Published : 13 Jul 2025 11:24 AM
Last Updated : 13 Jul 2025 11:24 AM
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தாலியில் புகழ்பெற்று விளங்கியவர் நாடகாசிரியர் லூகி பிராண்டெல்லோ (1867-1936). உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது ‘சிக்ஸ் கேரக்டர்ஸ் இன் சர்ச் ஆஃப் அன் ஆதர்’ என்கிற நாடகத்தில், அவர் உருவாக்கிய 6 கதாபாத்திரங்கள் அவரைத் தேடி வந்து உரையாடுவது போன்ற உத்தி முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
திரை வெளியில், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் வரை இந்த உத்தி பல படங்களில் ஊறுகாய்போல் தொட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ராகவேந்திரா (இணைந்து எழுதியிருப்பவர் எம்.ஸ்ரீனிவாசன்), இந்தச் சுவாரசியமான உத்தியை ஒரு த்ரில்லர் திரைக்கதைக்குள் முழு வீச்சில் பயன்படுத்துவதில் போதிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
நடுத்தர வயது எழுத்தாளரான வாசன் (நாகராஜன் கண்ணன்), காணொளி களின் காலத்தில் அச்சில் விரும்பி வாசிக்கும் வாசகர்களுக்காக ஒரு தொடர் கதையை எழுதுகிறார். அதில், தனது 50வது கொலையைச் செய்யவிருக்கும் தாதாவான தனபால் (சாய் தீனா), மகனுக்குப் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத வீட்டுப் பணிப் பெண் செல்வி (ஐஸ்வர்யா ரகுபதி), அவருடைய எஜமானி, படித்து மருத்துவர் ஆக விரும்பும் ஓர் ஏழை கிராமத்து விவசாயியின் மகள் ஆகிய நான்கு கதாபாத்திரங்களை உருவாக்குகிறார்.
வாழ்க்கை உருவாக்கும் சிக்கல்களில் இக்கதாபாத்திரங்கள் சந்திக்கும் முரண்களும் முறுகல்களும் அக்கதாபாத்திரங்களைக் கோபப்படுத்துகின்றன. அவை, தங்களைப் படைத்த வாசனை அவரது வீட்டிலும் வெளியிடங்களிலும் சந்தித்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றன. இந்த ‘சர் ரியலிஸ்ட்’ சூழ்நிலையில் சிக்கும் வாசன், தன்னுடைய தன்முனைப்பைத் தலைமுழுகிவிட்டு அக்கதாபாத்திரங்களின் குரலுக்குச் செவி மடுத்தாரா என்பதுதான் கதை.
சில காட்சிகளில் மட்டும் பதிப்பாசிரியர் ரங்கராஜனாக வரும் டெல்லி கணேஷ், ‘இவரை இழந்துவிட்டோமே’ என ஏங்க வைத்துவிடுகிறார். வாசனின் கதாபாத்திரங்களாக வருபவர்கள் ஒவ்வொருவரிடமும் நேர்த்தியான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குநர். வாசனாக நடித்து உரையாடலையும் எழுதியிருக்கும் நாகராஜன் கண்ணன், ‘யார் இவர்’ எனக் கேட்கத் தோன்றும் விதமாக நடிப்பில் முழு ஈடுபாட்டைக் கொட்டியிருக்கிறார். எந்தவித வணிக அம்சங்களும் இல்லாமல் ஒரு ‘ஃபியூர் சினிமா’வுக் குரிய முனைப்புடன், அதேநேரம் ஒரு த்ரில்லர் படத்துக்குரிய பொழுது போக்குத் தன்மையை உள்ளே பொதிந்து வைத்து அசரடிக்கிறது இந்த ‘மாயக்கூத்து’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT