Published : 10 Oct 2025 08:07 PM
Last Updated : 10 Oct 2025 08:07 PM
ஆன்லைன் விளையாட்டுகளைச் சட்டம் போட்டுத் தடுத்தாலும் வெவ்வேறு வடிவங்களில் அது வந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு காலத்தில் லாட்டரி சீட்டும், அதிக வட்டி தருவதாகக் கூறி ஆசை காட்டி பணம் திரட்டிய நிதி நிறுவனங்கள் மக்களை அடிமையாக்கி வைத்திருந்தன. அவற்றில் ஏராளமாக பணத்தை இழந்தார்கள். இன்றைக்கும் ‘இரிடியம்’, ஈமு கோழி, மாங்கோ ஃபார்ம், லில்லிபுட் என்று மோசடிக் கூட்டத்திடம் பணத்தை இழப்பதுபோலவே ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட கடன் கொடுக்கும் ஃபைனான்ஸ் மாபியாவிடம் சிக்கி, பல லட்சம் கடன் வாங்கி அதைக் கட்ட முடியாமல் அவர்களிடம் சிக்கி அல்லல்படுபவர்களின் கதை, இன்னும் வெளிவராத உண்மைக் கதையாகவே இருக்கிறது.
அப்படியொரு உண்மையான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு, அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கியிருக்கும் படம் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’. இவர், எடுத்த ‘கூவம்’ என்கிற ஆவணப்படம், ‘சிறந்த நீர்நிலை ஆவணப்பட’த்துக்கான புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் விருதை 2012இல் பெற்றதுள்ளது. விருதை கே.பாலசந்தரிடமிருந்து பெற்றதைப் பெருமையாகக் கூறும் இவர், கே.பாலசந்தரின் மகன் மறைந்த பால கைலாசம் உள்படப் பலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பின் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
‘கேம் ஆஃப் லோன்ஸ்’ படத்தை, ஜே.ஆர்.ஜி. புரொடெக்ஷன் சார்பில், ஜீவானந்தம் தயாரிக்க, சபரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் மூலம் ஜோ கோஸ்டா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது: “கரோனா ஊரடங்கு காலத்தில் தான் இப்படத்தின் கரு எனக்குத் தோன்றியது. நான் ஐடியில் வேலை பார்ப்பவன், ஏஐ யிடம் ஒருவன் மாட்டிக்கொண்டால் என்னாகும் எனக் குறும்படம் எடுத்தேன், அது கான்ஸ் திரை விழாவில் கலந்துகொண்டு விருது வென்றது. லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் கேமிங் ஆன்லைன் லோன் என பலர் சிக்கிக்கொள்வதைத் தினமும் கேள்விப்பட்டேன். என் நண்பர்கள் பலரே இதில் மாட்டியிருக்கின்றனர். அவர்களையெல்லாம், நண்பர்களின் உதவியுடன் மீட்டெடுத்தோம். அதற்காகக் கடன் கொடுத்தவர்களிடம் நெகோசியேட் செய்தபோதுதான் அந்த உலகம் எவ்வளவு பயங்கரமானது என்பதைத் தெரிந்துகொண்டேன்.
இதைப்பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் ஏன் ஒரு படம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம். ஆன்லைன் லோன் வாங்குவது இன்றைய காலகட்டத்தில் மிக மிக எளிதானது ஆனால் அதைத் திருப்பிக்கட்டுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது. அப்படி ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, லோன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருவன், காலை முதல் மாலை வரை ஒரு நாளில் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம். ஒரு கதைக்குப் பாடல்களோ காமெடியோ முக்கியமில்லை. ரசிகர்களைக் கதைக்குள் இழுக்கும் அவர்கள் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் அம்சம் இருந்தாலே போதும். அதை இந்தக் கதைக்களம் அழுத்தமாக எப்போதும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் முக்கியம். குறைந்த கதாபாத்திரங்கள் என்றாலும் கதைக்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்திருக்கிறோம். எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கடன் வாங்கியிருப்பார்கள் இந்தப்படம் பார்க்கும் போது இதை தங்கள் கதையாக உணர்வார்கள். கண்டிப்பாக மக்கள் ரசித்துப்பார்க்கும் ஒரு படமாக இப்படம் இருக்கும். வழக்கமான பாடல், ஃபைட், காமெடி என எந்த அம்சங்களும் இல்லாமல் முழுக்க வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான வகையில் 90 நிமிட கமர்ஷியல் படமாக இப்படமாக இதை உருவாகியுள்ளோம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க பெங்களூரில் நடத்தினோம். தனிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. ” என்றார்.
மேலும் படத்தில் நடித்திருப்பவர்கள் பற்றிக் கூறும்போது “கதையின் நாயகன் ஒரு புரட்டகானிஸ்டா அல்லது ஆண்டகானிஸ்டா என்று பகுத்தறிய முடியாத ஒரு லீட் ரோலில் நடித்திருக்கிறார் நிவாஸ் ஆதித்தன். இவர் 'காக்க முட்டை’, ‘சித்திரம் பேசுதடி 2’ படங்களில் கவனம் பெற்றவர். இவருக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் அபிநய் வில்லனாகக் கலக்கியுள்ளார். நாயகியாக எஸ்தர் நடித்திருக்கிறார். சிறார் நடிகராக, ஆத்விக் அறிமுகமாகிறார். ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ ஆன்லைன் கேமிங்கில் பணம் கட்டும் ஆசாமிகளுக்கு மட்டுமல்ல; அவர்களுக்கு அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் கும்பலுக்கும் ஆப்படிக்கும் படம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT