Last Updated : 02 Jun, 2017 10:01 AM

 

Published : 02 Jun 2017 10:01 AM
Last Updated : 02 Jun 2017 10:01 AM

‘நீ நெடுமுடி அல்ல, கொடுமுடி’ - நெடுமுடி வேணு பிரத்யேகப் பேட்டி

நெடுமுடி வேணு, மலையாளத்தின் மூத்த நடிகர். நாடகக் கலைஞர், பத்திரிகையாளராகவும் இருந்தவர். திருடன், போலீஸ், ரவுடி, பெண் பித்தர், தந்தை, கதாநாயகன், வில்லன் என மலையாள சினிமாவில் அதிகம் வித்தியாசமான கதாபத்திரங்களைச் செய்தவர். பரதன் இயக்கத்தில் வந்த ‘காற்றத்த கிளிகூடு’ உள்பட சில படங்களில் கதாசிரியராகப் பணியாற்றியுள்ளார். ‘பூரம்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். அவரது 70-வது பிறந்தநாளையொட்டி திருச்சூரில் அவரைச் சந்தித்து உரையாடிதிலிருந்து…

70களில் கோடம்பாக்கத்திலிருந்து உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள்...

கோலம் வரையாமல் சினிமா இல்லாமல் தமிழ்நாட்டில் வாழ்கையே இல்லை என்று இயக்குநர் ஜான் ஆப்ரஹாம் சொல்வது மாதிரி தமிழ்நாட்டில் சினிமா கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அது எங்களையும் பாதித்தது.மலையாள சினிமாவைவிட நாங்கள் தமிழ் சினிமாவைப் பார்த்துதான் வளர்ந்தோம். சிவாஜி கணேசன்,எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன் ஆகியோர்களின் சினிமாக்களை தேடிப்பார்ப்போம். அப்போது சினிமா என்றால் கோடம்பாக்கம்தான். ஆனால் கோடம்பாக்கம் வந்த பிறகுநாங்கள் பார்த்த வண்ணமயமான சினிமாக்களின் பின்னாலுள்ள இருண்ட பக்கத்தைக் கண்டோம்.ஸ்டுடியோக்களில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொல்கிறேன். அது ரொம்ப சங்கடமானது.

என்ன மாதிரியான சங்கடங்கள்?

முன்பு சினிமா ஸ்டுடியோக்களில் புற உலகம் காணமல் ஒரு தலைமுறை ஆள்கள் இரண்டு மூன்று ஷிப்டுகளிலே வாழ்ந்தார்கள். அப்படி வேலைபார்த்தால்தான் அவர்களுக்குக் கொஞ்சமாவது கூலி கிடைக்கும். அதற்காக மனித உணர்வுகளை மறந்து இயந்திரம் போல் பணியாற்றினார்கள். நடிகைகளின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

நடிகைகள் என்ன மாதிரியான சங்கடங்களை எதிர்கொண்டார்கள்?

ஊரில் வாழ வழியற்றவர்கள் வந்து சேரும் இடமாக கோடம்பாக்கம் இருந்தது. அப்படிப் பெண்கள் பலரும் கோடம்பாக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். சினிமாவில் வண்ணமயமாக இருக்கும் அம்மாதிரியான நடிகைகளின் வீடுகள் ஒரு பத்தி அறையாகத்தான் இருக்கும். அவர்கள் அம்மா, மாமா, மேனேஜர் சொல்வதைக் கேட்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்றைக்கு மும்பை எனப் பல பகுதிகளில் இருந்து நடிகைகள் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது. பத்திரிகையாளனாக இருந்தபோது இதையெல்லாம் எழுதியிருக்கிறேன்.

இன்றைக்கு அடுத்த தலைமுறை வந்துவிட்டது. இப்போது கோடம்பாக்கம் எப்படி இருக்கிறது?

சினிமா ஸ்டுடியோக்களிலிருந்து வெளியே வந்துவிட்டது. ஸ்டுடியோக்களும் போய்விட்டன. ஜூனியர்ஆர்டிஸ்ட் ஏஜண்டுகள், கட்வுட் வரைபவர்கள், மிருகங்களை வாடகைக்குக் கொடுப்பவர்எல்லாரும் போய்விட்டார்கள். புலியை சினிமாவுக்கு வாடகைக்குத் தரும் ஒருவரை பேட்டிஎடுத்திருக்கிறேன். இன்றைக்குக் கோடம்பக்கத்தின் சங்கடங்களும் விலகியிருக்கின்றன. அதேபோல்கோடம்பக்கம்தான் சினிமா என்ற முக்கியத்துவமும் குறைந்திருக்கிறது.

