Published : 28 Sep 2025 11:41 PM
Last Updated : 28 Sep 2025 11:41 PM
அரசியலும் தாதாயிசமும் உலகம் முழுவதுமே பின்னிப் பிணைத்த பங்காளிகள். கல்வி, மருத்துவம், ரியல் எஸ்டேட் போலவே கந்து வட்டித் தொழில், போதைப்பொருள் கடத்தல் - விநியோகம் இரண்டும் நிழலுலகின் முக்கியமான தொழில் ஏரியாவுக்குள் நுழைந்து நூற்றாண்டு ஆகிவிட்டது. குறிப்பாக மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, சிட்டா வட்டி, வார வட்டி கணக்கிடப்படும் தண்டல் என வட்டியே குட்டிபோடும் கொடுமையான வழிகளில், வட்டி மாபியாக்களிடம் பணம் வாங்கும் ஏழை, எளிய மக்களைப் பெரும்பாலான வங்கிகள் கண்டுகொள்வதில்லை. மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள், வட்டி மாபியாக்களை விட மோசமான ஆட்டத்தை ஆடுகிறார்கள். இதனால் அதிக வட்டிக்குக் கடன் வாங்கிய சாமானிய மக்கள், முதலை அடைக்க முடியாமல் வட்டி கட்டியே வாழ்க்கையை முடித்துக்கொண்டு விடுகிறார்கள். அதுவே வட்டியைச் செலுத்த முடியாமல் போனால், வாங்கிய கும்பலிடம் அவர்கள் படும் பாடுகள் அவர்களைத் தற்கொலை வரை இட்டுச்செல்லக்கூடிய துயரங்களால் நிறைந்தவை.
தமிழ் சினிமாவில் கந்து வட்டி மாபியாவை சித்தரித்த படங்கள் வெகுசில வந்துள்ளன என்றாலும் ‘பல்டி’ போல விளையாட்டையும் வட்டி மாபியாவையும் இணைத்த கதைக் களம் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தின் சுவாரசியமே இதை ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாகவும் கேங்ஸ்டர் ஆக்ஷன் டிராமாவாகவும் கலந்த கலவையின் கச்சிதம்தான்!
கதை, கேரளமும் தமிழ்நாடும் சந்திக்கும் எல்லை ஊர் ஒன்றில் நடக்கிறது. உதயா (ஷேன் நிகம்), குமார் (சாந்தனு), ரமேஷ் (சிவா ஹரிஹரன்), ஜேக்ஷன் ஆகிய நால்வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள். இவர்களை முதன்மை ஆட்டக்காரர்களாகக் கொண்ட ‘பஞ்சமி’ என்ற கபடிக் குழுவை வெற்றிகொள்ளச் சுற்று வட்டாரத்தில் வேறு குழுக்களே இல்லை என்கிற நிலை இருக்கிறது. இந்த நால்வரும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்தாலும் கபடிப் போட்டிகளில் கிடைக்கும் பரிசுப் பணம் அவர்களின் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. இதே ஊரில் பொற்றாமரை என்ற கந்து வட்டி நிதி நிறுவனத்தை நடத்தி வரும் பைரவா (செல்வராகவன்) , வட்டித் தொழில் உள்படப் பல முறைகேடான தொழில்களைச் செய்யும் சோடா பாபு (அல்போன்ஸ் புத்திரன்) ஆகிய இருவரும் எதிரும் புதிருமான தாதாக்கள். இந்த இருவருக்கும் நடுவில் ‘ஜி’ மா ( பூர்ணிமா இந்திரஜித்) இன்னொரு வட்டித் தொழிலில் கரைகண்ட பெண் தாதா காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். கதையின் முக்கிய சிக்கல், ஏழை, எளிய இளைஞர்களின் கபடி விளையாடும் திறமையை, தங்கள் அதிகாரப் போட்டிக்காகப் பயன்படுத்தப் போய், அதிகப் பணம் கொடுக்கும் ‘பொற்றாமரை’ பைரவாவுக்காக விளையாடப் போகும் உதயாவும் அவனுடைய நண்பர்களும், கபடியை மறந்து, நிழலுலகின் ஆடுகளத்தில் எப்படிப்பட்ட ஆட்டக்காரர்கள் ஆனார்கள் என விரிகிறது திரைக்கதை.
நண்பர்களுக்குள் ஒருமித்த கருத்தும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதும் நட்பில் எவ்வளவு முக்கியம் என்பதை உள்ளீடாக வைத்திருக்கிறது இந்த நான்கு நண்பர்களின் கதை. நட்பில் துரோகம் என்பது கண்ணுக்குத் தெரியாத மாய மானாக உலவினால் என்னாகும் என்பதை குமார் கதாபாத்திரம் சித்தரித்த விதம், பார்வையாளர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கிறது. உதயாவின் காதல், அவனது காதலியுடன் கபடி எவ்வாறு தொடர்புகொள்கிறது என்பதைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் இயக்குநர் உன்னி சிவலிங்கம்.
தாதாக்களின் அதிகாரப் போட்டியில், அவர்களின் கருவிகளாக மாறும் திறமையான இளைஞர்கள், அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள், நட்பின் மீதான நம்பிக்கை ஆகியன திரைக்கதையின் மையமாக இருந்தாலும், முதன்மைக் கதாபாத்திரங்களாக வரும் கபடி இளைஞர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் விதமாக மூன்று தாதா கதாபாத்திரங்களை எழுதிய விதமும் அதற்கு செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா ஆகியோரிடம் பெற்றிருக்கும் நடிப்பும் பெரும் ‘கல்ட் கேங்ஸ்டர்’ உணர்வைப் படம் முழுவதும் தருகிறது. மிகக் குறிப்பாக செல்வராகவனும் அல்போன்ஸ் புத்திரனும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
ஷேன் நிகம் கதாநாயகனாக இருந்தாலும் அவரது கதாபாத்திரத்தைப் பின் தள்ளும் அடர்த்தியையும் குணாதிசயங்களையும் கொண்டிருக்கிறது சாந்தனு ஏற்றுள்ள குமார் கதாபாத்திரம். இக்கதாபாத்திரங்களை இருவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.
விளையாட்டு - நிழலுலகம் என்கிற இரண்டு வகைமையை இணைப்பதில் திரைக்கதை வழியாக வெற்றிபெற்றிருக்கும் இயக்குநர், இதை வன்முறைகளின் விளைநிலமாகச் சித்தரித்திருப்பதில் பெரிதும் சறுக்கியிருக்கிறார். 18 வயதைக் கடந்திராத இளம் பார்வையாளர்களுக்கு இப்படத்தை நான் பரிந்துரைக்க விரும்பவில்லை.
படத்தின் திரைக்கதை, நடிகர்கள் தேர்வு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, ஒளிப்பதிவு, சாய் அபயங்கரின் கவனிக்க வைக்கும் இசை எனப் பல கலையம்சங்கள் படத்தின் திரை அனுபவ மதிப்பைக் கூட்டினாலும் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்ட விதம்தான் இப்படத்தின் ‘கல்ட்’ தன்மையை உண்மையாகவே உயர்த்திப் பிடித்துள்ளது. ஆக்ஷன் சந்தோஷ் - விக்கி ஆகிய இருவரும் வடிவமைத்துள்ள ரத்தக் களரி இல்லாத சண்டைக் காட்சிகளில் இருக்கும் கச்சாத்தன்மை ஆக்ஷன் ரசிகர்களின் மனதை அள்ளிக் கொள்வது உறுதி.
பல்டி: திறமையான கபடியின் கால்கள் ஆபத்தான ஆடுகளத்தில் அடி வைத்தால் சந்திக்க வேண்டியிருக்கும் யுத்தமும் சிந்த வேண்டியிருக்கும் ரத்தமும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT