Published : 12 Oct 2025 10:02 PM
Last Updated : 12 Oct 2025 10:02 PM
ஒரு சமூகத்தின் ஆகப்பெரிய பொதுவான அம்சம், வேடிக்கை பார்த்தல். நெடுஞ்சாலை விபத்து , புல்டோசர் பள்ளம் வெட்டுவது தொடங்கி மழை வெள்ளம், கட்சி ஊர்வலம், பொதுவெளியில் பெண்கள் என எல்லாமே வேடிக்கையின் பகுதிகள். புறம் சொல்வதும், வதந்தி பரப்புவதும் இதன் நீட்சியே. அப்படி இன்னொருவரின் அந்தரங்கத்தை வேடிக்கை பார்த்ததில் விளையும் பிரச்சனையும் அதற்கான ஊர்மக்களின் எதிர்வினையும் தான், மலையாளத்தில் தற்போது வெளிவந்திருக்கும் "அவிஹிதம்".
இராவணேஸ்வரம் என்பது வட கேரளத்தில் ஒரு பின்தங்கிய குக்கிராமம். அங்கு வேலையற்றும், சிறிய வேலை பார்ப்பதும் என ஒரு சிறிய ஆண்கள் குழு இருக்கிறது. ஒரு முழு நிலவு இரவில், அக்குழு கூடி , குடித்து, வம்பு பேசி, பின் பிரிந்து செல்கிறது. அதில் ஒருவன் தனியே வீடு திரும்பும் வழியில், அசந்தர்ப்பமாக, இருளில் ஒரு காதல் ஜோடி சந்திப்பதைப் பார்த்துவிடுகிறார். இருளில் தெரியும் அந்த ஆண், மாவு மில் வைத்திருக்கும் வினோத் எனத் தெரிகிறது. அப்பெண் உருவம் யார் எனத் தெரியவில்லை. மறுநாள் முதல், அப்பெண் யார் என்னும் அக்குழுவினரின் மண்டை குடையும் கேள்விக்குச் சந்தேகத்திற்கு இடமான பெண்ணும் அவள் குடும்ப உறுப்பினர்களும் என்ன ஆகிறார்கள் ? இதை அந்தக் குடும்பமும், ஊர் மக்களும் அணுகும் முறை, ஆற்றும் எதிர்வினைகளை மெல்லிய நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் வெறும் 106 நிமிடத்தில், இத்திரைப்படம் சொல்கிறது.
இக்கதை, வரிக்கு வரி அதிரடி நகைச்சுவையை நம்பவில்லை. மாறாக, மெலிதான நகைச்சுவை இழையும் இயல்பான உரையாடல்களையும் அதனூடே வரும் இடைவெளிகளையும் நம்பியிருப்பது கூடுதல் பலம். அப்பெண் யாராக இருக்கும் எனும் எட்டிப்பார்க்கும் ஆர்வம்/ பார்வை மோகம் கதாபாத்திரங்கள் இடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையாளர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதன் விளைவாக, தொடர்ச்சியான திகிலும், கதாபாத்திரங்களின் நகைச்சுவை எதிர்வினைகளும் இணைகோடுகளாகப் பயணிக்கிறது.
படத்தின் முற்பகுதி களத்தை நிதானமாக நிறுவுவதற்காகப் பயன்பட்டும், பிற்பகுதி அக்குழுவினரின் திட்டமிடல்களையும், அறிவுப்பூர்வமாக அல்லாமல் உணர்வுப்பூர்வமாகச் செய்யும் சறுக்கல்களையும் சிரிக்கச் சிரிக்க சொல்கிறது. படம் நெடுக ஆணாதிக்கக் கதாபாத்திரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அதற்குப் பெண் கதாபாத்திரங்கள் சொல்லும் கூர்மையான பதில்களும் சிறப்பு. பெரிய நடிகர்கள் இல்லாததனால், இறுதிக்காட்சியில் வரவேண்டிய அதிர்ச்சியும் ஆழமும் சற்றே தீவிரத் தன்மையைக் குறைத்து இருக்கிறது. ஆனாலும், அக்குறை கூரிய வசனங்களால் சரி செய்யப்பட்டு விடுகிறது. இறுதிக்காட்சியில் இருவருக்குக் கன்னத்தில் கிடைக்கும் அறைகள் மிக்க குறைந்தபட்சத் தண்டனையே.
2021-இல் "திங்களாழ்ச்ச நிஸ்ச்சயம்" திரைப்படத்திற்காக மாநில விருதும், தேசிய விருதும் பெற்ற எழுத்தாளர், இயக்குநரின் சென்னா ஹெக்டேவின் ஆறாவது திரைப்படம் இது. இம்முறை அம்பரீஷ் கலாதரனுடன் இணைந்து கதையெழுதி மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறர். படத்தில் வரும் பிரதான இரவுக்குக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் ஸ்ரீராஜ் ரவீந்திரன், ரமேஷ் மேத்யூஸ்-இன் நேர்த்தியான ஒளிப்பதிவும் , சனத் சிவராஜின் நீட்டி முழக்காத கச்சிதமான படத்தொகுப்பும், ஸ்ரீராஜ் ஷஜியின் திகில் கலந்த பின்னணியிசையும் சிறந்த பங்களிப்புகள். அதிகளவில் நடிகர்கள் இருந்தாலும் டைலர் வேணுவாக வரும் உன்னி ராஜ், முரளியாக வரும் தானேஷ் கோலியாத், அம்மாவாக வரும் அம்மணி சந்திராலயம் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
மனதை அறுக்கும் அதிர்வலைகளுடன், தீவிரமான தொனியில் ஆணாதிக்கத்தின் பொதுப்புத்தி பற்றிய கேள்விகளை எழுப்பியது தமிழில் வெளிவந்த "கொட்டுக்காளி". அதையே, அதன் தீவிரத்தன்மை நீர்த்துப் போகாமல், அதே சமயம் மெலிதான நகைச்சுவையுடன் செவிட்டில் அறைந்து கேட்டு வைத்திருக்கிறது "அவிஹிதம்".
தொடர்புக்கு: tottokv@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT