Last Updated : 10 Aug, 2025 11:14 AM

 

Published : 10 Aug 2025 11:14 AM
Last Updated : 10 Aug 2025 11:14 AM

‘காத்துவாக்குல ஒரு காதல்’ படம் எப்படி? - கலவரத்தில் சிக்கும் காதல்!

சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் குடிநீர், சாலை போன்ற அடிப்படைக் கட்டுமானம் முன்னேற்றமடையாத பகுதிகளில் குற்றங்களும் மலிந்திருக்கும். அதேநேரம், அங்கே பிறந்து வளர்ந்தவர்களே, தங்கள் வாழ்விடப் பகுதியின் மீது காலம்காலமாகப் படிந்திருக்கும் கறையைக் கழுவிக் களைந்துவிட வேண்டும் என்றும் முயல்வார்கள்.

அப்படி முயலும் மாஸ் என்கிற இளைஞனின் காதல் வாழ்க்கை யையும் அவன் கண்முன் காணும் நிழலுலகமும் அவனை எப்படிப்பட்ட தாதாவாக உருக்கொள்ள வைத்தன என்பதை, புதுவிதக் கதைசொல்லல் வழியாக விரிக்கிறது ‘காத்துவாக்குல ஒரு காதல்’. அதாவது, இரண்டாம் பாதிப் படத்தைப் பார்க்காமல், இப்படத்தின் திரைக்கதை வெளிக்குள் பார்வையாளர்களால் சஞ்சரிக்க முடியாது.

முதல் பாதியில், வடசென்னையின் அரசியல், நிழலுலகம் இரண்டும் பின்னணிப் பிணைந்து நிற்கின்றன. ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறதோ, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாகத் தாதாக்களும் இருக்கிறார்கள். கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும்போது இந்த ரோலர் கோஸ்டர் அதிகாரம் காரணமாகத் தாதாக்கள் ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளுகிறார்கள்.

உயிரைக் கொடுப்பேன் எனக் கூறி விசுவாசியாக அருகில் இருப்பவர்களே வன்மத்துடன் அறுத்துப் போடுகிறார்கள். இந்த ரத்தக் களரிக்கு அந்தப் பகுதியின் அப்பாவி இளைஞர்களை நிழலுலகினர் எப்படித் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டிய விதம் பதைபதைக்க வைக்கிறது.

உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நடத்திக்கொண்டே, தன்னுடைய பகுதியின் இளைஞர்கள், தவறான வழியில் சென்றுவிடக் கூடாது என்று அவர்களை நல்வழி நடத்தும் மாஸ் என்கிற ஜீவாவின் காதல் வாழ்க்கையை இந்த நிழலுலகக் கதையுடன் இணைத்த விதம் சற்றுக் குழப்புகிறது.

கொஞ்சம் பிசகினாலும் மாஸும் ஜீவாவும் வேறுவேறு கதாபாத்திரங்களோ என எண்ண வைக்கும் விதமாக, பாரிய வேறுபாடும், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியும் காட்டி முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் படத்தை எழுதி, இயக்கி நாயகனாக நடிதிருக்கும் மாஸ் ரவி. அடிப்படையில் ஒரு ஸ்டண்ட் கலைஞராக இருக்கும் அவர், வன்முறைக்கு எதிரான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதைச் சுவாரசியமான, எதிர்பாராத திருப்பங்கள் வழியாகச் சொல்ல முயன்றதற்காகவே பாராட்டலாம்.

ஜீவா அப்பாவியாக இருந்த நாள்களில் அவரைக் காதலிக்கும் மேகா, ஜீவா, மாஸ் என்கிற தாதாவாக வளர்ந்து நிற்கும்போது அவரைக் காதலிக்கும் பல்லவி ஆகிய இருவரும் தங்கள் அழுத்தமான நடிப்பால் மனதில் பதிந்துவிடுகிறார்கள்.

நிழலுலகமும் காதலும் இணையும் கலவர பூமியாக விளங்கும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சின்னச்சின்னக் காதல் பாடல்கள் இனிமையாக ஈர்க்கின்றன. வடசென்னையின் வாழிடங்களை உள்ளது உள்ளபடிக் காட்சிப்படுத்தியிருக்கும் ராஜதுரை - சுபாஷ் மணியன் ஆகியோரின் ஒளிப்பதிவும் திரை அனுபவத்துக்குக் கைகொடுத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x