Published : 25 Apr 2025 07:42 AM
Last Updated : 25 Apr 2025 07:42 AM
மணிகண்டன் நடிப்பில் ‘குட்நைட்’, ‘லவ்வர்’ ஆகிய தரமான படங்களைக் கொடுத்த நிறுவனம் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ். அதன் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியிருக்கிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்க, அவர்களுடன் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல் சேர்ந்துகொள்ள, அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி, இயக்கியிருக்கிறார். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படத்தின் டீசர், டிரைலர் தொடங்கி ‘இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் கதை’ என்பதைச் சொல்கிறது. சசிகுமாரின் குடும்பம் எந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வருகிறது? - கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னர், 2022இல் இலங்கை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. கட்டுப்படுத்த முடியாத பணவீக்கத்தால் பொருள்களை வாங்க முடியாதபடி விலைவாசி 500 மடங்கு வரை உயர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில்தான் யாழ்ப்பாணத்திலிருந்து சசிகுமாரின் குடும்பம் தமிழ்நாட்டுக்கு வருகிறது.
அவர்களுக்கு இங்கே என்ன நடக்கிறது. கிளைமாக்ஸில் அவர்கள் இங்கேயே இருந்தார்களா, இல்லை சொந்த நாட்டுக்குத் திரும்பினார்களா என்பது கதை. தமிழ்நாட்டில் சசிகுமார் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள இங்கே யோகிபாபு இருக்கிறார். சிம்ரனுடைய சகோதரராக யோகிபாபு நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் என்றாலே க்ரைம் த்ரில்லர்தான் எடுப்பார்கள் என்றாகி விட்டது. நீங்கள் குடும்பப் படத்துடன் வருகிறீர்கள்? - காமெடி, எமோஷன் இரண்டும் கலந்த குடும்பப் படம் என்றால் என்னை எல்லாத் தரப்பு ஆடியன்ஸிடமும் எளிதாகக் கொண்டுபோய் சேர்க்கும் என்கிற நம்பிக்கை. இன்னொரு காரணம், க்ரைம் த்ரில்லர்களுக்கு இணையாகத் தற்போது குடும்பப் படங்களுக்குத் தென்னிந்திய சினிமாவில் கிடைத்து வரும் வரவேற்பு.
இந்தப் படத்தில் ஷான் ரோல்டன் இசையில் மொத்தம் 6 பாடல்கள். எல்லாமே கதையை நகர்த்தும் பாடல்கள். இதுவொரு மியூசிக்கல் ஃபிலிமும் கூட. இசை மட்டுமல்ல; இதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவையும் கதையை நகர்த்தும் ஒன்றாகவே இருக்கும். எதுவொன்றும் ஆடியன்ஸ் சிரிக்க வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டதில்லை. கதாபாத் திரங்களின் சிரிப்புக்குள் ஒளிந்திருக்கும் வலி நம்மை முள்ளாகத் தைக்கும்.
சசிகுமார் - சிம்ரன் இணை, மற்ற நடிகர்கள் பற்றிக் கூறுங்கள்.. சசி சாரை இதில் தர்மதாஸ் என்கிற மிகவும் வெள்ளந்தியான ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கலாம். விறைப்பான சசியை ஒரு காட்சியில் கூடப் பார்க்க முடியாது. சிம்ரன் மேடமும் அப்படித்தான். இரண்டு பேருக்கும் அட்டகாசமான ‘ரொமான்’ஸும் இருக்கிறது. நகைச் சுவை - எமோஷன் இரண்டையும் அழகாக பேலன்ஸ் பண்ணி நடிக்கக்கூடியவர் என்பதால்தான் சிம்ரன்தான் இதில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
இவர்களுடைய இளைய மகனாக நடித்துள்ள கமலேஷ், முள்ளி என்கிற கேரக்டரில், சசி சாரால் சமாளிக்க முடியாத அளவுக்குக் குறும்பு செய்பவனாக நடித்திருக்கிறார். மூத்த மகனாக நடித்துள்ள மிதுனுக்கும் கதையில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளிவந்த ‘ஆவேஷம்’ மலையாளப் படத்தில் நடித்திருந்த பையன்தான் மிதுன்.
படப்பிடிப்பின்போது கதாபாத்திரங்கள் ஈழத் தமிழ் பேசுவதுபோல் எடுக்கவில்லை. பின்னர் டப்பிங்கின் போதுதான் அதை மாற்றினோம். எல்லாத் தரப்பு ஆடியன்ஸுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழ்ப் பேச்சு வழக்கை வலிந்து திணிக்காமல் ஒரு சிலவற்றில் மட்டும் ஈழத் தமிழ் எனத் தெரியும்படி செய்திருக்கிறோம். சிம்ரன் மேடம் ட்ரீம் கேர்ள் ஆக இருந்த காலக்கட்டத்தில் தொடங்கி அவருக்குக் குரல் கொடுத்து வந்த டப்பிங் கலைஞர் சவிதாவைத் தேடி அழைத்துவந்து பேச வைத்திருக்கிறோம்.
உங்களைப் பற்றி.. எனது சொந்த ஊர் திருச்சி. நான் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை காட்சித் தகவலியல் படித்து முடித்துவிட்டு, படம் இயக்கும் முயற்சிகளில் திரைக் கதைகளுடன் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் யுவராஜ் கணேசன் குறித்துக் கேள்விப்பட்டு அவருக்கு இந்தக் கதையை மின்னஞ்சல் செய்தேன். அவர்தான் தேர்வு செய்தார்.
விஸ்காம் தவிர வேறு எந்த அனுபவமும் இல்லாத என் மீதும் என் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து இதைத் தயாரிக்க முன்வந்த மகேஷ்ராஜ் பஸிலியன் - யுவராஜ் கணேசன் இருவருக்கும் என் நன்றி. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அன்பையும் கனிவையும் பரப்பும் ஒரு படமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT