Published : 14 Oct 2025 04:59 PM
Last Updated : 14 Oct 2025 04:59 PM
கடந்த 15 ஆண்டுகளாகப் பாடல்கள் எழுதிக்கொண்டிருப்பவர் மோகன் ராஜன். புத்தாயிரத்தின் பாடலாசிரியர்களில் ஒருவரான இவர், ஷான் ரோல்டன் இசையில், கடந்த 2023-இல் வெளியான ‘குட் நைட்’ படத்தில் இடம்பெற்ற கதையை நகர்த்தும் நான்கு பாடல்களை எழுதி புதிய வெளிச்சம் பெற்றவர்.
திரைப்படங்களில் பாடல்கள் குறைந்துகொண்டு வரும் நேரத்தில், பிரபலமான பாடலாசிரியர்களின் தமிழ்ப் பசிக்குத் தீணி போடுவது தனியிசைப் பாடல்கள்தான். அந்த வரிசையில் மோகன் ராஜனும் தற்போது சேர்ந்துகொண்டிருக்கிறார். ராஜ் சக்ரவர்த்தியின் மனதை வருடும் இசையில், இன்றைய 2கே, ஜென் நெக்ஸ்ட் தலைமுறையின் காதலை சிரச்சேதம் செய்யாமல் தன் மோகன் ராஜன் தன் வரிகளால் அழகுபடுத்தியிருக்கும் ‘நீ என்னை நெருங்கையிலே..’ என்கிற தனியிசை பாடல், மீயூசிக் வீடியோவாக யூடியூபில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பிக் பாஸ் புகழ் ராணவ், ‘திருக்குறள்’ படப் புகழ் பாடினி குமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இசைக் காணொலியை, ஓம் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் சார்பில் டாக்டர்.பி.சி.ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார். காணொலிக்கான கருத்தாக்கம் உருவாக்கி கச்சிதமாக இயக்கியிருப்பவர் கேவி (KVe). யுனிவர்சல் ஸ்க்ரீன்கிராப்ட் இணை தயாரிப்பு பணியை செய்திருக்கிறார்கள். நித்யாஸ்ரீ - வெங்கட்ரமணன் இணையின் காதல் பனியாக உறையும் குரலில் அமைந்திருக்கும் இத்தனிபாடலின் இசைக் காணொலிக்கு என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மைக்கேல் தேவா மெலடியான நடன அசைவுகளை வடிவமைத்துள்ளார்.
இந்த இசைக் காணொலியில் கெளதம் மற்றும் குழலி கதாபாத்திரங்களுடைய உணர்ச்சிப் பயணம், எதிர்பாராத முடிவுடனும் அதிர வைத்தாலும் செவிகளில் தேனாக இறங்குகிறது. நடிகர்களின் நடிப்பும் கேவியின் இயக்கமும் ராஜ் சக்கரவர்த்தியின் இசை நேர்த்தியும் இந்த ஆல்பத்தின் தொடர்ச்சியை எதிர்பார்க்க வைக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT