Published : 18 Apr 2025 06:20 AM
Last Updated : 18 Apr 2025 06:20 AM

மீண்டும் சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி! | சினிப்பேச்சு

பார்த்திபன் - வடிவேலு, விஜய் - வடிவேலு போலவே சுந்தர்.சி - வடிவேலுவின் நகைச்சுவைக் கூட்டணியும் மிகவும் பிரபலமானது. சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘கிரி’, ‘வின்னர்’ போன்ற படங்கள்தான் தொலைக்காட்சிகளிலும் மீம்களிலும் திரும்பத் திரும்ப இடம்பெற்று வருகின்றன.

இக்கூட்டணி தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைகோத்திருக்கும் படம் ‘கேங்கர்ஸ்’. சுந்தர்.சி இயக்கத்தில் பென்ஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் ஏ.சி.சண்முகம், ஏ.சி.எஸ்.அருண்குமார், குஷ்பு சுந்தர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ளார்.

அவருடைய நண்பராக வடிவேலுவும் நாயகிகளாக கேத்தரின் தெரசா, வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ஏ.சி.எஸ்.மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதில் சுந்தர்.சியும் வடிவேலுவும் ஒன்றாக மேடையேறி தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

‘மணி ஹெய்ஸ்ட்’ வலைத் தொடர் பாணியில் தமிழில் முழு நீள நகைச்சுவை, பொழுதுபோக்குப் படமாக இதை உருவாக்கியிருப்பதாகவும் இந்தப் படத்துக்குத் தலைப்பைக் கொடுத்ததில் தொடங்கி படம் முழுவதும் வந்து வடிவேலு நகைச்சுவை தர்பார் நடத்தியிருப்பதாகவும் சுந்தர்.சி குறிப்பிட்டார்.

வடிவேலு பேசும்போது: “எங்கள் இருவரையும் யார் பிரித்தார்கள் என்றே தெரியவில்லை. நம்மை ஒன்று சேர்க்க ஆள் கிடையாது. ஆனால், பிரித்துவிட நிறைய பேர் நமக்கு மத்தியில் இருப்பார்கள். அப்படித்தான் நாங்கள் பிரிக்கப்பட்டோம். சுந்தர்.சி.யின் டீம் ஓர்க் போல் நான் சினிமாவில் பார்த்ததில்லை. இந்தப் படம் ‘வின்னர்’ காமெடியை விஞ்சும்” என்று பேசினார்.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்! - விஜய் நடித்த ‘பிகில்’ படத்துக்குப் பிறகு ஷாருக் கான் நடித்த ‘ஜவான்’ இந்திப் படத்தை இயக்கி வெற்றி கொடுத்தார் இயக்குநர் அட்லி. அவர் தற்போது அல்லு அர்ஜுனை இயக்குகிறார். நேரடியாகத் தெலுங்கில், அறிவியல் புனைவுப் படமாக உருவாகும் இதற்கு ‘#AA22xA6’ என்கிற இயற்பியல் சூத்திரம் ஒன்றினைத் தலைப்பாக வைத்துள்ளனர். ‘புஷ்பா’ வரிசைப் படங்களின் அகில இந்திய வசூல் வெற்றியால் புதிய சாதனை உச்சத்தைத்தொட்டிருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணியுடன் இணைந்திருக்கிறது இந்தப் படத்தைத் தயாரிக்கும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

வாழ்க்கையை மாற்றும் ‘சாணி’ - திரைப்படத்தைச் சமூக மாற்றத் துக்காகப் பயன்படுத்த வேண்டும் என்கிற தாகத்துடன் வரும் புதியவர்கள் வரிசையில் சேர்ந்திருக்கிறார் சி.மோகன்ராஜ். இவரது எழுத்து இயக்கத்தில் உருவாகிவரும் ‘சாணி’ படத்தின் தொடக்க விழாவை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் பள்ளியில் நடத்திவிட்டுப் படப்பிடிப்பைத் தொடர்ந்து வருகிறார். கடலூர் அருகேயுள்ள ஆலம்பட்டி என்கிற கிராமத்தில் 1980 இல் நடந்த ஓர் உண்மைக் கதையைத் தழுவி இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

குடும்பத்தின் வறுமையால் சாணியில் வறட்டி தட்டி விற்கும் ஒரு சிறுவன் கல்விக்காக ஏங்கு கிறான். பள்ளிக்கூடம் சென்றதால் பெற்ற அவமானங்கள் காரணமாகக் கல்வியை வெறுக்கிறார் கதையின் நாயகன். இந்த இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையைச் சாணி எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை. இப்படம் கல்வியின் முக்கியத்துவத்தைப் பேசுவதுடன் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்குமான பிடிமானத்தையும் உறவையும் ஆழமாகப் பேசவிருக்கிறது” என்கிறார் மோகன் ராஜ்.

இப்படத்தின் மூலம் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் நாசரின் தங்கை மகனாகிய அ. ஆலம்ஷா மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவி களுக்கும் புத்தகப் பை, நோட்டு புத்தகங்கள் வழங்கிப் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கின்றனர்.

‘நான் சென்னை தாசன்!’ - ரஜினியுடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் அதிரடி காட்டியிருந்த சிவராஜ்குமார், புற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகி, அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்திருக்கிறார். கன்னட சினிமாவின் சீனியர் மாஸ் ஹீரோக்களில் சிவராஜ்குமாரும் உபேந்திராவும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர்கள். அவர்கள் இருவரும் 18 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள படம் ‘45’. அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் பான் இந்திய சினிமாவாக வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அதில் கலந்துகொண்டு சிவராஜ்குமார் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பேசினார்: “நான் சென்னை வரும்போதெல்லாம் எனது சொந்த ஊருக்கு வந்துவிட்டதாக உணர்வேன். ஏனென்றால், நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். தி.நகரில் பள்ளிப் படிப்பையும் ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தேன். பள்ளி, கல்லூரிக்கு ‘12 பி’, ‘25 சி’ எண்கள் கொண்ட பேருந்துகளில் பயணித்தேன். அண்ணா சாலை தேவி திரையரங்கில் என்னைப் பார்த்த ஒருவர், எனக்கு ஹீரோ சான்ஸ் தருகிறேன் என்றார்.

பிறகு என்னுடைய தந்தை ராஜ்குமார் என்னைக் கன்னட சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதன்பின்னர் கடந்த 39 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டு வலிகளும் உண்டு. இரண்டையும் சரி சமமாக எடுத்துக்கொண்டு நகர்ந்து விடுவேன். அப்பா அம்மாவின் இறப்பு, தம்பி புனித் ராஜ்குமாரின் மரணம், புற்றுநோய், பலமுறை அறுவை சிகிச்சைகள் எனப் பல பெருந்துயரங்களையும் ஆபத்தான கட்டங்களையும் கடந்து வந்திருக்கிறேன்.

நான் புற்றுநோய்க்குக் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த நாள்களின் போதுதான் ‘45’ படத்தின் கதையைக் கேட்டு வியந்து அதில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால் இதில் ஃபாண்டஸி, தத்துவம், பொழுதுபோக்கு ஆகிய மூன்றுமே சரியான கலவையில் இருக்கிறது. இப்படம் உங்களை மகிழ்ச்சியூட்டி, மனதிலும் இடம் பிடிக்கும்” என்றார். சிவாராஜ் குமாருடன் உபேந்திராவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x