Last Updated : 29 Jun, 2025 08:51 AM

3  

Published : 29 Jun 2025 08:51 AM
Last Updated : 29 Jun 2025 08:51 AM

‘திருக்குறள்’ படம் எப்படி? - தரமான எழுத்தும் நடிப்பும்!

வாழ்க்கையிலிருந்து, அதன் அனுபவங்களிலிருந்துதான் இலக்கியம் பிறக்கிறது என்பதற்கு திருக்குறள் சிறந்த எடுத்துக்காட்டு. சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட திருக்குறள், மனித குலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான அறத்தையும் நன்னெறிகளையும் ஒன்றே முக்கால் அடியில் ரத்தினச் சுருக்கமாக போதிக்கிறது. எல்லிஸ் பிரபு 1812இல் அச்சேற்றிய பிறகுதான் திருக்குறளின் உலகப் பரவல் தொடங்கியது. திருக்குறளின் பெருமையைத் திரைப்பட வடிவில் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல!

ஆனால், ஒரு சுவாரசியமான திரைக்கதைக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டும் தேர்ந்தெடுத்த குறட்பாக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரங்களை முழுமையுடன் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் வீரமும் காதலும் கொடையும் ஈகையும் தியாகமும் மொழிப்பற்றும் வெளிப்படும் விதமாகக் காட்சிகளை அமைத்திருக்கிறார் கதை, திரைக்கதை, உரையாடலை எழுதியிருக்கும் - செம்பூர்.கே.ஜெயராஜ். இன்றைய தலைமுறைக்கும் திருக்குறளின் பெருமை சென்றுசேர வேண்டும் என தற்காலப் பொதுப் பேச்சு வழக்கிலும் உரையாடலை அமைத்திருப்பது கவர்கிறது.

தனக்குக் கிடைத்த பட்ஜெட்டில் தேர்ச்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு காலகட்டமும் கலைநயமும் குன்றாமல் படத்தைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். ‘காமராஜ்’ ‘வெல்கம் பேக் காந்தி’ ஆகிய தரமும் கச்சிதமும் கொண்ட பயோபிக் படங்களைத் தந்தவர்.

கடைச் சங்க கலத்தில் கதை நடக்கிறது. வள்ளுவ நாட்டில் மனைவி வாசுகியுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் வள்ளுவர், தனது மாணவர்களுக்கு தமிழையும் கவிதையையும் பயிற்றுவித்து வருகிறார். அதேநேரம் திருக்குறளையும் எழுத் தொடங்குகிறார். இதற்கிடையில் முதிர மலையை ஆட்சி செய்து வரும் வள்ளல் குமணன், தன்னுடைய தம்பி இளங்குமணனுக்கு ஆட்சியைக் கொடுத்துவிட்டு காட்டில் வாழ்கிறார்.

குமணனைப் போல் இல்லாமல் குடிகளை வரி என்கிற பெயரால் வருத்தி, நன்னன் ஆட்சி செய்யும் அண்டை நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறான் இளங்குமணன்.அந்தப் போரில் வள்ளுவரின் பங்கு என்ன? அவர் திருக்குறளை எழுதி முடித்து பாண்டியன் அவையில் எவ்வாறு அரங்கேற்றினார் எனக் கதை செல்கிறது.

வள்ளுவராக நடித்திருக்கும் கலைச்சோழன், வாசுகியாக வரும் தனலட்சுமி இருவரும் இயல்பான நடிப்பால் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களில் வரும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவ்வளவு கச்சிதம். திரைக்கதை, உரையாடல், நடிப்பு, இயக்கம் போலவே இளையராஜாவின் இரண்டு பாடல்கள், பின்னணி இசை இரண்டும் இப்படத்தை பெருமை செய்திருக்கின்றன. திருக்குறளின் மேன்மையை சிறந்த பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருப்பதற்காகவே இப்படத்தைக் குடும்பத்துடன் காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x