Last Updated : 03 Oct, 2025 07:37 AM

 

Published : 03 Oct 2025 07:37 AM
Last Updated : 03 Oct 2025 07:37 AM

மனம் செய்யும் மாயம்! | இயக்குநரின் குரல்

கடந்த 2022இல் தேசிய அளவில் சிறந்த குறும் படத்துக்கான விருதைப் பெற்றது ‘பாஞ்சாலி’. அதை எழுதி, இயக்கியவர் ஆர்.சுப்ரமணிய பாரதி. அவர் தற்போது, ‘ஆனந்த வாழ்க்கை’ என்கிற ‘டாக்கு டிராமா’ வகைத் திரைப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல் ஆகியோர் முதன்மைக் கதாபாத்தி ரங்களில் நடித்துள்ள இப்படம், உலகப் புகழ்பெற்ற வேதாத்திரி மகரிஷியின் ‘மனவளக்கலை’யை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து: ‘

மனவளக் கலை’யை மையப்படுத்தி அறிமுகப் படத்தை உருவாக்க வேண்டும் என ஏன் நினைத்தீர்கள்? - உடல் ஆரோக்கியத்தைவிட ஒரு பெரிய செல்வம் ஏதுமில்லை. உடல் ஆரோக்கியம் பெற முதலில் மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதை 5 வருடங்களுக்கு முன் நான் ‘மனவளக் கலை’யின் ஐந்து நாள் அடிப்படைப் பயிற்சியை ஆழியாற்றில் உள்ள வேதாத்திரி மகரிஷியின் மையத்தில் பெற்றுத் திரும்பியபின் உணர்ந்தேன்.

பெற்ற பயிற்சியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய மூன்றாவது மாதத்திலிருந்து நானொரு புது மனிதனாக, குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயனுள்ளவனாக, எப்போதும் மன மகிழ்வோடும் முந்தைய உடல் உபாதைகள் ஏதுமில்லாமல் இப்போது வரை முழு ஆரோக்கியத்துடன் வாழ்கிறேன். மனம் செய்யும் மாயத்தை நானே உணர்ந்து பயன்பெற்றுள்ளேன். நான் பெற்ற பயனை அனைவரும் பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் இதைப் படமாக எடுத்திருக்கிறேன்.

என்ன கதை, எங்கே படமாக்கினீர்கள்? - உலக சமுதாய சேவா சங்கத்தின் பயிற்சி தலைமையகமான கோவை, ஆழியாறு அறிவுத்திருக்கோயில் மையத்தில்தான் 80 சதவீதம் படமாக்கினேன். கே.பாக்யராஜ், ராமலிங்கம் என்கிற முதன்மைக் கதாபாத்திரத்தில் வருகிறார். ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சினைகளுக்குத் நல்ல தீர்வுகளைப் பரிந்துரைத்துப் பாராட்டு பெறுபவர். ஆனால், தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை அவரால் தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார்.

அப்போது தமிழ் தத்துவ ஞானியான வேதாத்திரி மகரிஷி உருவாக்கிய ‘மனவளக் கலை’ என்கிற எளியமுறை யோகப் பயிற்சிகளை கற்றுப் பயன்பெற்றதும் தன் குடும்பத் தையும் அதில் பங்கேற்க வைக்கி றார். அதன்பின்னர் அவரது குடும்பம், பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது என்கிற தெளிவை, உடல், மனநலத்தைச் சீர்செய்ததன் மூலம் எப்படிப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதுதான் கதை.

ஒரு டாக்கு டிராமா வகைப் படமாக ஏன் எடுத்தீர்கள்? - உலக சமுதாய சேவா சங்கம் 1958ஆம் ஆண்டு வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்டது. ‘தனிமனித அமைதி மூலம் உலக அமைதி’ என்பதை நோக்கமாகக் கொண்ட உலக சமுதாய சேவா சங்கம் (WCSC) ஒரு லாப நோக்கமற்ற சேவை அமைப்பு. சாதி, மதம், இனம், மொழி கடந்து உடல் நலம், மனவளம், உயிர்வளர்ச்சி, குடும்பநலம் ஆகியவற்றைச் சீரமைப்பதன் மூலம் சமுகத்தில் அமைதியையும் அன்பையும் வளர்க்கக்கூடிய ஒன்றாகவே மனவளக் கலை ஓர் எளிய முறையாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள 2,500க்கும் அதிகமான மையங்கள் வழியே இதுவரை ‘மனவளக் கலை’ பயின்று 25
லட்சத்துக்கும் அதிகமான குடும்பங் கள் பயன்பெற்றுள்ளனர். இதை விவரித்துக் கூற டாக்கு டிராமா வகைப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். எனது திரைக்கதையைப் படித்துப் பார்த்த உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம். மயிலானந்தம், ‘அறிவுத் திருக்கோயிலுடன் இணைந்து நாங்களே இதைத் தயாரிக்கிறோம்’ என்று முன்வந்தார்.

படத்தை எங்கே காணலாம்? - முழுத் திரைப்படத்தையும் அறிவுத் திருக்கோயிலின் ‘ஸ்கை யோகா’ (Sky Yoga Tv) என்கிற யூடியூப் சேனலில் இலவசமாகக் கண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x