Published : 01 Sep 2025 05:59 PM
Last Updated : 01 Sep 2025 05:59 PM
கடந்த 1975 சுதந்திர தினத்தன்று வெளியான ஷோலே இந்திப் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ரமேஷ் சிப்பி இயக்கிய இப்படம் சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது 2025 ஆகஸ்ட் 15இல் 50 ஆண்டுகள் நிறைவடைந்து, இப்படத்திற்கு பொன்விழாக் கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன. இதற்காக இப்போதே அப்படத்தின் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
அன்று இப்படம் வரும்போது 8 அல்லது 10 வயதுச் சிறுவர்கள் இன்று 58, 60 வயதை நெருங்கியிருப்பார்கள். அவர்களில் பலர் படத்தின் சிறப்பு பற்றி அறிவார்கள். படத்தைவிட அதன் தயாரிப்பு சமயத்தில் அக்குழுவினர் பட்ட சிரமங்கள் அங்கு நடந்த பல விஷயங்கள் படு சுவாரஸ்யம்.
வேலையற்ற வீரு, ஜெய் ஆகிய இரு இளைஞர்கள் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். பின்னர் கொள்ளையர்களிடமிருந்து ஒரு போலீஸ் அதிகாரியைக் காப்பாற்றி அவரது நன்மதிப்பைப் பெறுகின்றனர். இருவரது நற்குணங்கள், துணிச்சல் மற்றும் மன உறுதி கண்ட அந்த அதிகாரி பிரமித்து வியக்கிறார். பின் இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்று, தனது சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்ள பயன்படுத்த விரும்புகிறார். அவரை மட்டுமின்றி அவர் வாழும் கிராமத்து மக்களையும், அடிக்கடி வந்து அச்சுறுத்தும் கொள்ளையர்களிடமிருந்து மீட்கின்றனர். இடையில் அந்த இளைஞர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் அடிக்கடி மோதல். ஒரு இளைஞரின் காதல் மற்றும் கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட் கலந்ததுதான் படத்தின் கதை.
பழிக்குப் பழி வாங்கும் ஓர் பொழுது போக்குப் படம் தான். ஆனால், இப்படத்தின் வசன கர்த்தாக்களான சலீம்-ஜாவேத் இயக்குநர் ரமேஷ் சிப்பி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து, நன்கு விவாதிக்கப்பட்ட திரைக்கதையை உருவாக்கினர். அதை சுவாரஸ்யமாகச் சொன்ன விதம் தான் ‘ஷோலே’ பேசப்படக் காரணம். அத்துடன் த்வாரகா திவேச்சாவின் ஒளிப்பதிவு, ஷிண்டேயின் படத்தொகுப்பு ஆர்.டி. பர்மனின் இசையும் சேர்ந்து படத்தின் வெற்றியை உறுதி செய்தன.
கதையின் முக்கியக் கதாபாத்திரங்களான காவல் துறை அதிகாரி டாகுர், வீரு, ஜெய், கொள்ளையன் கப்பர் சிங் வேடங்களில் முறையே சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, அமிதாப், அம்ஜத் கான் ஆகியோர் அபாரமாக நடித்திருந்தனர். வீருவின் காதலி பசந்தியாக ஹேமமாலினி, தாகுரின் மருமகளாக ஜெயபாதுரி மற்றும் பலர் நடித்திருந்தனர். கைச்சுவைப் பாத்திரங்களில் ஜெயிலராக அஸ்ரானி, (இவரது ஒப்பனை ஹிட்லர் போல் சித்தரிக்கப்பட்டிருக்கும்.)
கிராமத்தின் விறகுக் கடைக்காரராக ஜெகதீப், வேலைக்காரன் ராம்லால் வேடத்தில் சத்யன் கப்பு, மற்றும் ஊர்ப் பெரியவராக இமாம் சாப் வேடத்தில் ஏ.கே. ஹங்கல் அனைவரும் கதைக்கேற்ற பொருத்தமான நடிப்பு. படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்த சிறிய துணை நடிகர்கள் கூட சிறப்பாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லோரையும் விட நடிப்பில் மிஞ்சியது வில்லன் கப்பர் சிங் வேடத்தில் நடித்த அம்ஜத்கான் தான்!
படத்தில் ரசிகர்களின் வெறுப்பை பெரிதும் சம்பாதித்த இவர் மற்ற அனுபவசாலியான நட்சத்திரங்களை முந்திச்சென்று… அந்த ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம் பேர் பரிசை வென்றது பலரை வியக்க வைத்தது. அத்துடன் இவரது டயலாக் டெலிவரி அபாரம்!
அறிமுகக் காட்சியில் கொள்ளையர்களான தன் கூட்டாளிகள் கிராம மக்களிடம் அடிவாங்கி வெறும் கையுடன் திரும்பி வந்ததும், பாறைகளின் குறுக்கே நடந்து, தன் அடியாட்களை… `ம்…. கித்னே ஆத்மி தே… என்று மிரட்டலாகக் கேட்பதும், அடுத்து `அரே ஓ.. சாம்பா..’ என கூட்டாளியை அடிக்கடி அழைப்பதும் அருமை. அத்துடன் தன் அடியாளின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, ``தேரா க்யா ஹோகா.. காலியா..” என்று கிண்டலாகச் சொல்லும் வசனம் அன்று பம்பாய் மற்றும் வடக்கத்திய நகரங்களில் பெரிதும் பேசப்பட்டு, ஆட்டோ வாசகமாகவும் பிரபலமானது!
அடுத்து மூவரையும் சுடுவது போல் நடித்து… பின் கேலியாகச் சிரித்து.. ஆங்காங்கே பாறைகளில் அமர்ந்திருக்கும் அனைத்து கூட்டாளிகளையும் சிரிக்க வைத்து,.. தண்டனையிலிருந்து தப்பிய மூவரும் இதைப்பார்த்து மெதுவாக பயம் விலகி.. அவர்களும் இது தலைவனின் தமாஷ் வேலை என உணர்ந்து, அவர்களும் அந்த சிரிப்பில் சேர்ந்து கொள்ள அந்த மலைப் பகுதியின் பாறைகளே இடிந்து விழுகிறார்போல் ஒட்டுமொத்தமாக சிரித்து, அதில் அந்த மூவரும் தன்னை மறந்து சிரிக்க.. யாரும் எதிர்பாராமல் ரசிகர்களை நோக்கிச் சிரிக்கும் கப்பர் தன் கூட்டாளிகளை நோக்கி திடீரென திரும்பி, குருவி சுடுவது போல் சுட்டுக் கொல்கிறான்!
இதற்கு Russian Roulette Game என்று பெயர். 1890களில் ரஷ்யாவில் குற்றவாளிகளுக்கு, முக்கியமாக தேசத்துரோகிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு குரூரத் தண்டனை! படத்தின் கதை ஒரு இராணுவ அதிகாரி பற்றிய உண்மைக் கதையிலிருந்து உருவானது. அவர் தனது குடும்பத்தின் கொலைக்கு பழிவாங்க இரண்டு முன்னாள் வீரர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்கிறார்.
ஆனால், ராணுவ நடவடிக்கைகளை சித்தரிக்கும் காட்சிகளை படமாக்க அனுமதி கிடைப்பது கடினம் அத்துடன் சில சட்டச் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தயாரிப்பாளர் சிப்பி கருதியதால் ராணுவ அதிகாரி பின் போலீஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார். படத்தின் கதை வசனகர்த்தா அன்றைய வெற்றிப்பட கதாசிரியர்களான சலீம்-ஜாவேத் (சச்சா ஜூட்டா, தீவார் இன்னும் பல படங்கள் இவர்களது படைப்புகளே!)
இயக்குநர் ரமேஷ் சிப்பிக்கு எப்போதும் ஹாலிவுட்டின் Spageti Western படங்கள் மீது சிறு வயதிலிருந்தே ஓர் தீராக் காதல். எனவே இப்படத்தின் கதைக்களம் 1954ஆம் ஆண்டு அகிரா குரசோவாவின், செவன் சாமுராய் படம் போல் இருப்பதாக சிலர் சொன்னது நினைவில் இருக்கிறது. ஆனால் இயக்குநர் சொல்வது.. இப்படம் உருவாக தனக்கு முன்னோடியாக இருந்தது `Butch Cassidy and Sundance Kid’ எனும் ஹாலிவுட் படம் தான். இது Paul Newman, Robert Redford நடித்து, George Roy Hill இயக்கிய படம். 1969இல் வெளியானது. ஹாலிவுட்டின் 100 சிறந்த Western படங்களில் இதுவும் ஒன்று! இக்கதையை இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து, இதன் மையக் கருத்தை தழுவி எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான கப்பர் சிங் கற்பனையல்ல. நிஜத்தில் ம.பி.யைச் சேர்ந்த ஒரு கொள்ளையன். 1940-60களில் குவாலியரைச் சுற்றியுள்ள பல கிராமங்களை அச்சுறுத்தி வந்தவன். ஆனால் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளைக் காப்பாற்றி வந்த ராபின் ஹூட் ரகம். காவல்துறை மற்றும் தன்னை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் மோசமானவன். இவனிடம் பிடிபட்ட எந்த போலீசும் காது, மூக்கு அறுபடுவது நிச்சயம். இது மற்ற காவலர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் அமைந்தது.
கதை நடக்கும் இடம் மகாராஷ்டிரத்தில் ஓர் கிராமம். ஆனால் பெரும்பகுதி கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகிலுள்ள ராம்தேவர பெட்டாவில் வானுயர்ந்த மலைகள் பாறைகள் சூழ்ந்த நிலப்பரப்பில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் செல்லும் பாதை ஒழுங்கற்று கரடுமுரடாக இருந்ததால் படத் தயாரிப்பாளர்கள் தங்கள் செலவிலேயே பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து மலைக் கிராமமான ராமநகருக்கு செல்ல வசதியாக ஒரு சாலையை அமைக்க வேண்டியிருந்தது.
கலை இயக்குனரான ராம் யெட்கர் (Ram Yedkar) அந்த இடத்தில் ஒரு முழு நகரத்தையும் கட்டியிருந்தார். பின்னர் இது ‘சிப்பி நகர்’ என்று அழைக்கப்பட்டு, படம் வெளியான பின் அங்கு வாழும் மக்களின் பயன்பாட்டுக்கே இக் கட்டடிடம் தானமாகக் கொடுக்கப்பட்டது! அடுத்து பம்பாயில் உள்ள ராஜ்கமல் ஸ்டுடியோவுக்கு அருகில் ஒரு சிறைச்சாலை செட்டும் அமைக்கப்பட்டது , பன்வெல் அருகே பம்பாய்-பூனா ரயில் பாதையில் படமாக்கப்பட்ட ரயில் கொள்ளைக் காட்சி முடிவடைய 7 வாரங்களுக்கு மேல் (சுமார் 50 நாட்கள்) ஆனது.
முதன் முதலாக 1972இன் மத்தியில் படம் தொடங்கப்பட்டு, சுமார் 15 நாட்கள் படமாக்கப்பட்டது. பின் இதில் சில காட்சிகள் திருப்தி இல்லாததால், பல காட்சிகள் நீக்கப்பட்டன. அடுத்து 1973இல் அமிதாப், ஜெயபாதுரி இடம் பெறும் காட்சியுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இப்படம் அன்று ஆடம்பரம் கலந்த ஒரு பிரம்மாண்ட தயாரிப்பாகவும் இருந்தது. (அடிக்கடி விருந்துகள், முக்கியமாக நடிகர்களுக்கான பிறந்த நாள் கோலாகல விருந்துகளும் அடக்கம்!) இதனால், படத் தயாரிப்பு முடிய இரண்டரை ஆண்டுகள் ஆனது,
மேலும் பட்ஜெட்டையும் தாண்டி அதிக செலவானது. 2 கோடிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருந்த படம் பல்வேறு காரணங்களால் 3 கோடிக்கு மேல் வளர்ந்தது. அதுமட்டுமின்றி இயக்குநர் சிப்பி தான் விரும்பிய காட்சியமைப்புகளுக்காக காட்சிகளை மீண்டும் மீண்டும் படமாக்கினார். சாதாரணமாக இந்தியில் ஒரு பாடல் காட்சி 2 அல்லது 3 நாட்களுக்குள் முடிப்பார்கள். ஆனால் 5 நிமிட பாடல் காட்சியான ‘யே தோஸ்தி’, பாடல் 21 நாட்கள் படமாக்கப்பட்டது!
கிராமத்தில் நடக்கும் ஹோலிப் பண்டிகை பாடலான `ஹோலி கே தின்..’ பாடல் காட்சி சுமார் 7 லட்ச ரூபாய் செலவில் 5 நாட்கள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்படம் அன்று ஸ்டீரியோபோனிக் 70 MM அகலத் திரையில் படமாக்கப்பட்ட படங்களில் ஒன்று.
அன்று பெரிதும் வெற்றிடமாகக் கிடந்த படப்பிடிப்பு நடந்த கிராமம் இன்று கர்நாடகாவின் ஒரு சுவாரசியமான சுற்றுலாத் தலமாகிவிட்டது. நாங்கள் எங்கள் அலுவலக சுற்றுலாவுக்காக 1982இல் பெங்களூர் சென்றபோது இந்த இடம் சற்று தூரம் என்பதால் செல்ல முடியவில்லை. ஆனால், தர்மேந்திரா, அமிதாப் பைக்கில் பாடி வரும்.. `யே.. தோஸ்தி…’ பாடல் காட்சி எடுக்கப்பட்ட இடங்கள் மற்றும் பெரிய ஆலமரத்துடன் கூடிய பூங்கா ஆகியவற்றைப் பார்த்தோம். படமும் எடுத்துக்கொண்டோம்.
தொடர்புக்கு: sridar1949@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT