Published : 27 Jul 2025 10:08 AM
Last Updated : 27 Jul 2025 10:08 AM
தெலுங்குப் படவுலகின் முன்னணி மாஸ் ஹீரோ, ஜனசேனா கட்சியின் தலைவர், ஆந்திராவின் துணை முதல்வர் என அடுத்தடுத்த உச்சங்களைத் தொட்டு நிற்பவர் பவன் கல்யாண். அவரது நடிப்பில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்த படம். இவ்வளவு காலம் ரசிகர்களைக் காக்க வைத்ததற்கான காரணம் படத்தில் இருக்கிறதா என்றால், ஆம்! இல்லை! என்கிற கலவையான உணர்வைத் தருகிறது படம்.
செல்வந்தர்களிடம் திருடி, ஏழை மக்களுக்குக் கொடுக்கும் ஒரு நாட்டுப்புறத்து வீரன் ஹரிஹர வீரமல்லு. டெல்லியைத் தலைநகராக்கி அரசாளும் பேரரசன் ஔரங்கசீப் அமரும் சிம்மாசனத்தில் உள்ள கோகினூர் வைரத்தைத் திருடிக்கொண்டு வருவதற்காக அமர்த்தப்படும் குழுவுக்குத் தலைமை வகிக்கிறான். டெல்லியை நோக்கி முன்னேறும் பயணத்தில் சாமானிய இந்துக்கள் ஒடுக்கப்படுவதைக் காணும் அவன், ஔரங்கசீப்பின் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் ஒரு வீரம் செறிந்த புரட்சியாளனாக மாறுகிறான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையிலிருந்து வேறொரு வேலையை அவன் விரும்பாமலேயே கையிலெடுக்கும்போது என்ன நடக்கும் என்பதை நோக்கி இப்படத்தின் முதல் பாகம் முடிக்கப்பட்டிருக்கிறது.
ஏழைகளுக்காக இரங்கும் ‘ராபின் ஹூட்’ போன்ற ஒரு வீரனுக்குத் தரப்பட்ட ‘அசைன்மெண்ட்’டும், அதற்காகப் பிரத்யேகத் திறமைகள் கொண்ட ஒரு குழுவும் என சுவாரசியமாக நிர்ணயிக்கப்பட்ட மைய இலக்கை நோக்கிப் பயணித்த கதை, திடீரென முடியாட்சியின் கொடுமைகளுக்கு எதிரான போராட்டமாக, இந்து மக்கள் செய்யும் கிளர்ச்சியாக, ஓர் எதிர்ப்பின் கதையாகத் தொடக்க இலக்கை மறந்து, வேறோர் இலக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது.
வரலாற்றிலிருந்து சில தகவல்களை, தரவுகளை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் திரைக்கதாசிரியர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் போன்று திரைக்கதையில் கற்பனையின் சுமையைத் திணறத் திணற ஏற்றி வைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சித்தரிப்புகள் முற்றிலும் கற்பனையான, திரைப்படச் சுவாரசியத்துக்காகச் சேர்க்கப்பட்டவை என்பதை மனதில் கொண்டு இப்படத்தைப் பார்க்கலாம்.
நடிப்பைவிட, ஆக்ஷன் காட்சிகளில் தனக்குரிய தனித்துவத்தைப் பவன் கல்யாண் காட்டியிருக்கிறார். பாபி தியோல் ஔரங்கசீப்
ஆகக் கச்சிதம். பிரம்மாண்டக் காட்சிக் கற்பனை, அவற்றின் படமாக்கம் ஆகியன மாஸ் திரை அனுபவமாகக் கவர்கின்றன. வீர மல்லு கோகினூர் வைரத்தை அடுத்த பாகத் தில் கைப்பற்று வார் என்று எதிர்பார்க் கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT