Published : 31 Aug 2025 10:38 AM
Last Updated : 31 Aug 2025 10:38 AM
‘நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூ னிஸ்ட்.’ - இது கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய அதன் முதல் செயலாளரும், மக்கள் போராளியுமான தோழர் பி.கிருஷ்ண பிள்ளையின் குரல். இதை, அவரது உண்மையான வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங் களுடன் சினிமாவுக்காகக் கொஞ்சம் கற்பனையும் கலந்து ‘வீரவணக்கம்’ ஆகத் தந்திருக் கிறார்கள்.
பிரிட்டிஷ் இந்தியாவெங்கும் சுதந்திரப் போராட்டம் தீயாகத் தகித்துக்கொண்டிருந்த 40களின் காலக்கட்டம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டும், ‘ஆண்டான் - அடிமை’ ஒடுக்குமுறையைச் சாதியத்தின் பெயரால் நடைமுறையில் வைத்திருந்தது ஆதிக்க வர்க்கம். அதற்கு எதிராக கம்யூனிஸ்டுகளின் துணையோடு, ஒடுக்கப்பட்ட, சாமானிய மக்கள் துணிந்து போராடினார்கள். அந்த எழுச்சி மிக்கப் போராட்டம் எப்படி நடந்தது, மக்களும் கம்யூனிஸ்ட்டுகளும் அதற்காக எப்படிப்பட்ட இன்னல்களை எல்லாம் எதிர்கொண்டார்கள், உரிமையைப் பெற என்னவெல்லாம் தியாகங்களைச் செய்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் போராட்டத்தின் மைய நாயகனாக பி.கிருஷ்ண பிள்ளை எப்படி விளங்கினார், அவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்ட ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு போன்றோர் இரண்டாம் கட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களாக எப்படி உருவானார்கள் என்பதை, ஒரு கேரளக் கிராமத் தைக் கதைக் களமாகக் கொண்டு விறுவிறுப்பும் ஆவணப்படத் தன்மையும் கலந்த திரைமொழியில் சித்தரித்துள்ளார், படத்தை எழுதி இயக்கியிருக்கும் அனில் வி.நாகேந்திரன். பி.கிருஷ்ண பிள்ளையாக சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார்.
கன்னியாகுமரியின் இடலாக்குடி சிறையில் அடைக்கப் படும் கிருஷ்ண பிள்ளைக்கும் தமிழ்நாட்டுக்கும் எவ்வாறு உறவு உருவானது என்கிற காதல் கதை, கவித்துவமான வருடல். மதுரை அருகேயுள்ள கிராமத்தில் ஆதிக்கச் சாதியில் பிறந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் காவலனாக நிற்கும் பரத்தின் கதாபாத்திரமும் கவர்கிறது. 85 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றின் வழி, தமிழ்நாட்டையும் கேரளத்தையும் இணைக்கும் இப்படம் பேசும் அரசியல், இன்றைக்கும் அவசியமான ஒன்றாகவே தொடர்வதைத் திரை அனுபவம் உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT