Last Updated : 29 Oct, 2025 02:15 PM

 

Published : 29 Oct 2025 02:15 PM
Last Updated : 29 Oct 2025 02:15 PM

October: Ten Days That Shook the World - புரட்சியைக் காட்சிப்படுத்திய திரைப்படம் | சினிமாவும் அரசியலும் 3

இதுவும் தேசப்பற்று மிகுந்த திரைப்படம்தான். இன்னும்கூட அழுத்திச் சொல்ல வேண்டுமென்றால், இதுதான் தேசப்பற்றுமிக்க உண்மையான திரைப்படம். தேசத்தின் அத்தனை வளங்களையும் சுரண்டிக் கொழுத்து சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த அரசனை, தேசத்தின் மக்களே தூக்கியெறிந்து தொழிலாளர்கள் தலைமையில், விவசாயிகள் தலைமையில் ஆட்சியை அமைப்பதற்கும், அதற்காகப் புரட்சியில் ஈடுபட்டதற்கும், நினைத்துப் பாருங்கள் தேசத்தின் மீது எவ்வளவு அன்பிருந்திருக்க வேண்டும். அந்தப் புரட்சியைப் பின்னிருந்து இயக்கிய போல்ஷ்விக் கட்சிக்கு தேசத்தின்மீது எவ்வளவு அக்கறை இருந்திருக்க வேண்டும்.

புரட்சி என்பதும் தேசத்தின் மீதான அன்பிலிருந்து புறப்பட்டு வருவதுதான். அப்பேர்ப்பட்ட புரட்சியை, உலகத்திற்கே உதாரணமான புரட்சியை நெருக்கமாக, எதார்த்தமாக காட்சிப்படுத்த முயன்று, வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமான இடம்பிடித்த திரைப்படம்தான் அக்டோபர்.

எப்போதாவது கொஞ்சம் சோர்வாக உணரும்போது இந்தத் திரைப்படத்தைப் பார்க்க நினைப்பேன். அப்படி ஒரு சோர்வின் தருணத்தில் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு புரட்சியைக் காட்சிப்படுத்துவது சாத்தியமா என்ன? ஒரு பெரும் புரட்சியை கேமராவிற்குள் அடைத்துவிடுவது முடியக்கூடிய காரியமா? சொல்லி வைத்ததுபோலா நடக்கும் புரட்சி? அந்தத் தேசம் அப்படியொன்றும் சிறிய தேசமுமல்ல. ஆனாலும் அந்த மகத்தான இயக்குநர் செர்கேய் ஐசென்ஸ்டீன் புரட்சியைக் காட்சிப்படுத்த முடிந்தவரையிலும் முயன்றிருக்கிறார். முடிந்தவரையிலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்கிற தலைப்பில் புரட்சியின் வரலாற்றை எழுதிய ஜான் ரீட் எப்படிப் போற்றுதலுக்குரியவரோ, அப்படியேதான் ஐசென்ஸ்டீனும் போற்றுதலுக்குரியவரே! உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்கிற புத்தகத்தை அடிப்படையாக வைத்துதான் அக்டோபர் திரைப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.
1917 இல் நடந்த அந்த யுகப்புரட்சியை 1927 இல் திரைப்படமாக மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள், ஐசென்ஸ்டீனின் தலைமையிலான திரைப்படக் குழுவினர்.

ஒரு புரட்சியைக் காட்சிப்படுத்தியதால் உலகெங்கிலும் இருக்கும் புட்சிக்காரர்களுக்கு இந்தத் திரைப்படம் நெருக்கமாகிப் போனது. ஒரு புரட்சி சாதாரணமானதில்லை என்பதால், அதைக் காட்சிப்படுத்தும்போது அசாதாரணமான காட்சிகள் வெளிப்பட்டதால் உலகெங்கிலுமுள்ள சினிமா ஆர்வலர்களுக்கும் இந்தத் திரைப்படம் நெருக்கமாகிப் போனது. எதார்த்தத்தை அதன் சூடு குறையாமல், அதன் வேகம் குறையாமல் காட்சிப்படுத்தியதால், எதார்த்தத்தை விரும்புகிறவர்களுக்கு இன்னும் நெருக்கமாகிப் போனது இந்தத் திரைப்படம். புரட்சியை விரும்பாதவர்களும், புரட்சியை வெறுத்தவர்களும்கூட இந்தத் திரைப்படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சின்னக்குழு இவ்வளவு பெரிய புரட்சியை எப்படித் தூண்டியது என்று அவர்களால் அவ்வளவு எளிதாக நம்பமுடியவில்லை. புரட்சி நம்பமுடியாததுதானே!

1927 லிலிருந்து இன்றுவரையிலும் அக்டோபர் திரைப்படம் பேசப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம் புரட்சிதான் வேறொன்றுமில்லை. உலக முழுவதும் திரைப்படக் கல்லுரிப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது அக்டோபர் திரைப்படம். அதன் காட்சியமைப்பிற்காக, அதன் திரையாக்க நுட்பங்களுக்காக, திரைப்படத்தில் இருக்கும் தொகுப்புக் காட்சிகளுக்காக, இயக்கத்திற்காக, திமித்ரி சொஸ்டகோவிச்சின் அதியற்புதமான இசைக்காக இன்றுவரையிலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது அக்டோபர் திரைப்படம். முதலாளித்துவத்திற்கு இறுதிமணி அடிக்கும் காலம்வரையிலும் என்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் அக்டோபர் திரைப்படம்.

ஒரு நேர்காணலில் குறைந்த செலவில், அக்டோபர் திரைப்படத்தில் இவ்வளவு பிரம்மாண்டங்களை எப்படித் திரையில் உங்களால் உருவாக்க முடிந்தது என்று கேட்கிறார்கள் ஐசென்ஸ்டீனிடம். கொஞ்சமும் தாமதிக்காமல் பதில் சொல்கிறார். ”இங்கே தனிச்சொத்து இல்லை” என்று. இந்தப் பதிலைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் போதும் திரைப்படத்தை மட்டுமல்ல, சமூகத்தையும் புரிந்துகொள்ளலாம். தொடர்ந்து சொல்கிறார், ”நாங்கள் வாழ்விலிருந்தே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறோம். ஒரு தெருவை, கோபுரத்தை, கிராமத்தை உருவாக்க வேண்டிய தேவை எங்களுக்கில்லை, ஏற்கெனவே அவை இருக்கின்றன. நன்றாகவும் இருக்கின்றன. திரைப்படத்திற்கான அனுமதி என்பது பெரிய விஷயமேயில்லை. மிக முக்கியமாக இங்கு தனிச்சொத்துரிமை இல்லையாதலால், எந்த இடத்தையும் எந்தத் தனிமனிதனும் சொந்தம் கொண்டாட முடியாது. இதுபோன்ற ஏராளமான காரணிகளால் திரைப்படத்திற்கான தயாரிப்புச் செலவு கொஞ்சமே தேவைப்படுகிறது என்று சொல்கிறார் ஐசென்ஸ்டீன்.

பொதுவாக அக்டோபர் திரைப்படத்தை மாண்டேஜ் காட்சிகளுக்காக மட்டும் பாரட்டுகிறவர்கள், சிலாகிப்பவர்கள் அதற்குப் பின்னால் இருக்கிற புரட்சியின் வரலாற்றை வசதியாக மறைத்துக்கொள்ள முயல்கிறார்கள். அக்டோபர் திரைப்படத்திற்குப் பின்னால் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ரஷ்யாவின் தொழிலாளர்களும். விவசாயிகளும் இருக்கிறார்கள். உலகமே கதிகலங்கிப்போன அப்பேர்ப்பட்ட புரட்சியைக் கணிதத்தில் நிபுணராகச் சொல்லி வைத்தாற்போல நிகழ்த்திக்காட்டிய போல்ஷ்விக் கட்சியின் தலைவர் தோழர் லெனின் இருக்கிறார். அக்டோபர் திரைப்படத்தைப் புரட்சியை விட்டுவிட்டுப் புரிந்துகொள்வது சாத்தியமேயில்லை. அக்டோபர் திரைப்படத்தை போல்ஷ்விக் கட்சியின் வரலாற்றை விட்டுவிட்டுப் புரிந்துகொள்வது சாத்தியமேயில்லை.

தேசப்பற்று என்றால் தேசத்தைக் காப்பதுதான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களென்றால், தேசத்தை, தேசத்தின் வளங்களைச் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் முதலாளிகளை எதிர்ப்பதுதான் தேசப்பற்றல்லவா? அப்படித்தான் எதிர்த்து நின்றார்கள் ரஷ்யமக்கள். நீங்களும்கூட இந்த ஆட்சியாளர்கள் சொல்லும் தேசப்பற்றுக் கதைகளை நம்பாதீர்கள். நீங்களும்கூட இந்த முதலாளித்துவ சமூகம் காட்டும் தேசப்பற்றின் காட்சிகளை நம்பாதீர்கள். ஒவ்வொன்றையும் வியாபாரம் செய்யப் பழகியவர்கள் தேசப்பற்றையும் வியாபாரப் பொருளாக்கிக்கொண்டு வருவார்கள் நம்பாதீர்கள். பாருங்கள் அக்டோபர் திரைப்படத்தை, தேசப்பற்று என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இந்தத் தேசம் உங்களுடையது. இந்தத் தேசத்தின் வளங்கள் உங்களுக்கானவை. தேசத்தின் நிலங்கள் உங்களுக்கானவை. ஆனால், சொல்லுங்கள் தோழர்களே! ஒவ்வொன்றும் உங்களுக்கானதாகவா இருக்கிறது? நானும்கூட உங்களைப் புரட்சி செய்யச் சொல்லவில்லை. அக்டோபர் திரைப்படத்தைப் பார்க்கத்தான் சொல்கிறேன். புரட்சியின் வரலாற்றைப் படிக்கத்தான் சொல்கிறேன். மகத்தான மாற்றங்கள், மகத்தான கலைப்படைப்புகளைப் பிரசவிக்கும் என்பதற்கு அக்டோபர் திரைப்படமே சாட்சியாக இருக்கிறது. பார்த்து முடித்த எனக்குள் ஆயிரம் யானைகளின் பலம் புகுந்திருக்கிறது. அந்தப் பலம் உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துகிறேன்!

கட்டுரையாளர், ஜோசப் ராஜா. கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x