சென்னை வாழ்க்கை எப்படி இருந்தது?

நானும் மம்மூட்டியும் சேர்ந்து தங்கியிருந்தபோது ஒரு சைக்கிள் ரிக்சா எடுத்துக்கொண்டு சும்மாசென்னையைச் சுற்றுவோம். விரும்பிய இடத்தில் சாப்பிடுவோம். பணமும் அதிகம் ஆகாது. மோகன்லாலும் கூட இதை விரும்புவதுண்டு. இங்கு கிடைத்த சுதந்திரம் அப்போது எங்களுக்குக்கேரளத்தில் கிடைக்கவில்லை.

மலையாளாத்தின் முதல் தலைமுறை சூப்பர் ஸ்டார்களின் அந்திமக் காலத்தில் நீங்கள் நடிக்க வந்தீர்கள்.அப்போதுதான் மோகன்லாலும் மம்மூட்டியும் வருகிறார்கள். அடுத்த சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருந்ததா?

நட்சத்திர அந்தஸ்து என்பதே என் கனவில் இருந்ததில்லை. ஏனெனில் நான் சினிமாவில் நடிக்க வந்ததேதற்செயல்தான். அது நடக்கவில்லை என்றால் நாடகக்காரனாகவே இருந்திருப்பேன். ‘நான் ஒரு நடிகர்’இப்போதும் அது மட்டும்தான் என் கனவிலும் நனவிலும் இருக்கிறது. மோகன்லாலும் மம்மூட்டியும் கூடதாங்கள் ஒரு சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று எண்ணியிருக்க வாய்ப்பில்லை. சினிமாவுக்கு அடுத்ததலைமுறைக்கான இரு நாயகர்கள் தேவைப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரே வசனமுள்ள ‘தம்பு’, வில்லன் கதாபாத்திரமாக ‘தகரா’ சாதுவான கதாநாயகனாக ‘அப்புண்ணி’,மீண்டும் ‘அக்கரை’யில் ஒரு நெகடிவ் என்.ஆர்.ஐ. பாத்திரம். தொடர்ந்து வித்தியாசமானகதாபாத்திரங்களைத் தேடிக் கொண்டிருந்தீர்களா?

காவாலம் நாராயணப்பணிக்கரின் ‘அவனவண்ட கடம்பா’ நாடகத்தை ஜி.அரவிந்தன் இயக்கினார். அதில்நாயகன் நான்தான். பிறகு அவர் சினிமா எடுக்கும்போது என்னை நடிக்க அழைத்தார். அதேபோல்பரதனுக்கும் நாடகங்கள் வழியாக என்னைத் தெரியும். அவரது படங்களில் நடிக்க அழைத்தார். இப்படிக்கதாபாத்திரங்கள்தான் என்னைத் தேடி வந்தன. பிடித்திருந்ததால்தான் தயக்கமே இல்லாமல் அவற்றைஅரவணைத்துக்கொண்டேன்.

குணச்சித்திர நடிகர்களுக்குச் சில பாதக அம்சங்கள் உண்டு. அப்பா, மாமா, போலீஸ் அதிகாரி, பக்கத்துவீட்டுக்காரர் போன்ற கதாபாத்திரங்களில் பொருந்தி, ஆயுசுக்கும் அதையே செய்ய வேண்டிய சூழல்வந்துவிடும். இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பொதுவாக நடிப்பு என்பதே ஒரே மாதிரியாக நடித்துக்கொண்டிருப்பது அல்ல. வெவ்வேறு விதமானகதாபாத்திரங்களைச் செய்வதில்தான் நடிப்பின் ஆற்றல் இருக்கிறது. மலையாளாத்தில் சி.பி.ஐ.அதிகாரியாக நடித்ததே இல்லை. அதனால் கமல் ஹாசன் நடித்த ‘இந்தியன்’ படத்தில் விருப்பத்துடன்நடித்தேன். ஒரே மாதிரியான கதாபாத்திர வாய்ப்புகள் வரும்போது அதைத் தவிர்க்கவும்செய்திருக்கிறேன்.

அப்பா/மகன், போலீஸ்/திருடன் என எந்த வேடத்தையும் மோகன்லால் இருந்த இடத்திலிருந்தேநடிக்கக்கூடியவர். ஆனால் நீங்கள் அப்பாவிலிருந்து மகனுக்கு மாறும்போது ஒரு துள்ளல் இருக்கிறதே?

நடிகன் என்பவன் ஒரு ஓவியன் உருவத்தை வரைவது மாதிரி முதலில் கதாபாத்திரத்தை மனதில்வரைந்துகொள்ள வேண்டும். போலீஸ் பேசுவது மாதிரி திருடன் பேச மாட்டான். இருவருக்கும்கையசைப்பு, நடை, பேச்சு, முகபாவனை எல்லாமே வேறுபடும்.பயணங்களில் வேடிக்கை பார்ப்பதன் வழியாகப் பலதரப்பட்ட மனிதர்களின் பேச்சு, நடவடிக்கைகளை மனதில் சேமித்துவைத்திருக்கிறேன்.அவற்றிலிருந்து அந்தப் பாத்திரத்தின் நடை, கையசைப்பை உருவாக்கிக்கொள்வேன். இப்படித்தான் ஒருபாத்திரத்திலிருந்து மற்றொன்றுக்குள் இறங்குகிறேன். இவையெல்லாம் ஒரு நடிகனின் கடமை.படப்பிடிப்புத் தளத்திலே கதாபாத்திரத்துக்கெனத் தனி ஸ்டைலையும் உருவாக்கிக்கொள்வேன்.

சிபி மலயிலின் ‘தசரத’த்தில் நீங்கள் மோகன்லால் நண்பனாக நடித்திருந்தீர்கள். ஆனால் கரமனைஜானர்த்தனன் நாயர் நடித்திருக்கும் மோகன்லாலின் கார்டியன் கதாபாத்திரமும் உங்களுக்கு ஏற்றதுதான்.இந்த இரு வாய்ப்புகளை உங்கள் முன் வைத்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

ஒரு நடிகன் நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரத்தைத்தான் தேர்ந்தெடுப்பான். கார்டியன் கதாபாத்திரம்கிட்டதட்ட ஒரு பழைய மூத்தவர் கதாபாத்திரம்தான். நான் மோகன்லால் நண்பனாக நடிப்பதைத்தான்விரும்புவேன். அது நின்ற நிலையில் செய்ய முடியாத கதாபாத்திரம்.கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.வேலைகள் வாங்கும். எனக்கு இதுபோன்ற துள்ளல் மிக்க கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் விருப்பம்.

‘அப்புண்ணி’ போன்ற வெற்றிப் படங்கள் மூலம் ஹீரோ ஆன பிறகும் வில்லன் கதாபாத்திரத்தைத்தேர்ந்தெடுத்தது ஏன்?

பொதுவாக நம்மைக் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாக்கப்படும். இவர் நல்லவர், இவர் நல்ல அப்பா, இவர்நல்ல மாமா என்று. அதாவது நம்மை அவர்கள் உருவாக்கிவைத்திருக்கும் ஒரு பெட்டிக்குள் அடைத்துவிடுவார்கள். அது சவுகர்யமாகத்தான் இருக்கும். ஆனால் நல்லதல்ல. ஒரு நல்ல நடிகன் அதைஉடைக்க வேண்டும். அதனால்தான் ஒரு பாத்திரத்துக்கு நேர் எதிரான பாத்திரத்திலும் நடிக்கவிரும்புகிறேன்.

‘ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’யில் உங்கள் மேக்-அப் துருத்தலாக இருந்தது. இன்றைக்கு நடிப்புக்கு மேக்-அப் மட்டுமே போதும் என்ற நினைப்பில் நடிகர்கள் சிலர் இருக்கிறார்கள். நடிப்பில் மேக்-அப்க்கு உள்ள பங்கு என்ன?

