Published : 18 May 2025 09:31 AM
Last Updated : 18 May 2025 09:31 AM
மேஜிக் நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே இறந்து விடுகிறார் யோகி பாபுவின் அப்பா. தந்தை வழியில் அதே கலையைத் தன் வாழ்வாதாரமாக எடுத்துக்கொள்கிறார். ஆனால், அதில் பாதிக் கிணறுகூட தாண்டாமல் நிகழ்ச்சிகளில் சொதப்புகிறார். ஆறுதலாக, யோகி பாபுவின் திறமை மீது நம்பிக்கை வைக்கிறார் ஒரு பெண்.
அதைக் கண்டு குமுறும் சில அடாவடி இளைஞர்கள், யோகிபாபுவின் ஒரு கையை வெட்டிவிடும்படி கூலிப்படை முரடர்களை அனுப்புகிறார்கள். அப்போது காயத்துடன் தலைமறைவாகும் யோகிபாபு, மேஜிக் கலையை வைத்தே தன்னைத் துன்புறுத்தியவர்களுக்கு எப்படிப் பாடம் புகட்டினார் என்பதுதான் ‘ஜோரா கையத் தட்டுங்க’ படத்தின் கதை.
நீலகிரியில் நடக்கும் கதையில், யோகி பாபுவின் வீடு, அதன் அமைவிடம், வீட்டின் உள்ளே செய்யப்பட்டிருக்கும் கலை இயக்கம், மது அம்பாட்டின் ஒளிப்பதிவு என எல்லாம் கவர்கின்றன. யோகி பாபு தன்னுடைய நகைச்சுவை ஒன்லைனர்கள் இல்லாமல் முழுவதும் எதிர்மறைக் குணச்சித்திரக் கதாபாத்திரம் ஏற்று நன்றாகவே நடித்திருக்கிறார்.
காட்சிகளில் அவரால் வேகமாக நடக்க முடியாமல் ஊர்ந்து நடப்பது பரிதாபமாக இருக்கிறது. அவர் மீது பரிவும் மெல்லிய காதலும் கொண்டிருக்கும் சாந்தி ராவ் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், யோகி பாபுவுக்கும் அவருக்குமான காதல் வலிந்து ஒட்ட வைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
பழிவாங்கும் மேஜிக் கலைஞனின் கதை என்கிற அருமையான களத்தில் ‘மேஜிக்’ கலையை வைத்து சுவாரசியம் கூட்டிருக்க வேண்டிய காட்சிகளில் எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள். திரைக்கதையை இணைந்து எழுதியிருக்கும் வினீஷ் மில்லனியம், பிரகாஷ்.கே. ஆகிய இருவரும் கிடைத்த பட்ஜெட்டில் முடிந்தவரை முயன்றிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT