Published : 21 Sep 2025 10:35 PM
Last Updated : 21 Sep 2025 10:35 PM

சக்தித் திருமகன் | ஊழல் பூதத்துடன் மோதும் புத்திமான்!

ஊழலுக்கு எதிராகத் தமிழ் வெகுஜன சினிமாக்கள் காலந்தோறும் குரல் கொடுத்து வந்திருந்திருக்கின்றன. என்றாலும் மாஸ் கதாநாயகர்களைக் கொண்டு, பொழுதுபோக்கு தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவான ஊழல் எதிர்ப்புப் படங்கள் குறைவாகவே வந்துள்ளன. ஷங்கரின் ‘ஜெண்டில்மே’னும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘ரமணா’வும் அந்த குறைந்த எண்ணிக்கையில் நினைவில் நிற்கின்றன.

தற்போது, அருண் பிரபு எழுத்து, இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சத்தித் திருமகன்’ ஊழலின் சகலவித ஊற்றுக் கண்களையும் பிரித்து மேய்ந்திருக்கிறது. ‘மாதம் 2ஆயிரம் ரூபாய் வருமானம் கொண்ட ஓர் ஏழை, ஒரு லிட்டர் சமையல் எண்ணேயை 300 ரூபாய் கொடுத்து எப்படி வாங்க முடியும்?’ என்று கேட்டு, மிக எளிய விளிம்பு மக்கள், ஊழலால் எவ்வாறு வறுமையில் தொடர்ந்து உழல்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் அதிரடியான மாஸ் அரசியல் சினிமா இப்படம்.

தன் தாயின் மரணத்தின் பின்னாலுள்ள காரணத்தின் வேரைக் கண்டறிந்து பழிவாங்கும் ஒருவனின் கதைபோல் மேலோட்டமாகத் தோன்றினாலும் இந்தியாவின் நிகழ்கால ‘சிஸ்டம்’ மீது இவ்வளவு கூர்மையான தாக்குதலைத் தொடுத்த புத்திசாலித்தனமான அரசியல் படம், சமீப காலங்களில் வரவில்லை என்றே கூறிவிடலாம்.

‘வாழ்க்கை என்பது தனக்காக வாழ்வது மட்டுமல்ல; சக மனிதர்களுக்காக வாழ்வதும்தான்’ என்கிற மக்கள் நல அரசியல் தத்துவ விதையைப் பால்யத்தில் மனதில் ஏந்திக்கொள்ளும் ஒருவன், வெளியுலகத்துக்குத் தெரியாமலே பல ஆயிரம் மக்களுக்குப் பலன் கொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத பெரிய விருச்சமாக வளர்ந்து நிற்பதும் அதை மோப்பம் பிடிக்கும் அதிகார வர்க்கம் ஒட்டுமொத்தமாக அவனை நோக்கித் திரும்பும்போது அவன் என்ன செய்தான் என்பதுதான் கதை.

தலைமைச் செயலகத்தின் அத்தனை அடுக்களிலும் புகுந்து புரப்பட்டு வரும் கிட்டு (விஜய் ஆன்டனி), தன்னுடைய மூளையை நம்பி, காய்களைச் சாணக்கியத்தனத்துடன் நகர்த்திச் செய்துகொடுக்கும் வேலைகளுக்காக 6200 கோடி ரூபாயை தரகுத் தொகையாக மட்டுமே வாங்க முடியும் என்றால், அவனை வைத்துப் பல வேலைகளை முடித்துக்கொள்ளும் அதிகார வர்க்கம் எவ்வளவு ஆயிரம் கோடிகளில் புரள்கிறது என்பதையும் அவர்களுக்கு ஓட்டுப் போடும் எளிய, நடுத்தர மக்களோ வாழ்க்கையின் வெவ்வேறு அடுக்குகளில் எவ்வளவு இன்னல்களில் உழல்கிறார்கள், அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை புட்டுப் புட்டு வைத்து பட்டவர்த்தனப்படுத்தியிருக்கிறது படம்.

அதிகார மட்டத்துக்குள் ஊடுருவி நிற்கும் நாயகனின் விஸ்வரூப ஆட்டத்துக்கு எதிர் ஆட்டம் ஆடும் வில்லன், நாயகனைவிடப் பல மடங்கு பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதை மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு இப்படத்தின் திரைக்கதையில் ‘அபயங்கர்’ கதாபாத்திரமாகப் பார்க்க முடிந்தது. ‘காதல் ஓவியம்’ படத்தில் நான்கு பத்தாண்டுகளுக்கு முன் நடித்த கண்ணனா இவர்!? என்று ஆச்சர்யம் அடங்க வெகுநேரமாகிறது. அந்த அளவுக்கு மாநில, மத்திய ஆட்சியதிகார அரசியலில், சட்ட, நீதித் துறையில் தன் செல்வாக்கு என்கிற சதுரங்கக் காய்களின் வழியாக சாதுர்யம் காட்டும் தந்திரங்களின் ஒட்டுமொத்த உருவமாகவும் தொழிலதிபர் என்கிற போர்வையில் வலம் வரும் மனித நரியாகவும் விளங்கும் ‘அபயங்கர்’ கதாபாத்திரத்துக்குக் கண்ணன் வழங்கியிருக்கும் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும்.

பெரிய சாகசங்கள், மாஸான சண்டைக்காட்சிகள் என்று எதுவும் தேவைப்படாத, ஆனால், தன் கதாபாத்திரத்தின் எதிர்மறை - நேர்மறைகளின் கலவையான தன்மையையும் அதிலிருக்கும் மேடு பள்ளங்களையும் உணர்ந்து சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனியின் வலது கையாக வரும் செல் முருகனுக்கு, விவேக்கின் மரணம் கையொடிந்ததுபோல் ஆனது. ஆனால், அவரை மிக வலுவான ஒரு ‘கம்பேக்’ கதாபாத்திரத்தில் நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.

1989இல் தன்னுடைய பால்யத்தில் கிட்டு எவ்வாறு, யாரிடம், எப்படிப்பட்ட அரசியல் பயின்றான் என்கிற முன்கதை அழுத்தமாகவும் காட்சிமொழியில் உயர்ந்த தரத்தோடும் இருக்கிறது. ஆனால், கதை நடக்கும் ஊர், டெல்டா மாவட்டத்தின் மயிலாடு துறை எனக் கூறிவிட்டு, செட்டிநாட்டு வீடுகள் நிறைந்த காணாநாடுகாத்தானை காட்டுவது சரியாக இயக்குநரே எனக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால், இதுபோன்ற சின்னத் தவறுகள் கூட படத்தின் வேகத்தில் நம் கண்களிலிருந்து காணாமல் போய் கதையின் ஓட்டத்தில் நம்மைக் கரைந்துபோக வைக்கிறது.

இந்திய அரசியலமைப்பைப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தில் அமர்பவர்களும் அவர்களுக்கு எல்லா வகையிலும் பின்னாலிருந்து நிதியளித்து லாபி செய்வதன் மூலம், நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளில் அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களை உட்கார வைக்க முடியும் என்பதைக் கற்பனையாக விரித்திருக்கிறது திரைக்கதை. ஆனால், அந்தச் சித்தரிப்பில் உள்ளோடும் உண்மைகளை விரித்து வைத்ததன் மூலம், வாக்காளர்களாக இருக்கும் பார்வையாளர்களைச் சிந்திக்கத்தூண்டும் பொழுதுபோக்குப் படைப்பாக இதைக் கொடுத்திருக்கிறார் அருண் பிரபு. திரைக்கதையைப் பொறுத்தவரை, முதல் பாதியின் தீவிர ஓட்டம், இரண்டாம் பாதியில் தட்டுத் தடுமாறினாலும் ‘சக்தித் திருமகன்’ தான் செய்ய வேண்டிய அறுவைசிகிச்சையைத் திறம்படச் செய்துவிட்டுப் போகிறான்.

சில கட்டங்கள் ரசிகர்களை உணர்ச்சியின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கின்றன. சில கேள்விகளுக்கு தர்க்க ரீதியாகப் பதில் இல்லை. இந்தக் குறைகளைத் தாண்டி, இது இந்தக் காலக்கட்டத்தின் அரசியல் பதிவாக மாறி நிற்கிறது. மக்களுக்கான கதைகளின் வழியே மாஸ் காட்ட விரும்பும் ஒரு நட்சத்திர நடிகராகத் தொடர விரும்பும் விஜய் ஆண்டனியை, எழுத்தாளர், இயக்குநர் அருண் பிரபு தன்னுடைய திரைக்கதை வழியாகப் பயன்படுத்திக்கொண்ட விதமும் படமாக்கிய விதமும் ‘சக்தித் திருமக’னின் அசுர பலம். உங்கள் மதிப்பு மிக்க நேரத்தை மதித்து தன்னுடைய முந்தைய படங்களின் அடையாளம் சிறிதும் இல்லாமல் இப்படத்தைக் கொடுத்திருக்கும் அருண் பிரபு, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க புத்தாயிரத்தின் இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறார்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x