மேக்-அப் மட்டுமல்ல. பேச்சு, மேக்-அப், கைச்செய்கை, மன நடிப்பு இந்த நான்கும் ஒருசேரக் கலந்துதான்நடிப்பு. மன நடிப்பு என்றால் நடிக்கும் அந்தச் சமயத்தில் மனமும் உடலுமாக நடிக்க வேண்டும். மேக்-அப்மட்டுமல்ல, இவற்றில் ஏதாவது ஒன்று துருத்தித் தெரிந்தாலும் நடிப்பு முழுமையாகாது. இவற்றில் இயக்குநர்களுக்கும் பங்குண்டு.

சினிமா, நாடகம் இரண்டிலும் இயங்கியுள்ளீர்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு?

நாடகத் துறையில் பேர்பெற்ற பலரும் சினிமாவில் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஏனெனில் சினிமாவையும் அவர்கள் நாடகம் போல் கருதினார்கள். கடைசி வரிசையில் இருப்பவர்களும் காணக்கூடிய வகையில் நாடகத்தில் முழு உடலுடன் நடிக்க வேண்டும். எல்லாவற்றிலும் இந்தமிகைத்தன்மை இருக்கும். ஆனால் சினிமா பூடகமானது. சிறிய அசைவும் பெரிய அளவில் சினிமாவில்பிரதிபலிக்கும். இந்த வேறுபாட்டை நடிகர்கள் உணர வேண்டும்.

தமிழில் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை?

‘நீங்கள் தமிழுக்கு நடிக்க வாங்க. நானே மேனஜராக இருக்கேன்’ என்று கமல் ஹாசன் ஒருமுறை வேடிகையாகச் சொன்னார். அவர் என் மீது மரியாதை உள்ளவர். ஷங்கருக்கும் ஏ.எல்.விஜய்க்கும் அதேபோல மரியாதைஉண்டு. அவர்களது சினிமாக்களில் நடித்தேன். அதுபோல ஒரு குடும்பச் சூழல் உருவாகும்போதுதொடர்ந்து நடிப்பேன். பிறகு தமிழில் இருந்து ஒரு அப்பா, மாமா இதுமாதிரியான வாய்ப்புகள்தான் அதிகம்வருகின்றன. வித்தியாசமான வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். ராஜீவ்மேனன் இயக்கவுள்ள ஒருபடத்தில் மிருதங்க வித்வானாக நடிக்கும் திட்டமிருக்கிறது.

பரவலான கவனம்பெற்ற நடிகரான நீங்கள் இயக்கிய ‘பூரம்’ சினிமா பரவலான கவனம் பெறவில்லைய?

நெடுமுடி வேணு படம் எடுக்கிறான் என்றதும் பார்வையாளர்கள் எதிர்பார்த்தது ஒரு பொழுதுபோக்குப்படத்தைத்தான். ஆனால் பூரம் அந்த மாதிரியான படம் இல்லை. ஒரு குறிப்பிட்ட தீவிரப் பார்வையாளர்கள்அதை வரவேற்றார்கள். ஆனால் அந்தப் படத்தில் பலவீனங்களும் உண்டு.

சினிமாக் கதாசிரியராக ‘காற்றத்த கிளி கூடு’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள்.இன்றைக்கு சினிமாக் கதைப் போக்கு எப்படி இருக்கிறது?

முன்பு சினிமாவுக்கு இலக்கியத்துடன் உறவு இருந்தது. அதனால் சினிமாவுக்குள் ஒரு வாழ்க்கைஇருந்தது. இன்றைய சினிமாவுக்கு இலக்கியத்துடன் உறவும் இல்லை; அதனால் அதில் வாழ்க்கையும்இல்லாமல்போய்விட்டது. இன்றைக்குள்ள புதிய இயக்குநர்கள் பலரும் சினிமா உருவாக்குவதுவாழ்க்கையில் இருந்தல்ல; இன்னொரு சினிமாவிலிருந்துதான். இது இன்றைய சினிமாவின்முக்கியமான பிரச்சினை.

மூன்று தலைமுறை இயக்குநர்கள் உடன் பணியாற்றியிருக்கிறீர்கள். இப்போதுள்ளவர்கள் எப்படிஇருக்கிறார்கள்?

