை. வசூல் அளவில் அந்தப் படங்கள் லாபத்தை அளிக்காமல் இருந்திருக்கலாம். அவரது படத்தைப் பிடிக்காதவர்கள்கூட இருந்திருக்கலாம். ஆனால், அவர் மீதான மரியாதையின் காரணமாக அவர்கள் அமைதி காத்தனர்.
எனது முதல் திரைப்படமான ‘சிவா’வை எடுத்து நீண்ட காலத்துக்குப் பின்னர், சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதைப் பெற்றேன். விசாகப்பட்டினத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் விருது விழாவுக்குச் செல்லக் காத்திருந்தபோது, அடுத்த அறையில் கே.வி. இருப்பதாகச் சொன்னார்கள். நான் அதைக் கேட்டு உற்சாகமடைந்து அவசர அவசரமாக அவரைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றேன்.
அவரது அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் நிறையப் பேர் அவரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர். நான் எனது முறை வரும்வரை காத்திருந்து, இறுதியில் சந்திக்க வாய்த்தபோது அவரது திரைப்படங்களை நான் எவ்வளவு நேசித்தேன் என்று அவரிடம் சொன்னபோது, “நான் சிவா படம் பற்றிக் கேள்விப்பட்டேன். ஆனால், படத்தைப் பார்க்கவில்லை. நீ நன்றாகச் செய்திருப்பதாகச் சொன்னார்கள்” என்று சொல்லிவிட்டு எனது முதுகில் வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்தார்.
அதற்குப் பிறகு எனக்கு அவருடன் தொடர்பேயில்லை. அவ்வப்போது அவர் வெவ்வேறு படங்களை எடுப்பதில் ஈடுபட்டிருந்தார். அவரது திரைப்பட வாழ்க்கையில் மிகவும் தோல்விகரமான கட்டத்தில் இருந்தபோது, பாடலாசிரியர் ஸ்ரீவென்னல சீதாராம சாஸ்திரி என்னிடம் வந்து கே.வி. என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். நான் காரணம் கேட்டபோது, கே. வி. ஒரு புதிய திரைக்கதைக்காகத் தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். அப்போது நான் நிறைய படங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தேன். நான் சாஸ்திரி காருவிடம் அவரைப் பார்த்து ஒன்றும் ஆகப்போவதில்லையென்றும் நான் படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாகவும் சொன்னேன்.
சாஸ்திரி காரு கிளம்பிச் சென்றார். அடுத்த நாள் என்னை அழைத்து கே. வி. என்னைப் பார்க்க வீட்டுக்கு வர விரும்புவதாகச் சொன்னார். அவரது கதையைச் சொல்வதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானது என்றும் கூறினார். எனக்கு நேரமில்லாததால் என்னால் அவரைச் சந்திக்க முடியாது என்று கூறினேன். நான் கூறிய பதிலைக் கேட்டு சாஸ்திரி அதிர்ச்சியடைந்தார்.
எனது பொய்கள்
நான் சொன்னதை அப்படியே அவர் நிச்சயமாக கே.வியிடம் சொல்லியிருக்க முடியாது. அதனால் நான் பார்க்க முடியாமல் போனதற்கு வேறு காரணம் எதையாவது சொல்லியிருப்பார். அடுத்த நாள் என் அம்மா எனது அறைக்குப் பரபரப்புடன் ஓடோடி வந்து, தொலைபேசியில் கே.விஸ்வநாத் எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். நான் வீட்டில் இல்லையென்று எனது அம்மாவிடம் பொய் சொல்லச் சொன்னேன். அவர் அதிர்ச்சியடைந்து, நான் ஏன் கே.வியிடம் இத்தனை அவமரியாதையாக நடந்துகொள்கிறேன் என்று கேட்டார்.
நான் அப்போது அவரிடம் அதற்கு உடனடியாகப் பதிலளிக்க முடியாதென்று சொல்லி, நான் வீட்டில் இல்லை என்பதை மட்டும் சொல்லச் சொன்னேன். நான் எப்போது திரும்ப வருவேன் என்று அவருக்குத் தெரியாது என்பதையும் சொல்லச் சொன்னேன். அம்மா என் மீது பெரு வருத்தம் கொண்டார். எனது வெற்றி என் தலைக்கு ஏறிவிட்டதாகவும், அதனால்தான் கே.வி. போன்ற ஒருவரையே நான் அவமரியாதையாக நடத்துவதாகவும் எண்ணினார்.
