Last Updated : 12 Nov, 2025 04:36 PM

 

Published : 12 Nov 2025 04:36 PM
Last Updated : 12 Nov 2025 04:36 PM

Spartacus: ரோமின் அடிவயிற்றில் தீ மூட்டியவன் | சினிமாவும் அரசியலும் 5

‘எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி’ என்று சொல்லப்பட்ட பிரபலமான வாக்கியத்தை நீங்களும்கூடக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபோல எந்தப் புகழ்மொழிக்கும் கொஞ்சமும் சளைத்ததில்லை அந்த ரோம சாம்ராஜ்ஜியம். வளர்ச்சி என்று இந்த உலகம் இன்று சொல்லிக் கொண்டிருக்கும் எத்தனையோ விஷயங்களை, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னமே அடைந்திருந்தது அந்த சாம்ராஜ்ஜியம். ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களிலும் பரவியிருந்தது ரோம சாம்ராஜ்ஜியம்.

அரசியல் அமைப்பாகட்டும், சட்டங்களை இயற்றுவதாகட்டும், கட்டிடங்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் என்கிற பொறியியல் சாதனைகளாகட்டும், திட்டமிடப்பட்ட நகர அமைப்பாகட்டும், பொருளாதார பலமாகட்டும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதியாகட்டும், எல்லாவற்றையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே எட்டிப் பிடித்திருந்தது ரோம். கல்வியிலும், கலைகளிலும்கூடச் சிறந்து விளங்கியது. ரோமின் கவிஞன் விர்ஜில் சொல்கிறார், ’உன் கடமை உலகின் மக்களை ஆட்சி செய்வது. சட்டத்தின் வழியே அமைதியை உறுதிப்படுத்துவது” என்று.

இதைபோல இன்னும் அதிகமான புகழ்மொழிகளுக்குச் சொந்தமான, ரோம சாம்ராஜ்ஜியத்தின் அடிவயிற்றில் ஓர் அடிமை, தீ மூட்டினார் என்று சொன்னால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ரோம சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை ஒரு சாதாரண அடிமை அசைத்துப் பார்த்தார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா! அந்த அடிமையின் பெயர் ஸ்பார்ட்டகஸ். எத்தனையோ கவிஞர்கள், எத்தனையோ வரலாற்று ஆசிரியர்கள் ரோமை மாய்ந்து மாய்ந்து எழுதியும்கூட ஸ்பார்ட்டகஸ்தான் வரலாறு முழுக்க அந்த சாம்ராஜ்ஜியத்திற்கும் மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். மன்னர்களல்ல, ராணுவத் தளபதிகளல்ல, ஸ்பார்ட்டகஸ்தான் இன்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த ஸ்பார்ட்டகஸின் அற்புதமான வரலாற்றை 1951இல் நாவலாக எழுதினார் ஹோவர்ட் ஃபாஸ்ட். தொடர்ந்து 1960இல் டால்டன் ட்ரம்போ திரைக்கதை எழுத, ஸ்டான்லி குப்ரிக் திரைப்படமாக இயக்கினார். 65 வருடங்கள் கடந்துவிட்டன, ஆனாலும்கூட இன்றும் ஸ்பார்ட்டகஸ் திரைப்படம் உலகத்தின் ஒவ்வொரு மனிதருக்கும் உந்துசக்தியாக இருந்து கொண்டிருக்கிறது. திரைக்கதையிலும், திரைப்படமாக்கப்பட்ட விதத்திலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை நடிகர்கள் வெளிப்படுத்திய விதத்திலும் ஸ்பார்ட்டகஸ் திரைப்படம் ஓர் உயரத்தை உதராணமாக நிறுத்தியிருக்கிறது. திரைப்படக் காதலர்களால் மட்டுமல்ல, சுதந்திரத்தை விரும்புகிற ஒவ்வொரு மனிதராலும் நேசிக்கப்படும் படைப்பாக இருக்கிறது ஸ்பார்ட்டகஸ் திரைப்படம்.

திரைப்படம் தொடங்கும் முன், அறிமுகமாக இயக்குநர் இப்படிச் சொல்கிறார்: ’கிறிஸ்தவம் என்னும் புதிய மதம் பிறக்கும் நூற்றாண்டில், ரோமக் குடியரசு நாகரிக உலகத்தின் மையத்தில் இருந்தது. கவிஞர் ஒருவர் பாடினார், அனைத்திலும் அழகானது எதுவென்றால், தெய்வங்களின் இல்லமான ரோம் என்று. அப்படித் தன் பெருமையின் உச்சத்திலும், வலிமையின் உச்சத்திலும் இருந்த ரோமக் குடியரசு ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நோயின் பெயர் மனித அடிமைத்தனம். அந்த அடிமைத்தனத்தை எதிர்த்து, அடிமைகளை ஒன்றுதிரட்டி புரட்சி செய்த கதைதான் ஸ்பார்ட்டகஸ் திரைப்படம்.’

சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்காகச் சகல திசைகளிலும் இருந்து அடிமைகள் அழைத்து வரப்பட்டார்கள். லிபியாவின் சுரங்கத்தில் உழைத்துக் கொண்டிருந்த ஸ்பார்ட்டகஸும் அடிமைகளோடு அடிமையாக ரோமுக்கு அழைத்துவரப்பட்டு, மன்னர்களையும் உயர்குடிகளையும் சண்டைசெய்து மகிழ்விக்கும் கிளாடியேட்டர் பள்ளியில் பயிற்சிக்குச் சேர்க்கப்பட்டார். அங்குதான் அடிமையாக வரினியாவும் இருக்கிறார். அடிமைகள் காதலிக்கக் கூடாதா என்ன? இருவருக்குள்ளும் காதல் பிறப்பெடுக்க, அந்தக் காதல் சுதந்திரத்தின் தேவையை வலுவாக வலியுறுத்துகிறது. வரினியா இன்னொருவரிடம் விற்கப்பட்டு, கொண்டு செல்லப்படுவதைப் பார்த்த ஸ்பார்ட்டகஸ், இனி பொறுப்பதில்லை என்று திருப்பி அடிக்கிறார். அங்கிருந்த அடிமைகளும் ஸ்பார்ட்டகஸோடு சேர்ந்துகொள்கிறார்கள்.

அடிமைகளுக்குக் கோபம் வருமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், வந்தது. அங்கிருந்து தப்பிச் சென்ற அடிமைகள், சுற்றிலும் பரவிக்கிடக்கும் அடிமைகளை விடுவித்து ஸ்பார்ட்டகஸ் தலைமையில் ராணுவத்தை அமைக்கிறார்கள். வரினியாவும் தப்பித்து வர, ஸ்பார்ட்டகஸும் அவரும் சேர்ந்துகொள்கிறார்கள். சாம்ராஜ்ஜியத்தைக் குலைநடுங்கச் செய்த அடிமைகள், சுதந்திரக் கனவுகளை விரிவுபடுத்திக் கொண்டு உறுதியாகப் புரட்சி செய்கிறார்கள்.

ஸ்பார்ட்டகஸின் செயல்களுக்கு உந்துவிசையாக வரினியா இருக்கிறார். இருவருக்கும் ஆண் குழந்தை பிறக்கிறது. ஸ்பார்ட்டகஸின் புகழ் ரோமின் தூக்கத்தைக் கெடுக்க, அதிகார வெறிபிடித்த ரோம், வெறியூட்டப்பட்ட படைவீரர்களோடு ஸ்பார்ட்டகஸின் படையை நோக்கி வர, கடைசி யுத்தம் நடக்கிறது. ஆம் கடைசி யுத்தம்தான், அடிமைகளின் புரட்சி அடக்கி, ஒடுக்கப்படுகிறது. ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் சுதந்திரத்தைப் பற்றிய கனவுகள் பல்கிப் பெருகின. சுதந்திர மனிதர்களாக வரினியாவும் மகனும் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஸ்பார்ட்டகஸிடம் விடைபெற்றுப் புறப்படுவதோடு படம் முடிகிறது. நம் கண்களும் இதயமும் கலங்கி நிற்கின்றன.

’உங்களுக்குப் பிடித்த கதாநாயகன் யார்?’ என்கிற கேள்விக்கு, ’ஸ்பார்ட்டகஸ்’ என்றே பதில் சொல்லியிருப்பார் கார்ல் மார்க்ஸ். மானுட வரலாற்றில் முதல் வர்க்கப்போரை முன்னெடுத்தவர் ஸ்பார்ட்டகஸ்தான் என்கிறார் மார்க்ஸ். நினைத்துப் பாருங்களேன், ஒருவேளை ஸ்பார்ட்டகஸ் ரோமிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றிருந்தால்? உலக வரலாறு தலைகீழாக மாறியிருக்கும். வர்க்கப் புரட்சியும்கூட இரண்டாயிரம் வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்காது. ஆனாலும் என்ன, புரட்சியை விரும்பும் ஒவ்வோர் இதயத்திலும் ஸ்பார்ட்டகஸ் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

ரோமிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் உடனிருக்கும் தோழர் கேட்பார்: ’நம்மால் வெல்ல முடியுமா ஸ்பார்ட்டகஸ்?’ என்று. ’எதிர்த்து நிற்பதே நாம் வென்றதாகத்தான் அர்த்தம். ஒரே ஒருவன் மட்டும், நான் அடிமையாக மாட்டேன் என்று சொன்னால், ரோமே நடுங்கும். ஆனால், நாம் ஆயிரக்கணக்கானோர் அடிமை இல்லை என்றோம் அதுதான் அதிசயம்!’ ஆம் அதிசயத்தைத்தான் நிகழ்த்திக் காட்டினார்கள் அந்த அடிமைகள். மானுட வரலாற்றில் ஒவ்வொரு புரட்சியும் அதிசயம்தான். அதில் ஸ்பார்ட்டகஸின் புரட்சியைப் பேரதிசயம் என்று சொல்லலாம்.

இத்தனை வருடங்கள் கழித்து இந்தக் கட்டுரைக்காகப் படத்தைப் பார்த்தபோது, ஸ்பார்ட்டகஸை மட்டுமல்ல மானுட வரலாற்றையே உலுக்கிய அடிமைகளின் புரட்சிக்குப் பின்னால் காதல் நிறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆம், வரினியா இன்னொருவரிடம் விற்கப்பட்டு அழைத்துச் செல்வதைப் பார்த்தவுடன் ஸ்பார்ட்டகஸ் திருப்பி அடிக்கத் தொடங்குகிறார். அடிமைகளை ஒன்றிணைத்து போர் செய்து கொண்டிருப்பதற்கு நடுவில், கடைசி யுத்தத்தின் முடிவை உணர்ந்தவராக, கர்ப்பிணியாக இருக்கும் வரினியாவிடம், ’என் மகனைக் கவனித்துக்கொள் வரினியா. நான் யார்? நாம் என்ன கனவுகள் கண்டோம் என்பதைச் சொல். உண்மையைச் சொல். பொய்களைச் சொல்ல பலர் இருக்கிறாரக்ள்’ என்று உணர்ச்சிகரமாகச் சொல்வார் ஸ்பார்ட்டகஸ்.

கடைசிக் காட்சியில் உயிருக்குப் போராடியபடி சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஸ்பாட்டகஸை நோக்கிக் குழந்தையோடு வரும் வரினியா, குழந்தையை அவரிடம் தூக்கிக் காட்டிவிட்டு, ’இதோ உங்கள் மகன், ஸ்பார்ட்டகஸ். அவன் சுதந்திரமானவன். சுதந்திரம் பெற்றுவிட்டான். அவன் உங்களை நினைவில் வைத்துக்கொள்வான். ஏனெனில், அவனுடைய தந்தை யாரென்றும், அவர் கண்ட கனவுகள் என்னவென்றும் நான் அவனுக்குச் சொல்வேன். அன்பே! தயவு செய்து இறந்துவிடுங்கள்’ என்று வரினியா கெஞ்சும் காட்சி இதயத்தில் பேரிடியை இறக்கிவிடும்.

உரையாடல் ஒன்றில் நண்பர் ஒருவர் கேட்டார், ’சுதந்திர மனிதர்களாகிய நமக்கும் அடிமையான ஸ்பார்ட்டகஸுக்கும் என்ன வித்தியாசம்?’ என்று. ’ஸ்பார்ட்டகஸ் தான் அடிமை என்பதை உணர்ந்து கொண்டவர். பேருக்குச் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு நாம் அடிமை என்பதை உணராமல் இருக்கிறோம்’ என்றேன். நீங்களே சொல்லுங்கள். காதலிக்க சுதந்திரமில்லாத இந்தச் சமூகமைப்பில், விரும்பிய வாழ்க்கையை விரும்பியபடி வாழ்வதற்குச் சுதந்திரமில்லாத இந்தச் சமூகமைப்பில், தேசத்தின் வளங்களையெல்லாம் ஒருசில முதலாளிகள் வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சமூகமைப்பில், நவீனகால அடிமைகளுக்கு எதிர்ப்புணர்வு வந்துவிடக் கூடாது என்று, ஒருசில நலத்திட்டங்களால் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்தச் சமூகமைப்பில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்று சொல்வீர்கள் என்றால், சுதந்திரமென்றால் என்னவென்று முதலில் ஸ்பார்ட்டகஸிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

கட்டுரையாளர், ஜோசப் ராஜா. கவிஞர்/திரைக்கதை ஆசிரியர் ; தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

முந்தைய அத்தியாயம்: El 47: உண்மைக்கு நெருக்கமான ஒரு திரைப்படம் | சினிமாவும் அரசியலும் 4

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x