Published : 09 May 2025 02:39 PM
Last Updated : 09 May 2025 02:39 PM
உளவியல் சார்ந்து பதின்ம வயதினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம். குறுகுறுப்பான பதின்மம் எதிர்பாலினர் மீதான ஈர்ப்பால் அதிகக் குறுக்கீட்டைச் சந்திக்கும் பருவம். இன்னொரு பக்கம், பெற்றோரின் அதிகப்படியான கண்டிப்பு, பள்ளிப் பாடங்களின் சுமை என அழுத்தும் மனச்சுமையால் ‘பிகேவியரல் சேன்ஞ்சஸ்’ என்கிற பெரிய சிக்கல்களையும் சந்திக்கிறார்கள். இந்தப் படம் தமிழ் சினிமாவில் இதுவரைக் கையாண்டிராத பதின்ம வயதினரின் உளவியல் சிக்கலை ஒரு ஹாரர் த்ரில்லராகக் கையாண்டிருப்பது முற்றிலும் புதிய முயற்சியாக அமைந்திருக்கிறது.
குறிப்பாகத் திகில் பட பாணியில், இதுவரை யாரும் தொடாத கதைக்கருவில் வெகுசில பதின்ம வயதினரைப் பாதிக்கும் உளவியல் சிக்கலைக் கதைக்களமாக்கியிருக்கிறது.
பதின்ம பருவத்தின் தொடக்கத்திலிருக்கிற தரணின் கண்ணுக்கு, வீட்டுக்குள்ளும் வெளியிலும் முகக்கவசம் அணிந்த உருவம் ஒன்று அடிக்கடி தென்படுகிறது. அது தன்னை 'கீனோ' என சொல்லிக் கொண்டு 'என்னிடம் வா', 'என்னைக் கட்டியணைத்துக் கொள்' என்று அழைக்கிறது.
அந்த உருவத்தைக் கண்டு தரண் மிரள்கிறான். ஒருமுறையல்ல, இரு முறையல்ல, அவனது வீடு, பள்ளிக்கூடம், அவன் தனிமையில் இருக்கும் இடங்கள் என பலமுறை அப்படியே கீனோ அவனுக்குத் தோன்ற தரணின் பெற்றோர் கலக்கமடைகிறார்கள். பேய், பிசாசு என அமானுஷ்யச் சக்தி ஏதேனும் அவனைச் சுற்றி நடமாடுகிறதா எனத் தெரிந்துகொள்ள அதற்கான நபர்களை வரவைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள். வந்தவர்கள் 'அப்படியெல்லாம் ஏதுமில்லை' எனச் சொல்லிவிட, 'வேறு என்ன காரணமாக இருக்கும்?' என தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்கள். இப்படி நகரும் கதையில் பிரச்சனையிலிருந்து தரண் மீட்கப்பட்டான இல்லையா என்பது கிளைமாக்ஸ்.
படத்தின் கதையும் களமும் இதுவரை நாம் கேள்விப்படாததாக, எந்தவொரு சினிமாவிலும் பார்க்காததாக, சிறுகதை நாவல் என எதிலும் படிக்காத உளவியல் சிக்கலை கையெடுத்து இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஆர்.கே.திவாகருக்கும் சமூகத்தின் மீது இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது.
கதைநாயகன் தரணாக கந்தர்வா. பயமூட்டும் பேய் போன்ற மர்ம உருவத்திலிருக்கும் கீனோவை கண்டு பயப்படுவதாகட்டும், நாட்கள் போகப்போக 'என்னை ஏன் பயமுறுத்துகிறாய்' என அதனிடம் ஆத்திரப்படுவதாகட்டும், ஒரு கட்டத்தில் அதை எதிர்த்து மோதுவதாகட்டும் அப்பாவித்தனம் சூழ்ந்த முகபாவங்களுடன் கந்தர்வா தந்திருக்கும் நடிப்பு கச்சிதம்.
கீனோவைக் கண்டு அடிக்கடி மிரண்டு போகிற மகனை ஆசுவாசப்படுத்த அருகே படுக்கவைத்துத் தாலாட்டு பாடுவது, மகனை விட்டு வெளிநாடு போனபின் வீடியோ காலில் அதே தாலாட்டைத் தொடர்வது எனத் தாய்ப்பாசத்தை அளவாய் அழகாய் பரிமாறியிருக்கிறார் ரேணு சதீஷ்.
மகன் அனுபவிக்கும் அவஸ்தைகள் ஒரு பக்கம் மனதை ரணப்படுத்த, வேலை நிமித்தம் மனைவி வெளிநாடு சென்றுவிட மகனைத் தனியாகக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு சூழ்ந்துகொள்ள, அந்த நேரமாகப் பார்த்து வேலை பறிபோய்விட, வீடு மாற வேண்டிய கட்டாயமும் உருவாக... அத்தனை மன உளைச்சல்களையும் இயல்பான நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் கதைநாயகனின் அப்பாவாக வருகிற மகாதாரா பகவத். கதைநாயகனுக்கு நிஜ அப்பாவும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தி.
மகாதாரா பணிபுரியும் கார் ஷோரூமுக்கு அடிக்கடி சென்று டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு கார் வாங்காமல் இழுத்தடிக்கிறவர் கலகலப்புக்கு உதவியிருக்கிறார். மனநல மருத்துவராக வருகிறவர் 'கீனோ'வின் பின்னணி என்ன என்பதை அலசி ஆராய்ந்து விளக்குகிற விதம் கிளைமாக்ஸுக்கு சுறுசுறுப்பு தருகிறது.
பல காட்சிகள் இருளில் கடந்தோட அவற்றை மிகத் தெளிவாக- பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி.படத்தை இயக்கியிருக்கிற ஆர் கே திவாகரின் பின்னணி இசை காட்சிகளை பரபரபாக்கும் விதத்தில் மிரட்டலாக வெளிப்பட்டிருக்கிறது. ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு கதைக் களத்தை உணர வைக்கிறது. படப்பிடிப்பு இடங்கள் குறைவு என்றாலும் முடிந்தவரை வெவ்வேறு கோணங்களில் காட்சிகளைப் பதிவு செய்து, கதையோட்டத்துடன் இணைந்து செல்ல ஒளிப்பதிவு சீராகத் துணை புரிந்திருக்கிறது. குறிப்பாக கீனோ வரும் காட்சிகளில் ஒளிப்பதிவு செய்யும் மாயம் திகிலைக் கடத்துகிறது.
கிருத்திகா காந்தியின் எடிட்டிங் கச்சிதம். த்ரில்லர் படம் என்றாலே, காட்சிகள் அதிரடியாக ஓட வேண்டும் என்கிற எழுதப்படாதச் சட்டத்தை மீறி இயல்பான அளவுக்குக் காட்சிகளைச் செதுக்கி இருக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்குத் தேவையானபடி படத் தொகுப்புப் பணியைக் கையாண்டிருக்கிறார் கிருத்திகா காந்தி.
'வெற்றிடம்', 'நெகடிவ் ஸ்பேஸ்', 'பாசிடிவ் மாடுலேட்டர்ஸ்', 'கீனோபோபியா' என இதுவரை யாரும் கையாளாத மருத்துவ அறிவியல் விஷயங்களைத் திரட்டிக்கொண்டு, சமூக அக்கறையுடன் கீனோவை ஒரு திகில் த்ரில்லராக தந்திருக்கும் இப்படக்குழுவினர் பாராட்டுக்கு உரியவர்கள். இளையோரும் பெற்றோரும் அவசியம் காண வேண்டிய திகில் அனுபவம் இந்த கீனோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT