Last Updated : 28 Sep, 2025 07:32 AM

1  

Published : 28 Sep 2025 07:32 AM
Last Updated : 28 Sep 2025 07:32 AM

நாற்பதுகளின் நயன்தாரா! | காலம் மறந்த கலைஞர்

தேவர்களின் குரு பிரகஸ்பதியின் சாபத்துக்கு ஆளான ரம்பையின் கதையை, 40கள் தொடங்கி 60கள் வரையிலும் பலமுறை படமாக்கி இருக்கிறது தமிழ் சினிமா. ஆனால், ரம்பை என்று ஒருவரைத் திரையில் காட்டினால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வசீகர அழகு அந்த நடிகைக்கு இருக்க வேண்டுமல்லவா? கே.எல்.வி.வசந்தா அப்படியொரு வசீகரக் கதாநாயகியாக விளங்கி, 40களின் ரசிகர்களை இன்றைய நயன்தாரா போல் கிறங்கடித்தார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி இருவரையும் 1934இல் வெளியான ‘பவளக்கொடி’ படத்தில் அறிமுகப்படுத்தினார் கே.சுப்ரமணியம். வெள்ளி விழா கொண்டாடிய அந்தப் படத்தில் நடனமாடும் பெண்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் ராமநாத புரம் அருகேயுள்ள குன்றத்தூரில் பிறந்து, சென்னையில் வளர்ந்த கே.எல்.வி.வசந்தா. சிறு வயது முதலே பாடல், நடனம் இரண்டையும் திறம்படக் கற்றுக்கொண்டவர். இனிய குரல் வளமும் குறைவான உயரம் என்றாலும் காண்போரை முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடும் அழகிய தோற்றமும் கொண்டவர். நடனத்தில் நளினமும் அடவுகளில் அழகும் இருந்ததால் இவர் நாயகியாக நடிக்கும் படங்களில் ஒரு நாட்டிய நாடகத்தையும் இடம்பெறச் செய்வதை ஒரு வணிக உத்தியாகவே அன்றைய இயக்குநர்கள் கடைப்பிடித்தார்கள்.

இரண்டு முறை ரம்பை: ‘பவளக்கொடி’க்குப் பின் ஒரு சில திரைப்படங்களின் குழு நாட்டியங் களில் இடம்பெற்றவரை, ‘இவரல்லவா கதாநாயகி!’ என்று கண்டுபிடித்து ‘ரம்பையின் காதல்’ (1939) படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பி.என்.ராவ். அந்தப் படம் சென்னையில் மட்டும் 15 வாரங்கள் பிய்த்துக்கொண்டு ஓடியது. ‘இந்திர லோகத்தில் உண்மையாகவே ரம்பா’ என்கிற ஓர் அழகி இருப்பாரானால், அவர், வசந்தாவைப் போல்தான்
இருக்க வேண்டும். குயில் போன்ற கானமும் மயில் போன்ற நடனமும் பிரம்மாதம்!’ என்று உருகினார்கள் ரசிகர்கள். வசந்தாவுக்கு ‘கானமயில்’ என்றும் பட்டம் சூட்டினார்கள்.

‘ரம்பையின் காதல்’ படத்தின் வெற்றியைக் கண்ட இயக்குநர் பி.என்.ராவ், ‘பூலோக ரம்பை’ எனத் தலைப்பைச் சற்று மாற்றிப் போட்டு, கதை அமைப்பையும் மாற்றியமைத்து வசந்தாவை மீண்டும் ரம்பையாக நடிக்க வைத்து 1940இல் வெளியிட்டார். படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையே தவிர, ‘வசந்தாவின் திறமையை இந்தமுறை ராவ் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை’ என்று விமர்சகர்கள் எழுதினார்கள். ரசிகர்கள், விமர்சகர்களின் நாடித்துடிப்பைச் சரியாகக் கணித்தார் பத்திரிகையாளர் எஸ்.எஸ்.வாசன். திண்டுக்கல் அமிர்தம் டாக்கீஸ் என்கிற நிறுவனத்துக்காக, ஜெமினி ஸ்டுடியோவில் தன்னுடைய முதல் தயாரிப்பாக அவர் உருவாக்கிய படம்தான் ‘மதனகாமராஜன்’ (1941).அந்தப் படத்துக்கு கே.எல்.வி.வசந்தாவையே ஒப்பந்தம் செய்தார்.

முதல் தயாரிப்பும் சூப்பர் வெற்றியும்: சலனப்படக் காலத்திலிருந்து கல்கத்தாவிலும் பம்பாயிலும் பயிற்சி பெற்ற இயக்குநரும் சிறந்த படத்தொகுப்பாளருமான பி.என்.ராவையே இயக்குநராக அமர்த்தினார். கர்னாடக சங்கீத மேடையில் புகழ் பெற்று விளங்கிய பாடகரும் அழகிய தோற்றம் கொண்டவருமான வி.வி.சடகோபனை மதன காமராஜனாக நடிக்க வைத்தனர். பிரேமவல்லியாக கே.எல்.வி.வசந்தா தன்னுடைய காதல் பாடல்களைப் பாடி, நாட்டிய நாடகம் ஒன்றைப் பங்களித்ததுடன், காதல் ரசம் சொட்டும் நடிப்பை வழங்கினார் (யூடியூபில் பார்க்கலாம்). ரசிகர்கள் மீண்டும்மீண்டும் வசந்தாவுக்காகவே வந்து படத்தைப் பார்த்தனர்.

இயக்குநர் பி.என்.ராவின் தயக்கங்களை உடைத்து, படத்தின் வெளிப்புறக் காட்சிகளை எடுக்க மைசூரு அருகேயுள்ள ரங்கப் பட்டினத்துக்குப் படக் குழுவை அழைத்துக்கொண்டுபோனார் வாசன். படத் தயாரிப்புக்கு மட்டுமே ஒரு வருடம் எடுத்துக்கொண்டார். படம் 1941இல் வெளியாகி சென்னையில் மட்டும் 180 நாள்கள் ஓடியது. மற்ற ஊர்களில் 15 வாரங்கள். ‘மதன காமராஜன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியுடன் வாசன் அடுத்து தயாரித்த ‘நந்தனார்’ படத்தின் வெற்றியும் இணைந்தபோது ‘சந்திரலேகா’ என்கிற தன் கனவுப் படத்தை அறிவித்தார் வாசன். ‘நந்தனார்’ (1942) படத்தின் பாட்டுப் புத்தக உள் அட்டையில் ‘சந்திரலேகா’வாக ‘கானமயில்’ கே.எல்.வி.வசந்தா நடிக்கிறார்’ என்று விளம்பரமும் வெளியிட்டார். ஆனால், வசந்தாவை பின்னர் நீக்கினார் வாசன்.

மாடர்ன் தியேட்டரின் அதிர்ஷ்டம்: ‘சந்திரலேகா’ படத்தின் நாயகன் எம்.கே.ராதாவின் உயரத்துக்கு ஈடுதரும் கதாநாயகி இயக்குநர் வாசனுக்குத் தேவைப்பட்டதால் வசந்தாவுக்கு விடைகொடுத்தார். வருத்தத்துடன் பிரிந்த வசந்தாவை மாடர்ன் தியேட்டர் சுந்தரம் சுவீகரித்துக்கொண்டார். அந்த நிறுவனத்துக்காக எம்.எல்.டான்டன் இயக்கிய ‘ராஜ ராஜேஸ்வரி’யில் (1944) கதாநாயகியாக நடித்தார். படம் சூப்பர் ஹிட்! பின்னர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து, இயக்கி, ஜப்பான் ராணுவத் தளபதியாகவும் நடித்த யுத்தப் பிரச்சாரப் படமான ‘பர்மா ராணி’யில் (1945) வசந்தாதான் பர்மா ராணி. அதுவும் சூப்பர் ஹிட்டாக ‘சுந்தரத்தின் அதிர்ஷ்டம்’ என்று வருணிக்கப்பட்டார் வசந்தா. அதன்பிறகு அதே நிறுவனத்தின் ‘சுபத்ரா’ (1946), ‘சுலோச்சனா’ (1946) படங்களில் நடித்தார் வசந்தா. அவை இரண்டும் சுமார் வெற்றியே பெற்றன.

‘சுலோச்சனா’ படத்தில் கதாநாய கனாக இந்திரஜித் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.எஸுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் படப்பிடிப்புக்கு வராமல் போக்குக் காட்டினார். கண்டிப்புக்குப் பெயர்போன சுந்தரமே பிறகு இந்திரஜித்தாக நடித்தார். ‘புரட்சிக்கவி’ பாரதிதாசன் வசனம் எழுதிய படங்களில் ஒன்று இந்த ‘சுலோச்சனா’. இதற்கிடையில் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ தயாரித்த ‘சாலி வாஹனன்’ படத்தில் கதாநாயகன் ரஞ்சனின் சகோதரியாக நடித்தார் வசந்தா. இதில் எம்.ஜி.ஆருக்கு (ராமச்சந்தர்) வில்லன் வேடம். இதன் பிறகு வி.என்.ஜானகி, மாதுரி தேவி, அஞ்சலி தேவி, சௌகார் ஜானகி, பானுமதி ஆகிய கதாநாயகிகளின் வரவு, வசந்தாவுக்குத் துணை வேடங் களையே கொண்டுவந்தது. ஆனால், எதையும் அவர் ஏற்கவில்லை. ‘ஒருபோதும் துணை வேடங்களில் நடிக்க மாட்டேன்’ என்று அறிவித்து, 36 வரு டங்கள் உறுதியாக இருந்து, சென்னை தி.நகரில் அமைதியாக வாழ்ந்தவர், தன்னுடைய 85 வயதில் மறைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x