Last Updated : 22 Aug, 2025 07:25 AM

 

Published : 22 Aug 2025 07:25 AM
Last Updated : 22 Aug 2025 07:25 AM

இசைஞானியின் பிரியத்துக்குரியவர்! | கண்ணன் நாராயணன் நேர்காணல்

தமிழ் சினிமாவைக் கீழே தள்ளிய கிளிஷேக்கள், மிகைப்படுத்தல்களால் மலிந்த ஹீரோயிசம் ஆகியவற்றை அடித்துத் துவைத்து பகடி செய்து ஹிட்டடித்த படம், சி.எஸ்.அமுதனின் ‘தமிழ் படம்’. அந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கண்ணன் நாராயணன். அந்தத் ‘தமிழ் பட’த்தில் இடம்பெற்ற இவரது ‘ஓ மக ஸியா’ பாடல் ஒரு தனித்த சாதனை. சத்தமே இசையென்றாகிப் போன புத்தாயிரத்தின் திரையிசையில் இவரது மெலடிகளை எப்போது கேட்டாலும் மெய் மறந்துவிடலாம்.

‘தலைக்கூத்தல்’ போன்ற உணர்வு நிரம்பிய தரமான சினிமாக்கள், ‘காதல் என்பது பொதுவுடைமை’ போன்ற துணிச்சலான முயற்சிகள், ‘ரத்தம்’ போன்ற மாஸ் சினிமாக்கள் எனக் களம் எதுவானாலும் தன் பாடல்கள், பின்னணி இசையால் இயக்குநரின் கதை சொல்லலுக்கு உணர்வுப் பரிமாணம் கொடுக்கும் இன்னிசை மழை இவருடையது.

தற்போது கண்ணன் நாராயணன் இசையமைத்து யூடியூபில் வெளியாகியிருக்கும் ‘மாசிலன்’ என்கிற தனிப் பாடல், பத்து லட்சம் பார்வையாளர்களின் உள்ளம் தொட்டிருக்கிறது. இது இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் ஒரு பகுதி:

சி.எஸ்.அமுதனின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர்கள். அவருடனான உங்கள் கூட்டணி அமைந்தது பற்றிக் கூறுங்கள்? - இரண்டாயிரத்தில், முன்னணி பிராண்டுகள் பலவற்றுக்கும் ஜிங்கிள்ஸ் இசையமைத்துக் கொண்டி ருந்தேன். அப்போது அமுதனும் பிசியான விளம்பரப்பட இயக்குநர். விளம்பரப் பாடல் என்பது கேட்டவுடன் மனதைத் தைக்கும் மெலடி டச்சுடன் இருக்கவேண்டும் என்று அமுதன் எதிர்பார்ப்பார். நானும் அதே கொள்கையைக் கொண்டவன் என்பதால் நூற்றுக்கும் அதிகமான விளம்பரப் படங்களில் இணைந்து பணியாற்றினோம்.

அமுதன் தன் முதல் படைப் பைக் கொடுத்தபோது, நண்பன் என்பதற்காக அவர் என்னை அழைக்கவில்லை. தயாரிப் பாளர் ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் சாரிடம் ‘இவனுடைய மெட்டுகள் உங்களைக் கவர்ந் தால் மட்டும் தேர்ந்தெடுங்கள்’ என்றார். அந்தப் படத்துக்காக ‘பச்ச மஞ்சள்’ என்கிற ஹீரோ அறிமுகப் பாடலை இசையமைத்துக் கொடுத்துவிட்டு, பரீட்சை ரிசல்ட்டுக் காகக் காத்திருந்தேன். அப்பாடலைக் கேட்டு தயாரிப்பாளர் என்னைத் தேர்வு செய்தார்.

‘தமிழ் படம்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஓ மக ஸியா’ டூயட் பாடல் எப்படி உருவானது? - இத்தனை வருடத் திரையிசையில் இப்படியொரு டூயட் பாடல் வந்ததே இல்லை. ‘தமிழ் சினிமாவின் கிளிஷேக் களைத்தான் படம் முழுக்க நையாண்டி செய்கிறேன். அப்படியிருக்கும்போது, என் படத்தின் டூயட் பாடலில் நானும் ‘மானே தேனே மலரே..’ என்று வரிகளைப் போடுவது முரணாக இருக்கும். எனக்கு அட்டகாசமான மெலடியும் வேண்டும். அந்தப் பாடலுக்கு ஆடியன்ஸ் எழுந்தும் போகக்கூடாது. ஆனால், அதில் வழக்கமான எந்த வார்த்தையும் இருக்கக் கூடாது, அதே நேரம் டிரெண்டிலும் இருக்க வேண்டும்’ என்றார் அமுதன்.

அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, கடந்த மூப்பது ஆண்டுகளில் எந்தப் பொருளும் இல்லாமல் தமிழ்த் திரையிசையில் பயன்படுத்தப்பட்ட 150 வெற்றுச் சொற்களைப் பட்டியலிட்டோம். அவற்றைக்கொண்டே வரிகளைக் கோத்து இசையமைக்கப்பட்ட பாடல்தான் ‘ஓ மக ஸியா’. ரசிகர்கள் கொண்டாடினார்கள். இசையமைப்பாளர்களிடமிருந்தும் இயக்குநர்களிடமிருந்தும் பாராட்டு குவிந்தது. இந்தப் பாடலுக்காகச் சிறந்த அறிமுக இசையமைப்பாளருக்கான விஜய் தொலைக்காட்சி விருது கிடைத்தது.

‘தலைக்கூத்தல்’ படத்தில் முத்து கதாபாத்திரம் வானொலிப் பெட்டியில் கேட்கும் பாடல்கள் அச்சு அசலாக 80களின் காலக்கட்ட மெலடிகளை நினைவூட்டின. அதேநேரம், மூத்த இசையமைப்பாளர்களின் சாயலும் இல்லாமல் இருந்தது. வானொலியில் ஒலிக்கும் பாடல்கள் எனும்போது அந்தக் காலக்கட்டத்தில் வெளியாகிப் புகழ்பெற்ற பாடல்களையே பயன்படுத்தியிருக்கலாமே?

முதலில் அதைத்தான் செய்தார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன். ஆனால், அப்படிப் பயன்படுத்திய 4 பாடல்களுக்குப் பெரும் தொகையைப் பல நிறுவனங்களுக்கு காப்பி ரைட் கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே ‘80களின் காலக்கட்டத்துடன் சொந்த வாழ்க்கை நினைவுகளை மீட்கும் பாடல்களை நானே இசையமைக்கிறேன்’ என்று இசையமைத் தேன். இந்தப் பாடல்களை இப்போதும் யூடியூபில் கேட்டுவிட்டு உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து தொலை பேசியில் அழைத்து உருகிப்போகும் இசைப் பிரியர்கள் இருக்கிறார்கள்.

‘காதல் என்பது பொது வுடைமை’யில் ‘தீயாய் மோதும்’, எந்த இசையமைப் பாளருக்கும் அவ்வளவு எளிதாக அமைந்துவிடாத ஒரு பாடல் சூழ்நிலை அல்லவா? - இதுபோன்ற தருணங்களை இறைவன் அமைத்துத் தருவது என நம்புகிறேன். இந்தப் படத்தை இப்போது ஓடிடியில் பார்த்துவிட்டு எனக்குப் ‘பின்’ பண்ணும் ரசிகர்கள், ‘சார் நீங்க எங்க இருக்கீங்க? சமூகம் ஏற்க மறுக்கும் ஒன்றை உங்கள் பாடல் ஏற்க வைத்துவிடும் மாயத்தைச் செய்கிறது’ என்று பாராட்டுகிறார்கள்.

தன்பாலினக் காதலும் இயற்கையின் அங்கமே, அம்சமே என்பதைப் பார்வையாளர்கள் ஏற்கும்விதமாக அமைந்த பெண்ணுக்கும் பெண்ணுக்குமான டூயட் அது. இதே படத்தில் இடம்பெற்ற ‘லவ் இஸ் ஃபார் ஆல்’ பாடலை, பால் புதுமையினர் சமூகம் தங்களுடைய கீதமாகவே வரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படங்களுக்கு இசை யமைக்கும் அதேநேரம், இளையராஜாவின் இசைக் கச்சேரிகளில் கிடார் வாசித்து அசத்துகிறீர்கள். குறிப்பாக ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலை வாசிக்கத் தொடங்கும் முன் இளையராஜா ‘கண்ணன் ரெடியா?’ என்று பிரியத்துடன் தேடுகிறார்..

இது கடந்த 8 வருடங்களாக எனக்குப் பெரும் கொடுப்பினை. ராஜா சாரின் கிதாரிஸ்ட் என்பது எனக்குப் பெரிய அங்கீகாரம். சதா சார்தான் ராஜா சாரின் லைவ் கச்சேரிகளுக்கு வாசித்து வந்தார். என்னுடைய குருமார்களில் ஒருவர். தனது முதுமையின் காரணமாக சதா சார், என்னை ராஜா சாருக்குப் பரிந்துரைத்தார். ராஜா சாரின் ‘இளைய நிலா’ பாடலைக் கேட்டுத்தான் 12 வயதில் நான் கிதார் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

பின்னர் சென்னை இசைக் கல்லூரியில் வயலின் பட்டப்படிப்பை முடித்தபின், இசைக் கச்சேரிகளுக்கு வாசித்தபடி விளம்பர ஜிங்கிள்ஸ் உலகத்தில் நுழைந்தேன். இப்போது வரை ஆயிரம் ஜிங்கிள்களுக்கு இசையமைத்திருக்கிறேன். விளம்பர உலகம், பக்திப் பாடல்கள், தனிப் பாடல்கள், ஆண்டுக்கு இரண்டு திரைப் படங்கள் என பிசியாக இருந்தாலும் திரையிசையில் அடுத்தடுத்த உயரங்களை நோக்கி நகரும் தருணங் களுக்காகக் காத்திருக்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x