Published : 01 Aug 2025 07:32 AM
Last Updated : 01 Aug 2025 07:32 AM
“குடும்பத்துடன் பார்க்கலாமா?” - திரையரங்கு போய் ரூபாய் 2 ஆயிரம் செலவழிக்கச் சக்தியுள்ள, சற்று மூத்த ரசிகர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி இது. ரத்தமும் வன்முறையும் நிறைந்த மாஸ் திரைப்படக் கலாச்சாரம் பெரும் விஷமாக மாறிவிட்ட தற்போதைய சூழலில், ஒரு மெல்லிய காதல் கதை அல்லது ஒரு முழு நீள நகைச்சுவைக் கதை தரமான பொழுதுபோக்குப் படமாக வருவது மிகவும் குறைந்துவிட்டது.
அந்தக் குறையைப் போக்கிடும் வகையில், குடும்பமாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டாடக் கூடிய ஒரு கிராமத்து நகைச்சுவை விருந்துதான், கன்னடத்தில் வெளியாகி தற்போது கர்நாடகத்தைத் தெறிக்கவிட்டிருக்கும் ‘சு ஃப்ரம் சோ’ (சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா).
வெள்ளந்தியான மனிதர்கள் நிறைந்த ஒரு தென் கர்நாடகக் குக்கிராமம். அங்கே வாழும் அசோகா என்கிற இளைஞனை, ஒரு பெண்ணின் ஆவி பிடித்திருப்பதாக ஊர் மொத்தமும் நம்புகிறது. அவ்வாறு நம்பப்படும் அந்த ஆவி, அக்கிராமத்தை, அந்த இளைஞனை, அவனுடைய குடும்பத்தை என்னவெல்லாம் செய்கிறது என்பதை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து சொல்லியிருக்கின்றனர்.
கூடுதலாக, ஓர் அழுத்தம் திருத்தமான குடும்ப வன்முறைக்கு எதிரான செய்தியை, தேனில் தோய்த்தத் துவர் மருந்தாகவும் கொடுத்திருக்கின்றனர். எந்த விதமான ஆர்ப்பாட்டமான வெளியீட்டு விழாக்களும் நேரம் கொல்லும் நேர்காணல்களும் இல்லாமல் நேரடியாகப் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த எதிர்மறை உத்தியும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய திரைப்படத் தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தன. வெகு காலத்துக்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு கன்னடப் படம். ஒவ்வொரு தனி கதாபாத்திரத்தையும் பெயரைத் தாண்டி அவர்களின் தனிக் குணாதிசயங்களோடு நினைவில் கொள்ளும்படியாக எழுதப்பட்டி ருக்கிறது. ஓர் எளிய கிராமத்தின் எல்லா அடையாளங்களும் வெகு நேர்த்தியாக, இயல்பு மீறாமல் நிறுவப்பட்டிருக்கிறது முதல் சிறப்பு.
அமானுஷ்யத்தையோ, மலினமான ‘ஜம்ப் ஸ்கேர்’ திகில் காட்சிகளையோ நம்பாமல், இயல்பான பகடியில் எந்த மூடநம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக் காமல் வெகு கவனமாகத் திரைக்கதைப் பின்னப்பட்டிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சிரிக்க வைத்துக்கொண்டே நகர்ந்தாலும் ஒரு மெல்லிய சரடாக, ஆணாதிக்கக் குடும்பம் ஒன்றில் பிறந்து, வாழும் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதையை அதற்குள் கோத்தது அழகு.
புத்தாயிரக் கன்னட படவுலகில் நம்பிக்கையான ஆளுமைகளில் முதன்மை யானவர் எழுத்தாளர், நடிகர், இயக்குநர் ராஜ் பி.ஷெட்டி. இப்படத்தின் மிகப்பெரிய ஆச்சரியமும் அவரே. தயாரித்தது மட்டுமல்லாமல் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து தன்னை முன்னிறுத்தாமல் கதையை முன்னிறுத்தி நடித்திருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் அப்பாவி மனிதர்களும் அவர்களுக்கிடையே நிகழும் அன்றாட வழக்கிலான இயல்பான நகைச்சுவை வசனங்களும்தான். எடுத்துக்காட்டாக ஒரு சிறு கடையின் வாசலில் கண் தெரியாத முதியவர் நாயகனிடம் பேசுகிறோம் என்பது தெரியாமல் அவரைத் திட்டி தீர்க்கும் ஒரு நிமிட காட்சி. மற்றொன்று, குடும்ப வன்முறைக்கு ஆளாகும் கதை யின் நாயகி, தன் அம்மாவாக பாவித்து ஆவியிடம் கண்ணீருடன் பேசும் காட்சி.
வெறும் உடல் மொழிகளால், சின்ன எதிர்வினைகளால், கதாபாத்திரத்தின் தன்மைகளால் என நகைச்சுவையின் அத்தனை கூறுகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். பொதுவாக, இது போன்ற படங்களை மென்மையாக முடிப்பதே வழக்கம். ஆனால் ஒரு பெரியத் திருப்ப மாக படத்தின் இறுதிக்காட்சிகள் வேறொரு நிறம் கொண்டு வேறொரு தளத்தை அடைகின்றன.
ஜே.பி.துமிநாத்தின் நடிப்பும் இயக்கமும் முதல் தரம். முன்னணி நட்சத்திரங்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தராத ஒரு மகிழ்வான அனுபவத்தை, ஒரு சின்ன அகல் விளக்குபோல் இப்படம் நிறைவாகக் கொடுக்கிறது. வெளிவந்த ஒரே வாரத்தில் கர்நாடகத்தில் குடும்பங்களைத் திரையரங்குகள் நோக்கி ஈர்த்து, ரூ.25 கோடி வசூலைத் தொட்டிருப்பதே இதன் வெற்றிக்குச் சான்று.
- tottokv@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT