Published : 15 Oct 2025 05:29 PM
Last Updated : 15 Oct 2025 05:29 PM

A Twelve Year Night - அரசியல் கைதிகளின் அசராத இதயம் | சினிமாவும் அரசியலும் 1

சுதந்திர வேட்கையுள்ள கொள்கைப்பிடிப்புள்ள மானுட நேசமுள்ள ஒரு மனிதன் எத்தகைய சித்ரவதைகளையும் தாண்டி அதிகாரத்தை வென்றெடுப்பான் என்பதற்குப் பெரும் புரட்சிகளிலிருந்து சிறு போராட்டங்கள் வரை எத்தனையோ உதாரணங்கள் இருந்தாலும், இப்போது, இந்த வேளையில் உதாரணமாக ஒரு திரைப்படத்தைச் சொல்ல நினைக்கிறேன். அந்தத் திரைப்படம் 2018ஆம் ஆண்டு உருகுவேயிலிருந்து வெளிவந்த ‘பன்னிரண்டு ஆண்டு இரவுகள்.’

1917இல் வெற்றிபெற்ற ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து, சீனா, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளிலும் புரட்சிக்கான தேவை இருந்ததால், விவசாயிகளின் தலைமையில், தொழிலாளர்களின் தலைமையில் அரசாங்கம் அழகாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆசியா கண்டத்தில் மட்டுமல்லாமல் கியூபா போன்ற தென்னமெரிக்க நாடுகளிலும் புரட்சியின் அலை பேரலையாகப் பிரவாகமெடுக்கத் தொடங்கிருந்தது. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்த புரட்சியில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து இடதுசாரி அரசை அமைத்துவிட்டார்கள் புரட்சிகரத் தோழர்கள். அப்படியென்றால் அந்த நெருப்பு தென்னமெரிக்கக் கண்டமெங்கும் எப்படிப் பரவியிருக்குமென்று நினைத்துப் பாருங்கள்.

அந்தக் காலத்தில் தென்னமெரிக்காவின் அழகான நாடான உருகுவேயும் சர்வாதிகாரத்தின் பிடியில் உருக்குலைந்து கிடந்தது. சமூக மாற்றத்தின் தேவை கருதி 1960களில் அங்கே துபமரோஸ் என்கிற இடதுசாரி ஆயுதப் புரட்சிக்குழு தொடங்கப்பட்டது. வர்க்க வேறுபாடுகளால் சமமின்றி இருக்கும் சமூகமைப்பைச் சமப்படுத்தியே தீரவேண்டும் என்று தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார்கள் தோழர்கள். துர்பாக்கியமாக 1973இல் ராணுவம் உருகுவேயின் ஆட்சியைக் கைப்பற்றி, சர்வாதிகாரப் பாதையைத் தொடங்கியது. முதல் வேலையாக துபமரோஸ் இயக்கத்தின் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

அப்படிக் கைது செய்யப்பட்ட மூன்று தோழர்களான முஜிகா, ரோசென்காஃப், ஃபெர்ணாண்டஸ் ஆகியோர் பன்னிரண்டு ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்கள் எப்படியெல்லாம் சித்ரவதைச் செய்யப்பட்டார்கள், எப்படிப் பன்னிரண்டு ஆண்டுகளைக் கடத்தினார்கள். எந்த நம்பிக்கை அவர்களை நகர்த்திக் கொண்டிருந்தது என்பதைப் பற்றிய திரைப்படம்தான் ’பன்னிரண்டு ஆண்டு இரவுகள்.’ மனவலிமை கொண்ட மனிதர்களை எந்தச் சித்ரவதையும், எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கும், சமூக மாற்றம் என்னும் குறிக்கோள் மனிதர்களை எவ்வளவு வலிமையானவர்களாக மாற்றுகிறது என்பதற்கும் இந்தத் திரைப்படம் உன்னதமான உதாரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

எல்லா நாட்டின் ராணுவங்களும் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் உருகுவே ராணுவமும் புரட்சிக்காரர்களை வேட்டையாடத் துடித்தது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கொல்லாமல், சித்ரவதை செய்ய முடிவெடுக்கிறார்கள் அதிகாரிகள். சித்ரவதையிலிருந்துதான் திரைப்படமும் தொடங்குகிறது. ஒளியே புகமுடியாத சிறிய அளவிலான தனிமைச்சிறை. ஒருவரை இன்னொருவர் பார்த்துக்கொள்ள முடியாது. திடீரென்று தாக்குதல் நடைபெறும். உணவும் தண்ணீரும் சரியாக கொடுக்கப்படாது, கழிப்பறை செல்லக்கூட வசதி செய்து தராமல் அவர்களை உளவியல்ரீதியாக உருக்குலையச் செய்வதுதான் ராணுவத்தின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், புரட்சியை நேசிக்கும் இதயங்களின் மனவலிமையை அவ்வளவு எளிதாகக் குலைத்துவிட முடியுமா என்ன?

முகத்தை மறைத்தபடி உருகுவேயின் வேறுவேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் மூவரும். மூவரில் ஒருவரான ரோசென்காஃப் கவிஞர். சிறையில் ஓர் அதிகாரியின் காதலுக்கு ஆலோசனை சொல்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த அதிகாரியின் காதலிக்குக் கடிதம் எழுத உதவுகிறார். ’இங்கே காவல் கடமைக்கான, முடிவில்லா தனிமையில், உன்னருகில் இல்லாததால், சிறையில் சிக்குண்டு என் கண்ணீர்ச் சுரப்பிகள் துடியாய்த் துடிக்கின்றன’ என்று எழுதிக் கொடுக்கிறார். இன்னொருவரான ஃபெர்ணாண்டஸோ கனவுகளை உருவாக்கத் தொடங்குகிறார். தனிமையை வென்றெடுக்கக்கூடிய கனவுகள் அவருடைய ஒவ்வோர் இரவையும் நகர்த்தத் தொடங்குகிறது. அருகில் இல்லாத மகளோடு பேசுகிறார். அவளுக்குக் கதை சொல்கிறார். ஆக, ராணுவத்தின் சித்ரவதையால் அவர்களுடைய உறுதியை எதுவுமே செய்ய முடியாமல் இருக்கிறது.

முஜிகா என்கிற துபமரோஸின் முக்கியமான தலைவரை ராணுவம் அதிகக் கவனம் எடுத்து சித்ரவதைக்கு உள்ளாக்குகிறது. தனிமைச்சிறையில் அவரைச் சுற்றி ஒலிகளை எழுப்பி பயங்கரமான ஒலித் தாக்குதல்களால் அவர் காதுகளின் வலியாக இதயத்தை வலிக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள் ராணுவத்தினர். வலிமையை வரவைத்துக் கொண்டு அந்த ஒலித் தாக்குதல்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார் முஜிகா.

இந்தத் திரைப்படத்தில் இதயத்தை உலுக்கிக் கண்களைக் குளமாக்கக்கூடிய பல காட்சிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பக்கத்துப் பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ரோசென்காஃபும் ஃபெர்ணாண்டஸும் சுவரைத் தட்டி ஒலியெழுப்பி அதன் ஊடாகத் தகவல் பரிமாறிக்கொள்ளும் காட்சி. ஆங்கில எழுத்துகளை எண்களாகக் கணக்கிட்டுக் கொண்டு, அவற்றை ஓசையாகப் புரிந்துகொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி கண்களில் அப்படியே உறைந்துகொள்ளும் உன்னதமான காட்சி. ஒருகட்டத்தில் இருவரும் சுவரில் தட்டித்தட்டியே சதுரங்கம் விளையாடத் தொடங்குவார்கள். புரட்சிக்காகக் காத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு வழியைக் கண்டறிந்து பிழைத்திருப்பார்கள் என்பதற்கான உதாரணம், இந்தப் புரட்சிக்காரர்களின் வாழ்க்கை.

ஒரு காட்சியில் முஜிகாவைப் பார்க்க அவருடைய வயதான தாயார் வருவார். பார்க்க முடியாது என்பதற்கு ஏதேதோ காரணம் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள் ராணுவத்தினர். சிறைக்குள் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக முஜிகா ஒலித் தாக்குதல்களால் கொஞ்சம் குலைந்து போய்க்கொண்டிருப்பார். அப்போது, அம்மா அனுமதி வாங்கி சந்திக்க வந்துவிடுவார். ’என் காது தீயாக எரிந்து கொண்டிருக்கிறது அம்மா, ஒலித் தாக்குதல் நடத்தி என்னைத் துன்புறுத்துகிறார்கள், இனிமேல் நீ இங்கு வரவேண்டாம்’ என்று சொல்வார். அம்மா அமைதியாக இருப்பார். முஜிகா மீண்டும் மீண்டும் அதையே சொல்ல, கோபமான அம்மா எழுந்துநின்று மகனிடம் சில வார்த்தைகளைச் சொல்வார். நீங்கள் மக்சீம் கார்க்கியின் தாய் நாவலைப் படித்திருந்தால் அந்த அம்மாவும் உங்கள் ஞாபகத்தில் வரத்தான் செய்வார்.

’நான் வருவேன் மகனே, உயிரோடு இருக்கும் வரைக்கும் உன்னைப் பார்க்க வருவேன். நான் உன் அம்மா, நான் சொல்வதைக் கேள். அவர்கள் உன்னைப் பைத்தியமாக்க நினைக்கிறார்கள். நீ அதை அனுமதிக்காதே. புரிகிறதா, நான் சொல்வதைக் கேள். எதிர்த்து நில். என்ன நடந்தாலும் எதிர்த்துப் போராடு. உன்னைக் கொல்ல அனுமதிக்காதே. போராடுவதை நிறுத்துகிறவர்கள்தான் தோற்றுப் போகிறார்கள். போராடு’ என்று சொல்லிவிட்டுப் புறப்படுவார். அடுத்த காட்சியை ஊகிக்க முடிகிறதா? முஜிகா சிறைக்குள்ளிருந்து போராடத் தொடங்கிவிடுவார். உரிமைகள் ஒவ்வொன்றாகக் கைகூடத் தொடங்கும்.

நீண்ட வருடங்கள் கழித்து சிறைக்குள்ளே இருக்கும் ஒரு திறந்தவெளிக்கு மூவரும் அழைத்து வரப்படுவார்கள். ஒவ்வொரு மூலையில் நின்றபடி புன்னகையால் தோழமை அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள். சூரியன் ஒளிர்ந்துகொண்டிருக்கும் வானத்தை வாஞ்சையாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். நீண்ட காலமாகச் சூரிய வெளிச்சத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள் மல்லாந்து படுத்தபடி அந்த ஒளியை அள்ளிக் குடித்துக்கொண்டிருப்பார்கள். பன்னிரண்டு வருடங்கள், தோராயமாக நாலாயிரத்தி முன்னூற்றி எண்பத்தி மூன்று நாள்கள் அனுபவித்துக்கொண்டிருந்த சித்ரவதைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல உருகுவே நாட்டிற்கும்கூட. ஆம், ராணுவ ஆட்சிக்கு முடிவுகட்டி ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் உருகுவே மக்கள்.

ஜனநாயகத்தின் கரங்கள் சிறைக்கதவைத் திறந்துவிட மூவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். குடும்பத்தினரும் மக்களும் கூடிநின்று புரட்சியாளர்களை வரவேற்கிறார்கள். அன்பும் ஆனந்தக் கண்ணீரும் பெருக்கெடுத்து ஓடுகிறது அந்த இடத்தில். இறுதியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, பன்னிரண்டு வருடங்கள் சிறைப்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டாலும் தாய்நாட்டிற்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்ட முஜிகா 2010இல் உருகுவேயின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ’அரசியல் என்பது அதிகாரத்திற்காக அல்ல; மக்களுக்குச் சேவை செய்வதற்கு’ என்கிற கொள்கையோடு மக்களுக்கான ஆட்சியாளராகச் சிறந்து விளங்கினார். மிகச்சிறந்த கவிஞரான ரோசென்காஃபோ கலாச்சார இயக்குநராக மாறினார். துபமரோஸின் முக்கியத் தலைவரான ஃபெர்ணாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தார்.

வலிமையானவர்களாக நீங்கள் மாற விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். இன்னும்கூட உங்கள் வலிமையை அதிகரித்துக்கொள்ள விரும்பினாலும் தவறாமல் இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் உன்னதமானது ஆல்வாரோ பிரெச்னர் எழுதி இயக்கிய இந்தப் ‘பன்னிரண்டு ஆண்டு இரவுகள்’ திரைப்படம்.

- ஜோசப் ராஜா | கட்டுரையாளர் - கவிஞர் / திரைக்கதை எழுத்தாளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x