சினிமாவுக்கு சொந்தமான மொழியுண்டு. அந்த மொழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்முன்னேறிவருகிறார்கள். ஆனால் கூடுதல் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கிறார்கள். ஸ்பெஷல்எஃபெக்ட் செய்கிறார்கள். அது உண்மையல்ல என்று தோன்றிவிட்டால், அந்த ஸ்பெஷல் எஃபெக்ட்எதற்கு? இந்த இடத்தில் பாகுபலி போன்ற படங்களை எதிர்க்க வேண்டியிருக்கிறது. இந்தத்தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலகட்டத்தில் வெளிவந்த டென்காமமெண்ட்ஸ், பென்ஹர் போன்றபடங்களில் உண்மைத்தன்மையை இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியால் நெருங்க முடிந்திருக்கிறதா?

மலையாள சினிமாவின் முகம் இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிறது இல்லையா?

கோடம்பாக்கம் மாறியதுபோலவே மலையாள சினிமாவும் மாறியிருக்கிறது. ஆனால் முன்பு தமிழ் சினிமாவின் சாதகமான அம்சங்களை மலையாள சினிமா எடுத்துக்கொண்டு மலையாள சினிமா தனித்தன்மையுடன் இருந்தது. இன்றைக்கு தமிழ் சினிமாவின் பாதகமான அம்சங்களை எடுத்துக்கொண்டுவிட்டது. இது முக்கியமான மாற்றம்.

உங்களுடன் நடிக்கும் கதாபாத்திரத்தை எப்படி அணுகுகிறீர்கள்?

பொதுவாக ஒரு காட்சியின் இரு கதாபாத்திரங்களும் டென்னிஸ் கோர்ட்டின் இரு பகுதிகளில்நிற்பவர்கள். இரு பக்கமும் பவுன்சிங் உண்டாக வேண்டும். நன்றாக நடிப்பது மற்றொரு கதாபாத்திரத்தைவீழ்த்துவதற்காக அல்ல; சினிமாவைப் பலப்படுத்துவதற்காகத்தான் என்ற புரிதல் வேண்டும். பரஸ்பரமரியாதை வேண்டும். புதியவர்களிடம் மூத்த நடிகர் என்ற பதற்றம் வரும். அவர்களிடம் பழகி தயக்கத்தைகளைவது எனது முதல் பணியாக இருக்கும்.

சிவாஜி கணேசனைக் கொண்டாடுபவர் நீங்கள்...

சினிமா நடிகர்களைக் காட்டிலும் கதகளிக் கலைஞர்களைக் கொண்டாடக்கூடிய ஆள் நான். அந்தவரிசையில் சிவாஜி கணேசனுக்கும் இடமுண்டு. சிவாஜி கணேசன் உரக்கப் பேசுவதை ‘ஓவர்-ஆக்டிங்’என்று சொல்வார்கள். ஆனால் அது கலாச்சாரத்தின் வெளிப்பாடு எனலாம். அவர் நடிக்கும்போது முகத்தில்நொடிப் பொழுதில் மின்னி மறையும் உணர்ச்சிகளைக் கொண்டுவந்துவிடுவார் அது அவ்வளவுஎளிதானதல்ல.

உங்களுக்கும் அவருக்குமான உறவு குறித்து...

பத்திரிகையாளனாக அவரை பேட்டி எடுத்திருக்கிறேன். நடிகனாக பிறகு விமானத்தில் அவரைச் சந்தித்துஅறிமுகப்படுத்திக்கொண்டேன். அதற்கு ‘நீ நெடிமுடி வேணு அல்ல, கொடிமுடி வேணு. உன் படங்களைபார்த்திருக்கிறேன்’ என்றார். ‘யாத்ர மொழி’க்கு முன்பு மோகன்லாலின் சினிமாவுக்காக சிவாஜியைஅணுகியபோது, அவர் கேட்டாரம், ‘இந்தப் படத்தில் நெடிமுடி வேணு உண்டா?’ என்று. பிறகு யாத்ரமொழியில் இணைந்து நடித்தோம். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் எனக்காக வந்து ஃபில்ஃபேர்விருது வழங்கிக் கவுரவித்தார். விருதைப் பெற்றுக்கொண்டபோது, ‘ஏகலைவனாக எனது துரோணாச்சாரியிடம் இந்த விருதைப் பெற்றுக்கொள்கிறேன்’ என்றேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x