Last Updated : 19 Apr, 2025 08:26 PM

 

Published : 19 Apr 2025 08:26 PM
Last Updated : 19 Apr 2025 08:26 PM

திரைப் பார்வை: நாங்கள் | பாலுமகேந்திராவை நினைவூட்டும் படைப்பு!

ஊட்டியைக் கதைக் களமாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. குளிரும் வெயிலும் உறவாடும் தட்பவெப்பமும் வனமும் தோட்டங்களும் சூழ்ந்த பசுமையான நிலப்பரப்பும் என நீலகிரியை ஒளிப்பதிவிலும் கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளிலும் ஒளிரச் செய்த ஒரு படைப்பாளி உண்டென்றால் அவர் சர்வ நிச்சயமாக பாலுமகேந்திரா தான். அவரைத் தன் முதல் படைப்பின் மூலம் திரைமொழியால் தொட முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ்.

கொஞ்சம் தேயிலைத் தோட்டம், இன்னொரு பக்கம் கேரட், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் விளையும் நிலம் என ஒரு சின்ன பண்ணைத்தோட்டத்துக்கு உரியவர் ராஜ்குமார் (அப்துல் ரஃபே). ஒரு பள்ளிக் கூடத்தையும் நீலகிரியில் நடத்திக்கொண்டிருக்கிறார். கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்திருக்கும் அவருக்கு 14, 12, 10 வயதுகளில் மூன்று மகன்கள். பண்ணைத்தோட்டத்தின் நடுவில் இருக்கும் ராஜ்குமாரின் பங்களா வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. அவர் நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை. செல்வாக்காக வாழ்ந்த ராஜ்குமாரின் குடும்ப வாழ்க்கை நிலச்சரிவில் சிக்கிய நிலம்போல் மனச்சரிவால் வீழ்ந்து கிடக்கிறது.

பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதால், மூன்று மகன்களும் கொல்லும் குளிரையும் வறுமையையும் ஒருசேர எதிர்கொள்கிறார்கள். இதற்கு நடுவில், ஓர் உயர்தட்டுக் குடும்பத்தின் கண்டிப்புகளையும் கட்டுப்பாடுகளையும் மகன்களின் மீது வலிந்து திணிக்கிறார் ராஜ்குமார். அப்பாவின் இந்தக் கடுமையினால், கொண்டாட்டமாகக் கடந்து செல்ல வேண்டிய அவர்களின் பால்யம், வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் கொடுமையான பயிற்சிப் பட்டறையாக மாறுகிறது. அப்பாவும் அம்மாவும் எப்படியாவது சேர்ந்துவிட மாட்டார்களா என்கிற அந்தச் சிறார்களின் ஏக்கம் நிறைவேறியதா இல்லையா என்பது கதை.

மனங்களை விட்டு வெளியேறி நடக்கும் குளிர்

நீலகிரி என்கிற நிலப்பரப்பும் அங்கே எஸ்டேட்டின் நடுவில் தனித்துக்கிடக்கும் ராஜ்குமாரின் பங்களா வீடும், அந்த வீட்டின் செல்ல நாயான ராக்ஸியும் முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு இணையான குறுக்கீட்டைத் திரைவெளியில் நிகழ்த்தியிருக்கின்றன. மின்சாரம் இல்லாத பங்களா வீட்டில் மெழுகுவர்த்தியுடனும் அரிக்கேன் விளக்குடனும் வாழ்தல் என்கிற வலி மிகுந்த போராட்டத்தை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக்கொண்ட துடிப்பான சிறார்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி ஆகியோர். இந்த மூவரும் ‘எந்த இடத்திலும் நாங்கள் நடிக்கவில்லை எங்கள் வாழ்க்கையை வாழ்கிறோம்’ என்பதுபோல் நடிப்பில் தரம் காட்டியிருக்கிறார்கள். இயக்குநர் அவ்வளவு இயல்பாக இவர்களை வேலை வாங்கியிருக்கிறார்.

குறிப்பாக, மூத்த மகனாக நடித்திருக்கும் மிதுன் வி மிக முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறான். ராக்ஸியை அப்பா அடித்தபிறகு அவன் கொள்ளும் ஆவேசமும், அப்போது தனது அப்பாவையே நொடியில் எதிர்த்து நிற்கும் அக்காட்சியில் மகனின் கோபத்திலிருக்கும் நியாயத்தைப் ராஜ்குமார் புரிந்துகொண்டு அவனை திமிராமல் அடக்கிப் பிடிக்கும் இடமும் தந்தை மகன் இருவருக்குமான உணர்வின் எரிமலை வெடிப்பு. ராஜ்குமாராக நடித்துள்ள அப்துல் ரஃபே, நடிப்பில் சீரான கறுப்பு வெள்ளை ஓவியம் போல் படம் முழுவதும் துலங்குகிறார். நம்முடைய தவறுகளையும் குறைகளையும் உடன் வாழும் ரத்த உறவுகள் குறிப்பிட்டுக் குத்திக் காட்டுவதைப் பொறுத்துக்கொள்ள மறுக்கிறோம். ஆனால், நாய் போன்ற நம் வளர்ப்பு விலங்கு ஒருபோதும் நம்மைக் கேள்வி கேட்பதில்லை என்பதால், அதைப் பிரிய வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. தவிர, குரலற்ற அதைத் துன்புறுத்தவும் செய்கிறோம்.

அவினாஷ் பிரகாஷ் எனும் நம்பிக்கை நாற்று

ராக்ஸி காணாமல் போய்விடும் காட்சியில் அப்பாவும் மகன்களும் அடித்துப் புரண்டு ஓடிப்போய் தேடும் காட்சியும் அக்காட்சியின் முடிவும் புறக்கணிப்பு எந்த நன்மையையும் கொண்டு வரப்போவதில்லை என்பதை முகத்தில் அறைந்து சொல்கிறது.

ஆண் மையச் சிக்கல்களில், ஒழுக்கத்தின் தோல்வியும் ஈகோ உருவாக்கும் வெற்றுப் பிடிவாதமும் தன்னை மட்டுமல்ல; தன்னை சார்ந்தவர்களையும் அழித்துப்போட்டுவிடும் என்பதை கடினமான வாழ்க்கைக்கு நிர்பந்திக்கப்பட்ட மூன்று சிறார்களின் அன்றாடத்துக்கான போராட்டங்களின் வழி நமக்குக் கடத்துகிறது.

ராஜ்குமார் தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை ‘ஒத்துவராத கொள்கைகள்’ என்று இலகுவாகக் கடந்து சென்றிருப்பது இயக்குநரின் எழுத்துச் சிக்கல் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது. மூன்று சிறார்களின் கடினமான வாழ்க்கையின் பின்னாலிருக்கும் காரணத்தை அறிந்துகொள்ளப் பார்வையாளர் மனம் ஏங்கிக் காத்திருக்கும்போது, அதுபற்றி அக்கறையில்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் வலிகளுமே உங்களுக்குப் போதுமானவை என்று அனுப்பி வைத்துவிடுகிறார் இயக்குநர்.

அப்துல் ரஃபே நடிப்பின் இலக்கணம்

இந்தப் பெருங்குறையக் கடந்து நோக்கினால், இப்படத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பும் செய்திருக்கும் அவினாஷ் பிரகாஷுக்கு நல்வரவு கூறி வரவேற்கலாம். ஒளிப்பதிவில் அவர் காட்டியிருக்கும் சிரத்தை, நீலகிரியில் கதாபாத்திரங்களுடன் நாமும் ஒன்றாக வாழும் உணர்வைத் தந்துவிடுகிறது. கிட்டத்தட்ட பாலமகேந்திராவுக்கான ஒரு அஞ்சலி போலவே தோற்றம்கொள்கிறது இப்படம்.

இயக்குநருக்கு அடுத்த இடத்தில் இப்படத்தை ஒரு நல்ல படைப்பாக நம்மை உணர வைக்கிறது வேத் ஷங்கர் சுகவனத்தின் இசை. பின்னணி இசையில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் செலோ இசைக்கருவியின் லைவ் தன்மை மனதைப் பிசைந்துகொண்டேயிருக்கிறது. சைந்தவி குரலில் ஒலிக்கும் ‘கனவே’ எனும் ஒரு நல்ல பாடலையும் கொடுத்திருக்கிறார்.

நீலகிரியின் தேயிலை வனத்துக்கு நடுவே பங்களாக்களில் வாழ்பவர்களைப் பார்த்து, நீங்கள் எப்போதாவது ஏங்கியிருப்பீர்கள் என்றால் உங்களை இன்னும் அதிகமாகத் தொந்தரவும் செய்யும் யதார்த்த மனிதர்களைக் கொண்டிருக்கிறது இந்த ‘நாங்கள்’. பிள்ளைகளைப் பெற்றுகொண்டபின் ஒருபோதும் பிரிவு என்கிற நரகத்தை உங்கள் சுயநலத்துக்காகத் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள் என்பதை சொன்ன விதம் உயர்தரமான திரை அனுபவமாக உங்களைத் தாக்கும். துயரத்தின் அழகியலில் மூழ்கி மூத்தெடுக்க விரும்பும் யாரும் இப்படத்தைப் பார்த்து தன்னிலை மறக்கலாம். தன்னில்யாபாக இருக்கும் ஈகோவை வேளியே தூக்கி வீசிவிட்டு வீட்டுக்கு நடக்கவும் இந்தப் படம் பாடமெடுக்காமல் வேதிவினை புரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x