நான் படங்களை எடுப்பதை நிறுத்திவிட்டதாகச் சொன்னது பொய் என்பதை கே.வி. நிச்சயமாகத் தெரிந்துகொண்டிருப்பார். ஏனெனில், நான் பல்வேறு இயக்குநர்களின் படங்களைத் தயாரித்துக்கொண்டுதான் இருந்தேன். அவை எதுவும் அவரது படங்களின் தரத்துடன் ஒப்பிடவே முடியாதவை. நான் வீட்டில் இல்லையென்று அம்மாவிடம் சொல்லச் சொன்னதும் பொய் என்று அவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து சொல்லப்பட்டுவரும் தேய்ந்துபோன பொய் அது.
கே.வியின் திரை வாழ்வில் வந்த மோசமான காலகட்டம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாதது. அவர்கள் எத்தகைய சாதனையாளர்களாக இருந்தாலும் நானோ அல்லது யாரோவாக இருந்தாலும் அதை அனுபவிக்கவே வேண்டும். யார் முதலில் யார் அடுத்து என்பது மட்டும்தான் வித்தியாசம்.
அவரது கதையை நான் கேட்க விரும்பாததற்கோ அவரைச் சந்திக்காமல் இருந்ததற்கோ காரணம், அவரிடம் எனக்குள்ள மரியாதை காரணமாக எதையும் மறுக்க முடியாது என்பதுதான். மற்றவர்களிடம் என்னால் அதைச் செய்ய முடியும். அத்துடன் சினிமாக்கள் தொடர்பான என்னுடைய செயல்பாடுகள் கே.வியின் திரைப்படங்களில் காணப்படும் புனிதம் அல்லது தெய்வீகத்தன்மைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவை. நான் கேவலமான படங்களை எடுத்திருக்கலாம். ஆனால், அவருடைய பாணிப் படங்கள் தொடர்பாக எனக்கு ரசனை இல்லை.
ஆன்மாவை படைப்பில் நிரப்பும் கலைஞன்
நான் தயாரிக்கும் திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்களை நான் தேர்ந்தெடுக்கும் மனநிலை மிகவும் தனிப்பட்டது மற்றும் திரைப்படங்கள் எடுப்பது தொடர்பான என்னுடைய குறிப்பிட்ட அணுகுமுறையோடு தொடர்புடைய ஒன்று. கே.வியின் தீவிரம் என்னிடம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் ஒரு பக்தனின் ஆத்மார்த்தத்துடன் தனது ஆன்மாவைக் கொடுத்து நம்பவே இயலாத பொறுப்புடன் தனது படங்களை எடுப்பவர். என்னால் ஒருபோதும் தாங்கவே முடியாத சுமை அது.
பின்னர் ஒருமுறை நான் இசையமைப்பாளர் மணி ஷர்மாவைச் சந்தித்தபோது, அவர் கே.வி. படத்துக்காக இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மிகுந்த பெருமிதத்துடனும் கண்களில் மரியாதையுடனும் கூறினார். அவர் கண்களில் பார்த்த அந்த உணர்வு எனக்கு மிகவும் பரிச்சயமானது. ‘சங்கராபரணம்’ வெளியானபோது, பலரது கண்களிலும் பார்த்தது.
நான் எப்போதாவது அந்த மாதிரியான மரியாதையை மற்றவர்களின் பார்வையில் பெறுவேனா என்பது இரண்டாம் பட்சமானது. ஆனால், கே.வி. பெற்றது போன்ற மரியாதையையோ அவர் செய்த சாதனையையோ சாதித்ததில்லை என்று தெரியும். அத்துடன் அவரது வாழ்க்கையில் மிகுந்த மரியாதையுடன் அவமரியாதை செய்தவனாக ஒரு அடிக்குறிப்பாக மிஞ்சுவேன் என்பதும் எனக்குத் தெரியும்.

- நன்றி: ராம் கோபால் வர்மா வலைப்பூ
தமிழில் ஷங்கர் படங்கள் உதவி:ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT