Published : 12 Apr 2019 01:17 PM
Last Updated : 12 Apr 2019 01:17 PM
சலாம் பாபு… சலாம் பாபு... என்னைப் பாருங்க! தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க! ஏ சலாம் பாபு... சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க...
படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் அது வெளிப்படும். மெல்லிய நகைச்சுவை இழையோட அவர் தெலுங்கில் எழுதிய ‘அத்தகாரு கதலு’ என்ற கதைகள் அவருக்கு ஆந்திரப்பிரதேசத்தின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தன.
இக்கதைகள் தமிழில் பிரபல வார இதழில் ‘மாமியார் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்து, அவருக்கு ஒரு வாசகர் கூட்டத்தைத் தமிழிலும் உருவாக்கித் தந்தது. மாமியார்-மருமகள் சண்டையில் வருகிற நகைச்சுவைச் சம்பவங்கள் உண்மையில் பானுமதியின் வாழ்க்கையில் நிகழ்ந்தவைதாம்.
மறுபடி மாமியார் கதைகள் எழுதும் உத்தேசம் உண்டா? என்று அவரிடம் கேட்டேன். “எழுதினால் போச்சு. ஒரு சம்பவம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அவர் விவரித்தபோது, ஒரு மாமியார் கதை கிடைத்துவிட்டது. அது பத்திரிகையில் பிரசுரம் கண்டது. அதைத் தவிர தமாஷாக அவர் விவரித்த சம்பவங்கள் அவ்வப்போது எழுத்துவடிவம் எடுத்து பிரசுரம் ஆனதும் உண்டு.
அப்போதெல்லாம் அவர் ஒரு குழந்தைபோல் குதூகலிப்பார்.” என்றார். ‘சகலகலாவல்லி’ என்ற பெயருக்கு ஏற்ப அவர் பல துறைகளில் தனது முத்திரையைப் பதித்தாலும் எழுதுவதுதான் அவருக்குப் பிடித்தமானது. சிறந்த எழுத்தாளருக்கான ஆந்திரப் பிரதேசத்தின் சாகித்திய அகாடமி விருதும் அவருக்குக் கிடைத்தது.
சிறப்பான நடிப்புக்கு உதவி
“அப்பாவுக்கு என் எழுத்துத் திறமைமீது அபார நம்பிக்கை. நான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் செட்டில் இடைவேளைகளில் என் மனத்தில் தோன்றுவதையெல்லாம் எழுதுவேன். ஸ்டுடியோக்களில் நான் சந்திக்கும் வேடிக்கையான மனிதர்கள்பற்றி பேனா சித்திரங்கள் பலவற்றைத் தீட்டியிருக்கிறேன்.
இதை கவிராஜூ என்ற எழுத்தாளர் பார்த்துவிட்டுப் பாராட்டினார். நான் உனக்குக் கதையெல்லாம் எழுதச் சொல்லித்தருகிறேன். உனக்கு காமெடிக் கதை பிடிக்குமா? சோகக்கதை பிடிக்குமா? என்று கேட்டார். ‘காமெடிதான் பாப்பாவுக்கு இஷ்டம்’ என்றார் அப்பா சிரித்தபடி.
கவிராஜூதான் எனக்குக் கதை எழுதக் கற்றுக்கொடுத்தார். தன் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவைச் சம்பவங்களை விவரிப்பார். நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். கவிராஜூ தந்த உற்சாகத்தில் நான் எழுதிய முதல்கதை ‘மரச்சொம்பு’. அவர் அதைத் திருத்திக் கொடுத்தார். என் கற்பனைத்திறனையும் பாராட்டினார்.
எனக்குத் தரப்படும் ஸ்கிரிப்ட் சப்பென்று இருந்தால் எனக்குப் பிடிக்காது. அதில் ஏதாவது நகைச்சுவையாக வரும்படி செய்து பேசிவிடுவேன்.
நான் பேசும் வசனங்களை இப்படி நானே செய்துகொள்ளும் வார்த்தை அலங்காரங்களைப் பல இயக்குநர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
வாழ்க்கையில் நான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் ஏனோ தெரியவில்லை சீரியஸாகத்தான் இருக்கிறார்கள். எப்பவும் முகத்தையும் சீரியஸாக வைத்துக்கொள்வார்கள். எப்போது பார்த்தாலும் என்னமோ கப்பல் கவிழ்ந்து விட்டதுபோல் படுமோசமாகக் காட்சியளிப்பவர்களும் உண்டு. என் பேச்சாலும் எழுத்தாலும் இது போன்றவர்களைச் சீண்டி சிரிக்கவைப்பது எனக்குப் பிடிக்கும்.
ஒருநாள் எனது கார் ஓட்டுநர் கோவிந்து தலையைச் சொறிந்துகொண்டு வந்து நின்றான். “சொல்லப்பா என்ன விஷயம்” என்று கேட்டேன். ‘உங்களை நன்றாகத் தெரியும்னு சொல்லிகிட்டு காலைலேர்ந்து ஒருவர் வந்து வெயிட் பண்றார். ஏதோ வேணுமாம்’ என்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் கண்கலங்கி தனது கஷ்டங்களை விவரித்து பணஉதவி கேட்டார்.
நான் மறுத்துவிட்டேன். வந்தவர் விடாப்பிடியாக ‘அம்மா நீங்க நினைச்சா உதவி செய்யலாமே. நான் ரொம்ப ஏழை. உங்களைப் போன்றவர்கள் உதவினால்தான் உண்டு’ என்றார்.
எனக்கு முகம் சிவந்துவிட்டது. அதாவது கார், பங்களாவோடு இருப்பதால் எனக்குக் கஷ்டமில்லை என்று நினைச்சிட்டீங்க. இதப் பாருங்க நான் பெரிய மரம். பெரிய காத்து. நீங்க சின்ன மரம். சின்ன காத்து புரியுதா? என்றேன்.
நான் கூறியதைக் கேட்டு வந்தவரால் ஏதும் பேசமுடியவில்லை. ஒருவர் கஷ்டப்படுகிறார் என்பதை அவரது கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். வந்தவர் நானே வியக்கும் அளவுக்கு நடிகர் என்பதைக் கண்டுபிடித்தேன்.
இவ்வளவு நேரம் சிறப்பாக நடித்தவரை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாமே என்று அவர் கையில் கொஞ்சம் பணம் தந்து அனுப்பிவைத்தேன்” என்று பானுமதி கூறியபோது பல்லியைக் கண்டு தாம் பயந்து நடுங்குவதை ஒரு வேடிக்கைக் கதையாக அவர் எழுதியிருந்தது என் நினைவுக்கு வந்தது.
எம்.ஜி.ஆருடன் கத்திச் சண்டை
நான் ஆர்வத்துடன் ‘நீங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறீர்களா? ’ என்று உரையாடலைத் தொடர்ந்தேன். “அதற்குத் தேவையே இல்லை. எவ்வளவு சீரியஸான கதாபாத்திரம் ஆனாலும் என்னால் லைட்டாக நடிக்க முடியும். அதை அப்படியே நகைச்சுவையாகச் செய்துவிட முடியும். என் சுபாவமே அதுதான் சார்” என்றார்.
ஒருமுறை எம்.ஜி. ஆரிடம் ‘நான் வேண்டுமானால் கத்திச் சண்டை போடட்டுமா? ’ என்று கேட்டீர்களாமே என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“ஆமாம் எம்.ஜி.ஆர். போடும் கத்திச்சண்டையை எவ்வளவு நேரமானாலும் அலுப்பில்லாமல் பார்க்கலாம். அவ்வளவு சுறுசுறுப்பு. வீரம் அவர் முகத்தில் தாண்டவமாடும். அன்றைக்கும் அப்படித்தான் சண்டை நீண்டுகொண்டே போனது...
எனக்கு அவசரமான வேலை இருந்தது... மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்கள் நம்பியாரோடு சண்டை போட்டு என்னைக் காப்பாத்தறதுக்கு ரொம்ப நேரம் ஆகும்போல் தோணுகிறது... என்கிட்டே கத்தியைக் கொடுங்கள்.
எனக்குக் கத்திச் சண்டை தெரியும். கொஞ்ச நேரத்தில் வில்லனைத் தோற்கடித்துவிடுகிறேன் என்றேன். செட்டில் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். உட்பட” என்று நினைவுகூர்ந்த பானுமதி குழந்தையைப் போலச் சிரித்தார்.
ஒருமுறை பிரபலமான சோப்பு கம்பெனிக்காரர்கள் அவரை அணுகித் தங்கள் சோப்புக்கட்டியின் பிரதாபங்களை எடுத்துக்கூறி, அதன் விளம்பரத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். அவர்கள் கூறி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த பானுமதி அவர்களைப் பார்த்து, “இதோ பாருங்கள்.
என் ரசிகர்களை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். நான் உங்கள் சோப்பை வாங்குவதில்லை! நான் உங்கள் சோப்பைப் பயன்படுத்துவதில்லை! உங்கள் சோப்பு எனக்குப் பிடிக்காது! போய்வாருங்கள்” என்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளிவிட்டாராம்.
பானுமதிக்குப் சோப்புப் போட்டு விளம்பரத்தில் நடிக்க வைத்துவிடலாம் என்று நினைத்த கம்பெனிக்காரன் விட்டால்போதும் என்று ஓடியிருக்கிறான். பானுமதிக்கு கோபத்திலும் எத்தனை நகைச்சுவை!
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:-
thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT