Published : 31 Oct 2025 05:56 PM
Last Updated : 31 Oct 2025 05:56 PM
மென்பொருள் நிரலர் ஆகப் பணிபுரியும் சிவாவும் (ரியோ ராஜ்), பணக் கஷ்டம் தெரியாமல் வளர்ந்த சக்தியும் (மாளவிகா) பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தின் வழியாக இல்லறத்தில் கரம் பற்றுகிறார்கள். மனைவியின் உணர்வுகளுக்குச் சரி சமமான மதிப்பளிக்க நினைக்கும் சிவா, கட்டுப்பெட்டியான பெற்றோரின் வளர்ப்பில் ஆளானவன் என்றாலும் கொஞ்சம் கன்சர்வேடிவ் ஆக இருக்கிறான்.
சக்தியோ அனைத்திலும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு தன்னை ‘ஸ்காலர்’ என எண்ணிக்கொண்டு குறும்பும் கொண்டாட்ட மனமும் கொண்ட பெண்ணாகச் சக்தியின் பொறுமையை அடிக்கடி சோதிக்கிறாள். தொடக்கத்தில் நன்றாகச் செல்லும் இந்த ஜென் இசட் தலைமுறையின் அன்றாட வாழ்க்கையில் மெல்ல மெல்ல ‘டாம் அண்ட் ஜெர்ரி’ மனநிலை எட்டிப்பார்க்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக முற்றி அவர்களை எந்த எல்லையில் கொண்டுபோய் நிறுத்தியது என்பது கதை.
படத்தின் ஆகச் சிறந்த அம்சம் திரைக்கதை. தனக்கான வழக்கறிஞரைத் தேடி குடும்பநல நீதிமன்ற வளாகத்துக்குச் செல்லும் சிவா, தன்னுடைய வாழ்க்கையில் விழுந்த விரிசல்களின் கதையை, நான்கு முக்கிய சம்பவங்களாக அவன் தேடி வந்த வழக்கறிஞரான நாராயணனிடம் நறுக்கென்று சுருக்கிச் சொல்லும் விதமும் அதற்கு அவரது எதிர்வினைகளும் ஜெட் ஸ்பீட். சம்பவங்களிலோ அவ்வளவு ஷாக்கடிக்கும் நிகழ்காலத் தலைமுறையின் ஈகோ அட்டாக்ஸ்!
தாலியைக் கழற்றி நகைப்பெட்டியில் வைத்துவிட்டு இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடும் மனைவியைக் கண்டிக்கத் தொடங்கும் ஒரு பொசசிவ் ஆணின் பதற்றம், படிப்படியாகச் சக்தியின் சுதந்திர வெளிக்குள் ஆண் என்கிற தன் வறட்டு ஈகோவை சீவா நீட்டும்போது சண்டைக்கோழியாக உருவெடுக்கும் சக்தியின் முதிர்ச்சியின்மை இரண்டுமே மாறி மாறி சம்பவம் செய்துகொள்வது ‘அய்யோ.. இந்த ஜோடிய நம்ம பக்கத்துக்கு வீட்டில் பார்த்திருக்கோமே!’ என எண்ண வைத்துவிடுகிறது.
ஒரு கட்டத்தில் மனைவி உட்காரும் முறையில் குற்றம், உடையணியும் ஸ்டைலில் குற்றம் என்று அவளது மனவிருப்பத்தின் பக்கத்தைப் பார்க்காமல் ‘ஸ்டீரியோ டைப்’ வாய்ச் சண்டையில் முன்னேறும் சிவாவால் எப்படிப்பட்ட ரத்தக்களரி ஏற்படக் கூடாதோ அதில் போய் முடிவதும் அங்கிருந்து தீர்வை நோக்கி திரைக்கதை வேகமாக நகர்வதில் ஏமாற்றம் அளிக்காத ‘சொல்வதெல்லாம் உண்மை’ ரக சுவாரசியத்துக்கு நம்மைத் தள்ளிக்கொண்டு போய்விடுகிறது.
திரைக்கதையைப் பொழுதுபோக்கு கலந்த சினிமேட்டிக் தருணங்களில் முக்கி எடுப்பதிலும் கலைத்துப் போட்டு சுவாரசியமாகக் கதை சொல்வதிலும் விற்பன்னராகத் தெரிகிறார்கள் திரைக்கதையை இணைந்து எழுதியிருக்கும் சிவகுமார் முருகேசன், கலையரசன் தங்கவேல் ஆகிய இருவரும்.
சிவா - சக்தியின் திருமணம், திருமணத்துக்குப் பிறகு ஊற்றெடுக்கும் காதல், அதன் தொடர்ச்சியாக உருப்பெறும் குடும்பத்தின் பொறுப்புகளைப் பகிர்ந்து ஏற்பதில் இருக்கும் சிக்கல்களில் முதலாவதாக இடறும் பொருளாதார நிர்வாகம், அதையொட்டி பொறுப்புடன் முடிவுகள் எடுக்க ஆண் முனையும்போது வெடிக்கும் பெண்ணுடைய பொருளாதாரச் சுதந்திரம் பற்றிய கேள்வி என ஒரு புதிய குடும்ப உருப்பெறும் முக்கியமான தருணங்கள் எவ்வாறு சிக்கலில் முடிகின்றன.
கோபங்கள் தணியவும் காயங்கள் ஆறவும் வாய்ப்புக் கொடுக்காமல் எடுக்கப்படும் அவசர முடிவுகள், வாழ்ந்து தீர்க்க இளமையைப் படுகொலை செய்துவிடுவதை அட்டகாசமான ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், எடிட்டிங் வழியாகச் சித்தரித்த பாணியில் இயக்குநர் கலையரசன் கவனிக்க வைத்துவிடுகிறார்.
படத்தின் அழகான, உணர்வுப் பூர்வமான இணைப்பு என்பது சிவா - சக்தியின் ஓராண்டு நிறைவின் வாழ்க்கைப் போராட்டத்துக்குள் வழக்கறிஞர்களாக நுழையும் நாராயணன் (விக்னேஷ் காந்த்) - லட்சுமி (ஷீலா) தம்பதியின் கடந்த காலம். இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
நாராயணன் குடும்பநல நீதிமன்றத்தில் ‘போலிப் பெண்ணியம்’ குறித்தும் ‘ஆணின் பொருளாதாரச் சுதந்திரம்’ குறித்தும் சுருக்கமாக எடுத்து வைக்கும் வாதத்தை யதார்த்தில் எந்த நீதிமன்றமும் காதுகொடுத்துக் கேட்காது என்றாலும் அதுவே யதார்த்தமாக இருப்பதால், அந்தக் காட்சியில் பால் பேதமற்று பார்வையாளர்கள் கலங்கிப்போவதைத் தடுக்க முடியாது.
சிவாவாக வரும் ரியோ ராஜ், தன்னுடைய முந்தைய படங்களில் ஏற்றக் கதாபாத்திரங்களுக்குக் கொடுத்த நடிப்பை விட, இதில் உண்மையாகவே உழைத்து நடித்து நம்மை உருக வைப்பதுடன் அட்டகாசமாகவும் அழகாகவும் நடனமாடி அசத்துகிறார். சக்தியாக வரும் மாளவிகா மனோஜ் ரியோவை நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார். நாராயணனின் நண்பன் மற்றும் உதவியாளராக வரும் சக வழக்கறிஞரும் அவர் ஸ்கோர் செய்யும் கொங்கு வட்டார ஆதங்கப் பேச்சும் அட்டகாசம்.
அதிகமும் பேச வேண்டிய கதைகள் விஷயத்தில் தமிழ் சினிமா எப்போதுமே அசட்டைதான். பெண்களுக்கான வெளியைப் புரிந்துகொள்ளாத ஆண்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதைக் கடந்த ஆண்டு வெளியான ‘லவ்வர்’ அழுத்தம் திருத்தமாகச் சொன்னது. இப்போது ஆண்களின் வெளியைப் புரிந்துகொள்ள மறுக்கும் தற்காலத் தலைமுறைப் பெண்களால், வாழ வேண்டிய வாழ்க்கை தொடங்கும்போதே எவ்வாறு நொறுங்கிவிடுகிறது என்பதை, நறுக்கென்ற காதல் மற்றும் சூழல் நகைச்சுவைக் கலந்து கலகலப்பும் கண்ணீருமாய் சொல்லியிருக்கும் படம். 16 வயதைக் கடந்த அனைவரும் பார்த்துச் சிரித்து தங்களைச் சரிசெய்துகொள்ள அட்டகாசமான வாய்ப்பை வழங்கியிருக்கிறது இந்த ‘ஆண் பாவம் பொல்லாதது’
எச்சரிக்கை: போலிப் பெண்ணியவாதிகள் மறந்தும் தியேட்டருக்குள் நுழைந்துவிடாதீர்கள். மீறி நுழைந்தால் உங்களுக்கு நீதிமன்றக் காட்சிகளில் தேள் கொட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT