Published : 02 May 2025 06:53 AM
Last Updated : 02 May 2025 06:53 AM
இமான் என்றாலே ‘மெலடி’களின் இளவரசன் என்று பெயர் வாங்கியவர். அவரது பின்னணி இசையிலும் மென் வாத்தியங்கள் மனதை வருடும். அப்படிப்பட்ட ‘இமான் 2.0’ என்று சொல்லும் விதமாக, முதல் முறையாக ஒரு சீரியல் கில்லர் புலன்விசாரணைப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
மே 16ஆம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகவிருக்கும் அந்தப் படம் 'லெவன்'. சுந்தர்.சியின் உதவியாளர் லோகேஷ் அஜில்ஸ் எழுதி, இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘சரபம்’ படத்தில் நாயகனாக நடித்த நவீன் சந்திரா ‘கம்பேக்’ தரவிருக்கும் படம்.
இவருடன் ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘போர்த்தொழில்’, ‘ராட்சசன்’ படங்களையெல்லாம் இந்தப் படம் தூக்கிச் சாப்பிடும் என்று இயக்குநர் பாக்யராஜ் பாராட்டியிருக்கிறார். இப்படத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பாக்யராஜ்: “நான் படங்களை இயக்குவதற்கும், அவற்றைத் தேர்வு செய்து பார்ப்பதற்கும் தொடர்பே இருக்காது.
எனக்கு கிரைம் இன்வெஸ்டிகேஷன் ஆக்ஷன் படங்கள்தான் மிகவும் பிடிக்கும். அந்த வகைப் படங்களைப் பார்க்கும்போது மூளைக்கு நல்ல வேலை கிடைக்கும். அடுத்தது என்ன என்கிற ஆர்வம் மூளையைச் சுறுசுறுப்பாக்கிவிடும். ‘விடியும் வரை காத்திரு', ‘ஒரு கைதியின் டைரி' என இரண்டு படங்களை இந்த வகைமையில் இயக்கியிருக்கிறேன். ‘லெவன்’ ரசிகர்களை வெல்லும்” என்றார்.
பார்வை தந்தவளுக்காக! - இசைக் கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு பார்வையற்ற இளைஞன். அவனது குரலுக்கு ரசிகையாகும் ஒரு பெண், அவனுக்கு விழியாகி அவன் விரல் பற்றி வாழ்க்கை முழுவதும் அவனுடன் நடக்க முன்வருகிறாள். காதலியின் கண்கள் வழியாகப் பார்க்கத் தொடங்கிய அவன், ஒரு சாபம்போல் காதலி என்கிற தன் கண்களை இழக்கிறான். அவனுடைய காதலிக்கு என்ன நடந் தது? பார்வையில்லாமல் அவன் எதிரிகளை எப்படிப் பந்தாடினான் என்கிற காதல் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகி யிருக்கிறது ‘அகமொழி’. மலையாளத்திலிருந்து வந்து தமிழில் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் சசீந்திரா கே.சங்கர்.
சச்சூஸ் கிரியேஷன்ஸ் சார்பில் படத்தைத் தயாரித்திருப்பவர் பவுலோஸ் ஜார்ஜ். ஆதம்ஹாசன் பார்வையற்ற இளைஞராகவும் அவருடைய காதலியாக நேஹா ரத்னாகரனும் நடிக்க, இவர்களுடன் தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் எனத் தமிழ் ரசிகர்கள் அறிந்த பல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு: “தமிழ் தெரியாத தயாரிப்பாளர் அழகு தமிழில் படத்துக்குத் தலைப்பு வைத்திருக்கிறார்.
தனது மொழியில் தமிழை எழுதி வைத்து இந்த மேடையில் படிக்கிறார். தயாரிப்பாளர், இயக்குநரின் தமிழ் மீதான மரியாதை வியக்க வைக்கிறது. நல்ல கதை, படமாக்கம் ஆகியவற்றுக்காக இதுபோன்ற படங்களை மக்கள் பார்க்க வேண்டும். தியேட்டரில் டிக்கெட் விலை எவ்வளவு என அரசு கட்டணம் நிர்ணயிக்கும்
போது, பாப்கார்ன் இந்த விலைக்குத் தான் விற்கப்பட வேண்டும் என ஏன் விலை நிர்ண யிக்க முடியாது” என்று கேள்வி எழுப்பினார். இப்படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT