Published : 05 Nov 2025 04:54 PM
Last Updated : 05 Nov 2025 04:54 PM
“இந்தப் படத்தைப் பார்த்துவிடுங்கள்” என்று அண்ணன் செழியனிடமிருந்து ஒரு செய்தி. பாலைவனத்தில் மழை பெய்தது போலிருந்தது. உண்மைதான், கண்களும், இதயமும் நல்ல திரைப்படத்திற்காகக் காத்துக்கிடக்கின்றன. காற்றுக்கு ஏங்கியபடி புழுக்கத்தில் இருக்கும்போது காற்று வீசினால்? வீசியது. எல்லாரும் உறங்கியபின் எழுந்துகொண்டேன். திரைப்படத்தைப் பற்றிய செய்திகளைப் படித்தேன். கடந்த வருடம் ஸ்பெயினிலிருந்து வெளிவந்திருக்கிறது. கூடுதலாக உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உண்மைக்கு நெருக்கமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மார்ஷெல் பரெனா, 110 நிமிடங்கள் அங்கும் இங்கும் அசையவிடவில்லை. புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் ஆல்பர்ட்டோ மரினியின் அற்புதமான எழுத்தும், இஷாக் விலாவின் கச்சிதமான ஒளிப்பதிவும், ஆர்னவ் பேடலரின் உயிரோட்டமான இசையும் இப்போது வரையிலும் உள்ளுக்குள் உலவிக்கொண்டிருக்கிறது. மொழிமாற்றும் வசதி இருந்தும் மாற்றவில்லை. கதலான் - ஸ்பானிஷ் மொழியிலேதான் பார்த்தேன். திரைப்படம் என்பது காட்சிமொழியல்லவா! இயக்குநரின் தேவையை மனோலா விட்டலாக வாழ்ந்திருக்கும் எட்வர்ட் பெர்ணாண்டஸில் இருந்து அனைவரும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
திரைப்படம் வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படும் இந்த நாட்டில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட நல்ல படங்களைப் பார்க்கும்போது உள்ளுக்குள் நிறையும் வலி இருக்கிறதே, வார்த்தைகளில் சொல்ல முடியாதது. கோடிக்கணக்கில் செலவு செய்து என்ன மாதிரி படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநருக்கு, நடிகருக்கு, தயாரிப்பாளருக்கு என யாருக்காவது கொஞ்சமாவது சமூகப் பொறுப்பிருக்கிறதா? கொலை மட்டுமே செய்யும் கதாநாயகன், கொள்ளையடிக்கும் கதாநாயகன், பெண்களைச் சீண்டும் கதாநாயகன் என மொத்த இழிவுகளையும் இளைஞர்களிடம் திரையில் காட்டிவிட்டு, சமூகத்தில் அவை பிரதிபலிக்கும்போது கண்களை மூடிக்கொள்கிறார்கள் இங்கிருக்கும் வியாபாரிகள்.
ஆனால் பேருந்து எண் 47 திரைப்படத்தின் கதாநாயகன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அடிப்படை உரிமைகளுக்காக, அதிகாரத்தின் கதவுகளைத் தட்டித்தட்டி, அவை திறக்கவே திறக்காது என்று தெரிந்தபின் தனக்கான உரிமையைத் தானே எடுத்துக் கொள்பவன் அவனுக்காக மட்டுமல்ல அவனைச் சுற்றியிருக்கும் மக்களுக்காக!

கதை : பார்சிலோனா கேள்விப்பட்டிருப்பீர்கள். ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் கத்தலோனியாவின் தலைநகரம். அந்தப் பார்சிலோவின் பக்கத்திலிருக்கும் உயரமான குன்றில் அமைந்திருக்கிறது டோரி பேரோ என்றழைக்கப்படும் சிற்றூர். வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பார்சிலோனாவை வளர்ச்சியென்றால் என்னவென்றே தெரியாத டோரி பேரோ குன்றிலிருந்து பார்த்துக் கொண்டேயிருக்கலாம். டோரி பேரோவில் இருந்து பார்த்தால், பார்சிலோனா நகரின் சாலைகள், சாலைகளில் ஓடுகின்ற வாகனங்கள் எல்லாமும் அழகாகத் தெரியும். ஆனால், டோரி பேரோவிற்கோ சாலையும் கிடையாது. பேருந்தும் கிடையாது.
இரவில் அந்தக் குன்றிலிருந்து பார்த்தால் பார்சிலோனா ஒளிர்ந்து கொண்டிருக்கும். மின்சாரம் இல்லாத டோரி பேரோவோ பெரும்பாலும் இருண்டே கிடக்கும். பார்சிலோனாவில் பேருந்து ஓட்டுநராக வேலைசெய்து கொண்டிருக்கும் மனோலா விட்டலும் அவரது மனைவியும், மகளும், இன்னும் சில குடும்பங்களும் நீண்ட நாள்களாக அந்தக் குன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்காகச் செங்குத்தாக இறங்குவதையும், சுமைகளைத் தூக்கிக் கொண்டு செங்குத்தாக ஏறுவதையும் பார்க்கும்போது நமக்கே கொஞ்சம் மூச்சுவாங்கிவிடத்தான் செய்யும்.
தனக்காக மட்டும் யோசிக்காமல், எல்லாருக்காகவும் யோசிக்கும் நாயகன் தங்களுடைய குன்றிற்குப் பேருந்து வசதி செய்து கொடுக்கச் சொல்லி அதிகாரத்தின் கதவுகளைத் தட்டுகிறான். அனுமதி மட்டும் கொடுங்கள் பேருந்தை நானே ஓட்டிச்செல்கிறேன் என்று கெஞ்சுகிறான். எளிய மனிதர்களின் குரலுக்கு எந்த அதிகாரம் செவிசாய்த்திருக்கிறது! பார்சிலோனாவின் அதிகாரமும் உப்புச்சப்பற்ற காரணங்களைச் சொல்லி உதாசீனப்படுத்தி அனுப்புகிறது. அவ்வளவுதான். இனி என்ன இருக்கிறது!

பார்சிலோனாவில் இருந்து தங்கள் குன்றை நோக்கிப் பேருந்தைக் கடத்திச் செல்கிறான் நாயகன். போகவே போகாது என்று சொன்ன பாதையில் போய்க்காட்டுகிறான். மக்கள் வரவேற்கிறார்கள். பேருந்து மலையுச்சிக்கு வந்துவிட்டது. கூடவே காவல்துறையும். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் மனோலா விட்டல் என்கிற மாமனிதன் இந்த மகத்தான காரியத்தைச் செய்திருக்கிறான். அதைத் தொடர்ந்து அந்தக் குன்றிற்கு பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. மின்சாரம் குடிநீர் என எல்லாமும் கிடைத்திருக்கிறது.
கத்தலான் - ஸ்பேனிஷ் மொழியில் மனோலா விட்டலின் கதை மாபெரும் உந்துசக்தியாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் மிகச்சரியாகப் புரிந்து கொண்டு கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு புரட்சிகரமான கதையை அமைதியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மனோலா விட்டலை யாரும் மறக்கவில்லை. இந்தத் திரைப்படத்தைப் பார்த்தபிறகு நீங்களும்கூட மறக்கமாட்டீர்கள். அவவ்ளவுதானா! இல்லை, இன்னும் இருக்கிறது. அதுதான் முக்கியமான செய்தி. இதுபோல் நம்மிடம் கதைகள் இல்லையா என்ன? ஏராளம் இருக்கின்றன. கொஞ்சம் தைரியம் மட்டும்தான் வேண்டும். அப்படியென்றால் இந்த உச்ச இயக்குநர்களையெல்லாம் தைரியம் இல்லாதவர்கள் என்று சொல்கிறீர்களா என்றென்னைக் கேட்காதீர்கள். இன்று நான் நிம்மதியாக தூங்க வேண்டும்.
கட்டுரையாளர், ஜோசப் ராஜா. கவிஞர்/திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT