Published : 26 Sep 2013 06:17 PM
Last Updated : 26 Sep 2013 06:17 PM
'தி குட் ரோடு', 'தி லஞ்ச் பாக்ஸ்' இரு படக்குழுவினரும் தங்களது பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதிற்கு 'தி குட் ரோடு' படம் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதற்கு இந்தி திரையுலகில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் ரித்திஷ் பத்ரா இயக்கிய 'தி லஞ்ச் பாக்ஸ்' படம் தான் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதிர்ச்சியாக ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கும் குழுவோ, 'தி குட் ரோடு' படத்தினை பரிந்துரை செய்தது.
இதனால் அனுராக் கஷ்யாப் கடும் கோபத்துடன் “'தி குட் ரோடு' படம் இன்னும் பார்க்கவில்லை. ஆகையால் படத்தினைப் பற்றி எதுவும் பேச முடியாது. ஆஸ்கர் தேர்வுக் குழுவில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாது. 'தி லஞ்ச் பாக்ஸ்' போன்ற படங்களை எல்லைகளை கடந்தும் மக்கள் ரசிப்பார்கள் என்பதினை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை” என்று ட்விட்டர் தளத்தில் கூறினார்.
அனுராக் கஷ்யாப்பின் இந்த ட்விட்டிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அனுராக் தனது ட்விட்டர் தளத்திலிருந்து விடைபெற்றார். அதனைத் தொடர்ந்து இரு படக்குழுவினருக்கும் பல்வேறு தகவல்களை தங்களது ட்விட்டர் தளங்களில் தெரிவித்து வந்தார்கள்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனுராக் கஷ்யாப், 'தி குட் ரோடு' இயக்குனர் ஜியான் கொர்யாவினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இது குறித்து இயக்குனர் ஜியான் கொர்யா “ஆம். அனுராக் என்னுடன் பேசினார். அவர்களுக்கு ஏமாற்றமும் எங்களுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷமும் கிடைத்தது. செவ்வாய்கிழமை 'தி லஞ்ச் பாக்ஸ்' இயக்குனர் ரித்திஷ் பத்ராவிடம் பேசினேன்.
உங்களிடம் பேச வேண்டும் என்று அனுராக்கிற்கு மெசேஜ் அனுப்பினேன். அவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அனைவருமே இணைந்து 'தி குட் ரோடு' படத்திற்கு ஆஸ்கர் விருதினை பெற்றுத் தரும் முனைப்பில் இருக்கிறோம்.
ஆஸ்கர் விருதிற்கான பல வழிமுறைகளை அனுராக் என்னிடம் பகிர்ந்து கொண்டார். மிகவும் சந்தோஷமாக இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
'தி குட் ரோடு' படத்தின் மூலம் மீண்டும் ஆஸ்கர் கனவு நனவாகுமா என்பது தான் இந்திய சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT