Last Updated : 24 Oct, 2025 07:57 AM

2  

Published : 24 Oct 2025 07:57 AM
Last Updated : 24 Oct 2025 07:57 AM

பாதை வகுத்த பராசக்தி | கண் விழித்த சினிமா 36

படங்கள் உதவி: ஞானம்

அண்ணாவின் ‘நல்ல தம்பி’ (1949), ‘வேலைக்காரி’ (1949), ‘ஓர் இரவு’ (1951) ஆகிய மூன்று படங்களும் உருவாக்கிய கருத்தாழம் மிக்க கலகம், மு.கருணாநிதியின் கதை, வசனத்தில், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ (1952) படத்தின் மூலம் தீவிரம் அடைந்தது.

அரசியல், சமூக, பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கி, ஆட்சி மாற்றத்தை மறை முகமாகக் கோரிய இப்படம், தமிழ்த் திரையுலகின் பாதையை, ‘பராசக்தி’க்கு முன் - பராசக்திக்குப் பின்’ என வலுவாகத் திசைதிருப்பியது. இதன் பின்னர் திரைப்படங்களில் சமூக விமர்சனம், பகுத்தறிவுப் பார்வை என்பது தவிர்க்க முடியாத அம்சமாக மாறிப்போனது.

‘பராசக்தி’ உருவான கதை: தமிழ் சினிமாவில் கற்பனை வரலாற்றுப் படங்களுக்கு வசனமெழுதத் தொடங்கிய மு.கருணாநிதிக்கு ‘மந்திரி குமாரி’ கொடுத்த புகழ் முதல் பெரிய உச்சம் என்றால், அவரைப் புகழின் சிகரத்தில் தூக்கிவைத்த சமூக - அரசியல் படம் ‘பராசக்தி’. ‘தேவகி’, ‘மணமகள்’ ஆகிய சமூகப் படங்களுக்கு எழுதி அவை வெளியான பின்னர் தான், ‘பராசக்தி’க்குக் கலைஞர் எழுதினார்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த படங்களை வாங்கித் திரையரங்குகளுக்கு விநியோகம் செய்யும் தொழிலைச் செய்துவந்தவர் வேலூர் பி.ஏ.பெருமாள். திரைப்பட விநியோகஸ்தராக இருந்தாலும் சமூகச் சீர்திருத்த நாடகங்களின் மீது அலாதிப் பிரியம் கொண்டவர்.

இவருக்கு, ‘தேவி நாடக சபா' நடத்தி வந்த ‘பராசக்தி’ நாடகத்தின் கதை பிடித்துப்போனது. அதேபோல் ‘சக்தி நாடக சபா' நாடகங்களில் நடித்துவந்த சிவாஜி கணேசன் என்கிற இளைஞரின் துடிப்பான நடிப்பையும் கவனித்துவந்தார். ஏவி.மெய்யப்பனுடன் இணைந்து ‘பராசக்தி’ நாடகத்தைப் படமாக்கலாம் என்று உடன்பாடு செய்துகொண்டார். இப்படித்தான் ‘நேஷனல் பிக்சர்ஸ்’ உருவானது.

பின்னாளில் நடிகர் திலகமாக ரசிகர்களால் முடிசூட்டப்பட்ட சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய இப்படத்துக்குக் கதை, வசனம் எழுதிய நினைவுகளைக் கலைஞர் எழுதும்போது: ‘பராசக்தி’ படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை நான் ஏற்க வேண்டுமென்று பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடுகொண்ட பெருமாள் வலியுறுத்தினார்.

அப்படத்தில் முதலில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி தான் நாயகனாக நடிப்பதாக இருந்தது. அவருக்கு வேறு படங்கள் இருந்த காரணத்தால், சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்தார் பெருமாள். சிவாஜி கணேசன் இரண்டொரு காட்சிகளில் நடித்ததைப் போட்டுப் பார்த்துவிட்டு, ஏவி.மெய்யப்பன் அதிருப்தி தெரிவித்து நடிகரை மாற்ற வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். நாங்கள் ஏவி.எம்மின் கருத்தை ஏற்க வில்லை.

ஓர் அற்புதமான நடிகரை அவசரப்பட்டு இழந்துவிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினோம். அதன் பின்னர்தான் ‘பராசக்தி’யில் தம்பி சிவாஜி கதாநாயகனாக நடித்தார்.” என்று எழுதியிருக்கிறார்.

நிகழ்கால வரலாற்றிலிருந்து.. பாவலர் எம்.எஸ்.பாலசுந்தரம் எழுதிய மூலக்கதையில், நிகழ்காலத்தின் வரலாற்றைப் பொருத்தித் திரைக்கதை எழுதிய கலைஞர், அதை, பிழைப்புத் தேடிப் புலம்பெயர்ந்து, இரண் டாம் உலகப் போருக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர்களின் அவலக் கதையாக உருவாக்கினார். ஓர் ஆதரவற்ற இளம் விதவை கல்யாணி. அவள், தன்னைத் துரத்தும் சமூக விலங்குகளிட மிருந்து தப்பிக்க, தனது ஓட்டத்தின் கடைசிப் புகலிடம் தன் இஷ்ட தெய்வம் சிலையாக உறையும் கோயில் என நம்பி உள்ளே நுழைந்து அழுது புலம்புகிறாள். அவளது நம்பிக்கையைப் பொய்யாக்கிவிடுகிறார் அக்கோயிலின் பூசாரி.

அதன்பின், தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொள்ளத் தண்ணீரில் குதிக்கிறாள். தற்செயலாக அவர்கள் காப்பாற்றப்பட்டாலும், கல்யாணியின் தற்கொலை முடிவுக்குக் கண்மூடித்தமான பக்தியும் முக்கிய காரணம் என்பதைக் கடவுள் மறுப்புப் பிரச் சாரமாக வசனங்களில் முழங்கினார் கலைஞர்.

சுதந்திர இந்தியாவில் எல்லாருக்கும் எல்லாமும் உடனடியாகக் கிடைத்துவிடும் என்று நம்பப் பட்ட தொடக்க ஆண்டுகளில் வெளியானது ‘பராசக்தி’. அப்படியெல்லாம் எதுவும் நடந்துவிட வில்லை; இங்கே கட்டற்ற வறுமையும், கணக்கிட முடியாத, மலைக்கும் மடுவுக்குமான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வும் மலிந்து கிடந்தது.

அதனால் விளைந்து பெருகியிருக்கும் விரக்தியும் ஏமாற்றமுமே வாழ்க்கையாக இருக்கிறது என்கிற எளிய மக்களின் குமுறலை குணசேகரனின் குரல் வழியாகக் கலைஞரின் வசனம் கொட்டித்தீர்த்தது. தமிழ்நாடு, பிழைக்கவந்த பிறமொழியாளர்களின் மடமாகிப் போனதைப் பட்டவர்த்தனப் படுத்தியது.

“பிறக்க ஒரு நாடு.. பிழைக்க ஒரு நாடு.. தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதி விலக்கா?” என்று நீதிமன்றத்தில் உரிமைக் குரலாக ஒலித்தது குணசேகரனின் வாதம். கல்யாணியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது சட்டம்: ‘குழந்தையைக் கொல்ல முயன்றது குற்றம்! ஆக்கப்பட்டப் பொருள்கள் அனைத்தும் அரசாங்கத்துக்குச் சொந்தம்’ என்கிறார் நீதிபதி.

அவள் பட்டினியில் வாடிய போது அதையறியாத அரசாங்கம், இப்படிச் சொல்வதைப் பாதிக்கப்பட்ட எந்தப் பெண்தான் கேட்டுக்கொண்டிருப்பாள்: “சொந்தம்..! பட்டினிப் புழுக்களாகத் துடித்தோம்.. நெளிந்தோம்.. அப்போதெல்லாம் சொந்தம் பாராட்டி ஆதரிக்க வில்லை; அநீதியிடையே வாழ வேண்டாம், இறப்புலகில் இன்பம் காண்போம் என்று சாவதற்குச் சென்றால், சட்டமென்ற கையை நீட்டிச் சொந்தம் எனச் சூழ்ச்சி மொழி பேசுகிறது அரசாங்கம். அதிசயமான அரசாங்கம்; அற்புத மான நீதி!” என்று கலைஞரின் பேனா தமிழர்களின் மனசாட்சியாக மாறி, கல்யாணியின் குரல் வழியே தன் சீற்றத்தைச் சொற்றொடர்களாகக் கொட்டியது.

பதற்றமடைந்த தணிக்கை: அதுமட்டுமல்ல, பெண்களைப் பக்தி மார்க்கத்தின் விழுதுகளாக உருவகப் படுத்திய சமூகத்தில், அதே பெண்கள் விழிப்புறும் சூழ்நிலையைப் பகுத்தறிவு உருவாக்கும் என்பதைப் பளீரென்ற ஒற்றை வசனத்தில் எடுத்துக்காட்டினார். கல்யாணியைப் பார்த்து ‘குழந்தையை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும்’ என நீதிபதி அறிவுறுத்தும்போது, ‘என் குழந்தை என்ன திருஞானசம்பந்தரா.. பார்வதி வந்து பால் கொடுத்துக் காப்பாற்ற?’ என்று கல்யாணியின் வழியாக எதிர்க் கேள்வியை வைத்து, நீதிமன்றத்தை வாயடைக்க வைத்து விடுகிறார் கலைஞர் மு.கருணாநிதி.

படம் வெளியாகி மக்கள் கூட்டம்கூட்டமாகத் திரையரங்குகளுக்குப் படையெடுக்கத் தொடங் கியதும் பழமைவாதிகளும் எதிர்முகாம் அரசியலர்களும் பதறிப்போனார்கள். ‘மதம், சுதந்திரத்துக்குப் பிறகான ஆட்சியதிகார அரசியல், பெண்கள் மீதான சமூகக் கட்டுமானம் ஆகிய அனைத்தை யும் கேலிக்கூத்தாக்கும் படம்’ என்று கடுமையான விமர்சனங்களை வைத்து, தணிக்கைத் துறைக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தார்கள்.

படம் தடை செய்யப்பட்டுவிடுமோ என்கிற பதற்றமும் அப்போது உருவானது, படத்தை மேலும் பிரபலப்படுத்தியது. திராவிட இயக்கம், திமுக என்கிற புதிய கட்சியாக அவதாரமெடுத்து நின்ற காலக்கட்டத்தில் வெளியான ‘பராசக்தி’, அதன் அரசியல் அதிகாரக் கனவுக்குப் பாதைவகுத்த திரை ஆயுதமாக உருமாறியது.

(விழிகள் விரியும்)

- jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x