Published : 28 Apr 2017 10:06 AM
Last Updated : 28 Apr 2017 10:06 AM
‘பாகுபலி' படத்தில் அப்பா, மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து, ஐந்து வருடங்கள் இப்படத்துக்காக ஒதுக்கிவிட்ட பிரபாஸ், வேறு படம் எதிலும் நடிக்கவில்லை. 'பாகுபலி 2' இன்று வெளியாகியுள்ள நிலையில் பிரபாஸ் நமக்களித்த பேட்டியிலிருந்து...
இந்தப் படத்துக்குள் எப்படி வந்தீர்கள்; படம் வெற்றிபெறும் என்று நம்பினீர்களா?
முதலில் ராஜமெளலி கதைக் களத்தைச் சொன்னார். அந்தக் கதாபாத்திரங்களை என் நினைவிலிருந்து எடுக்க முடியவில்லை. அவர் கதையை மெருகேற்றும்போது. படமாக இன்னும் பிரம்மாண்டமானது. ஒரு கட்டத்தில், படத்தின் பொருட்செலவு அதிகமாகும் எனத் தயாரிப்பாளர்களையே எச்சரித்தார். ஆனால் அவர்கள் துணிந்து இந்தப் படத்தை எடுத்தார்கள்.
முதல் பாகம் எடுக்கும்போது கண்டிப்பாக ஒரு வெற்றிப் படத்தைத் தர வேண்டும் என்ற அழுத்தம் அனைவருக்கும் அதிகமாக இருந்தது. படம் ஓடுமா, ஓடாதா என அனைவரும் யோசித்து யோசித்துப் பித்துப் பிடிக்காத குறைதான். முதல் பாகம் வெற்றியடையவில்லை என்றால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருக்காது. கடந்த 2015 –ல் படப்பிடிப்பின் கடைசி நாளில், மீண்டும் பாகுபலியில் நடிக்கும் வாய்ப்பை ரசிகர்கள் தருவார்களா என யோசித்தேன். ஆனால் படம் வெளியானதும் அனைத்தும் மாறினது. ரசிகர்கள் எங்களுக்குத் தந்த அன்பும் மரியாதையும் நம்ப முடியாத அளவு இருந்தன.
பெரும் பொருட்செலவுதான் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடக் காரணமாக அமைந்ததா?
அது ஓரளவு உண்மைதான். இந்தக் கதையைப் பொருத்தவரை ஒரு பாகம் மட்டும்தான் என்றால் படம் வெற்றி பெற்றிருந்தால் கூட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமே ஏற்பட்டிருக்கும். ஏனென்றால், படத்தின் பொருட்செலவை கணக்கிடும் போது பிரம்மாண்டமான வெற்றி தேவைப்பட்டது. முதல் பாகம் வெற்றியடைந்திருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபமில்லை. இதிலிருந்தே படத்தின் பொருட்செலவு என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இதைத் தவிர மற்றொரு முக்கிய காரணம் படத்தின் நீளம். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார், ஏன் பாகுபலியைக் காப்பாற்ற சிவகாமி தன் உயிரை விட வேண்டும்?, ஏன் மகிழ்மதியில் தேவசேனா சிறைப்பட்டிருக்க வேண்டும், பல்லாளத்தேவனிடம் விசுவாசமாக இருந்தும் ஏன் கட்டப்பா தேவசேனாவைக் காப்பாற்ற நினைக்க வேண்டும் எனப் பல கேள்விகள் முதல் பாகத்தில் இருந்தன. ஆனால் படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது ஆச்சரியமளிக்கிறது என்று முன்னணி இயக்குநர் ஒருவர் கூறினார். ஆனால் ரசிகர்களைப்போலவே இந்த கேள்விகளைப் பற்றியெல்லாம் நானும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு முழுக் கதையும் தெரியும். முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, அதை எங்கு முடிக்கலாம் என 10-15 நாட்கள் ராஜமெளலி யோசித்து முடிவெடுத்தார்.
ஒரு படத்துக்காக 5 வருடங்கள் வேலை செய்தது எப்படியிருந்தது?
முதலில் போர்க் காட்சிகளை 80 நாட்களில் எடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், எடுத்து முடிக்க 120 நாட்கள் ஆனது. இரண்டு பாகங்களுக்கும் போர்க் காட்சிகளுக்காக மட்டுமே 250 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தேன். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உங்களைச் சோர்வாக்கும் ஒரு விஷயம் அது. ஆனால் ஒவ்வொரு நாளும் எங்களை நாங்களே ஊக்குவித்துக்கொண்டோம். பிரம்மாண்டமான காட்சியமைப்பு, அரங்க அமைப்பு என ராஜமெளலியும், குழுவும் அவ்வப்போது எங்களை ஆச்சரியப்படுத்தி உற்சாகப்படுத்தினார்கள். `பாகுபலி 2'ம் பாகத்தின் இடைவேளை காட்சியின் படப்பிடிப்பு 7 மாதங்களுக்கு முன்னால் நடந்தது. அதை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது.
ராஜமெளலியோடு இணைந்து சினிமா குறித்தும், வாழ்க்கை குறித்தும் நிறைய பேசுவேன். எங்களது பயணத்தில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. ராஜமெளலியின் கனவு பெரியது. சினிமாவின் மீதான அவரது ஈடுபாடு அளவற்றது என்பது புரிந்தது. அவர் மட்டும் இல்லையென்றால் இப்படி ஒரு படத்துக்காக இவ்வளவு காலத்தைச் செலவிட்டிருக்க மாட்டேன்
பாகுபலி 2 வெளியீட்டுக்குப் பின்னர் உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
'பாகுபலி'க்குப் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. இன்னும் அதிலிருந்தே நான் மீளவில்லை. சில படங்கள் நடிக்கவுள்ளேன். அதுகுறித்த அறிவிப்பு வரும். கண்டிப்பாக இதற்குப் பிறகு இப்படி ஒரு படம் எடுக்கவேண்டும் என்றால் எங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்துவிடும். கண்டிப்பாக ராஜமெளலி அடுத்த 6 மாதங்களுக்கு இன்னொரு படத்தைப் பற்றி நினைக்க மாட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT