Last Updated : 02 Apr, 2025 10:22 AM

2  

Published : 02 Apr 2025 10:22 AM
Last Updated : 02 Apr 2025 10:22 AM

ஏப்ரல் முழுவதும் வானம் கலைத் திருவிழா!

திரைப்பட இயக்குநர், சமூகக் கலை, இலக்கியச் செயற்பாட்டாளர் என இருவேறு தளங்களில் இயங்கி வருபவர் பா.இரஞ்சித். அவர் நிறுவிய நீலம் பண்பாட்டு மையம், அண்ணல் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடி வருகின்றது.

‘கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள், கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை’ என்கிற முனைப்போடு கலை மற்றும் இலக்கிய விழாவாக கடந்த 5 ஆண்டுகளாக ‘வானம்’ கலைத் திருவிழாவை நீலம் பண்பாட்டு மையம் வழியாக முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பா.இரஞ்சித்.

நடப்பாண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதியான நேற்று வானம் கலைத் திருவிழா சென்னை எழும்பூர் நீலம் புத்தக அரங்கில் தொடங்யது. ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று தொடங்கி 6 ஆம் தேதிவரை பி.கே.ரோசி திரைப்படவிழா நடைபெறுகிறது. இதில், தடை செய்யப்பட்ட ஒரு சில உலகத் திரைப்படங்கள் உட்பட பல முக்கியமான படைப்புகள் திரையிடப்படவிருக்கின்றன. எதற்காக பி.கே.ரோசியின் பெயர் பட விழாவுக்குச் சூட்டப்பட்டது? முதல் மலையாள மொழிச் சலனத் திரைப்படமாக ஜே. சி. டேனியல் நாடார் எழுதி, இயக்கி, தயாரித்து 1930இல் வெளியிட்ட ‘விகத குமாரன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் நாடகக் கலைஞர்தான் தான் பி.கே.ரோஸி. இதற்காக ஆதிக்க சாதியினரின் கடும் எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் சந்தித்தார் ஜே.சி.டேனியல். அவரது படத்தின் முதல் காட்சியில் அவரையும் பி.கே.ரோஸியையும் விரட்டியடித்தனர். இந்த சினிமாவுக்காக தனது செல்வத்தையெல்லாம் இழந்தார். அது மட்டுமல்ல; அது மட்டுமல்ல; மலையாளத்தின் முதல் கதாநாயகியாக இன்று வரலாறு நினைவில் வைத்திருக்கும் பி.கே.ரோஸியை ‘விகத குமாரன்’ படத்தில் ‘சரோஜினி’என்கிற நாயர் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இத்தகைய வரலாறு கொண்ட பி.கே.ரோஸியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்கையையும் வாழ்வியலையும் பேசும் உலகப் படங்களைத் திரையிடும் உலகப் படவிழாவை நடத்தில் வருகிறது நீலம் பண்பாட்டு மையம்.



இன்று தொடங்கும் இப்படவிழாவின் திரையிடல்கள் நடைபெறும் இடம் - சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கம். இப்படவிழாவின் ஒரு பகுதியாக ஏப்ரல் - 3 முதல் 6 வரை ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள மேக்ஸ் முல்லர் பவனில் திரையிடப்படுகின்றன.

ஏப்ரல் 12 , 13 ஆகிய தேதிகளில் ‘வேர்ச்சொல்’ என்கிற தலைப்பில், முத்தமிழ் பேரவை அரங்கில் தலித் இலக்கியக்கூடுகை நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 18ஆம் தேதி, எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் ‘தம்மா’ நாடகத் திருவிழா நடக்கவிருக்கிறது. தொடர்ந்து ஏப்ரல் - 23 முதல் 29 வரை ஒளிப்படக் கண்காட்சியும், ஓவியக்கண்காட்சியும் நடைபெறவிருக்கின்றன. இவற்றை கிரீம் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியின் இரண்டாம் தளத்தில் கண்டு கழிக்கலாம்.

வானம் கலைத் திருவிழாவை முன்னிட்டு, அதை எதற்காக நடத்தி வருகிறோம் என்பதை எடுத்துக் கூறும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்: “மனிதகுல வரலாற்றில் ஓர் இனத்தின் மீதோ, சமூகக் குழுவின் மீதோ தொடுக்கப்படும் போரில் துப்பாக்கிகளும் குண்டுகளும் மட்டுமல்ல; அவ்வினத்தின் பண்பாட்டு. கலாச்சாரங்களுக்கு இழிவு கற்பிப்பதின் மூலம் உளவியல் ரீதியாகவும் தொடுக்கப்பட்டிருக்கிறது. அச்மத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தியச் சமூகத்தில் அது சாதி என்கிற வடிவத்தில் நிலைபெற்றிருக்கிறது.

இந்திய தலித் மக்கள் மீது அரசியல் ரீதியான கரிசனம் இருப்பவர்கள் கூட, சமூக ரீதியாக விளிம்பில் இருப்பவர்கள் முன்னேற வேண்டும் என்கிற அளவிலேயே தலித்துகளை அணுகுகிறார்கள். அடிப்படையான அவர்களது நோக்கத்தின் மீது நமக்கு விமர்சனமில்லை. அதேவேளையில் தலித்துகளுக்கு நீண்ட நெடிய வரலாறும் பண்பாடும் இருக்கிறதென்பதை நினைவூட்டவும், அதை நிகழ்த்திக் காட்டவும் வேண்டிய அவசியமும் இருக்கிறது.

இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் இருக்கும் அனைத்தும் பல்லாண்டுக் கால வழக்கங்கள். அவை வேர் போல இறுகப் படர்ந்திருக்கிறது. அதுவே பண்பாட்டு அரசியல். கடந்த இருநூறு ஆண்டுகளாக எழுதப்பட்ட வரலாறு. நவீன சமூக மாற்றம். உற்பத்தியான அறிவியல் சாதனங்கள் என அனைத்திலும் இதுவரை சொல்லப்பட்ட வரலாறே மீண்டும் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. இவற்றிற்கு இயல்பாகக் கிடைக்கும் அங்கீகாரத்தை எதிர்த்து ஆயிரம் மடங்கு ஆற்றலோடு நாம் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த அடித்தளத்தை மாற்றத் துணியாமல், அதன் மேல்மட்டத்திலிருந்து எழுப்பப்படும் எந்த அரசியலும் தற்காலிகமானது என்பதே காலம் நமக்குக் கொடுத்திருக்கும் படிப்பினை

இத்தகைய சூழலில்தான் 'நீலம் பண்பாட்டு மையம்' நான்காண்டுகளாக 'வானம் கலைத் திருவிழா'வை நடத்தி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருந்தாலும், தலித் கலை இலக்கிய வடிவத்தை மையப்படுத்தி, அதற்கெனத் தீர்மானிக்கப்பட்ட வடிவத்தை மீறி, கலை, இலக்கியச் செயல்பாடுகளில் செறிவான வரலாற்றைக் கொண்டவர்கள் தலித்துகள் என்கிற பிரகடனத்தோடு நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பதில்தான் நீலம் பண்பாட்டு மையத்தின் தனித்துவமும் தேவையும் இருக்கிறதெனக் கருதுகிறோம்.

2018இல் மூன்றுநாள் நிகழ்வாகப் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்ட வானம் நிகழ்வில், இந்தியா முழுவதிலுமிருந்து கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். பெருந்தொற்றுக் காரணமாக இடையில் இரண்டாண்டுகள் தடைபட்டிருப்பினும் 2022, 2023, 2024 ஆண்டுகளைத் தொடர்ந்து இது ஐந்தாவது ஆண்டு நிகழ்வு.

நிகழ்த்துக்கலை, சினிமா, இசை, ஒவியம், இலக்கியம் ஆகிய கலை வடிவங்களின் அழகியலோடு சேர்த்து அரசியலையும் பதிவு செய்யும் இந்நோக்கத்தில், 'பி.கே.ரோஸி திரைப்பட விழா'வில் திரையிட நாங்கள் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் அழகியலைப் பேசுபவை, அத்தோடு சேர்த்து அரசியலையும் பேசுபவை.

பெரும்பான்மை வாதத்திற்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக முன்வைக்கும் எல்லா உரையாடல்களையும் 'தலித் என்கிற பொருண்மையின் கீழ் புரிந்துகொண்டே இத்திரைப்பட விழாவில் உலக சினிமாக்களை நாம் அணுகுகிறோம்.

உலக அளவில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாகக் கறுப்பின மக்கள் சித்திரிக்கப்பட்டதைப் போல இப்போது யாரும் சித்திரிப்பதில்லை. முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டோம் எனச் சொல்ல முடியாமல் போனாலும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்த மாற்றம் இயல்பாக நடந்ததல்ல, தொடர் உரையாடலால் நிகழ்ந்தது. சித்திரிப்பில் அரசியல் தெளிவு பெற்றவர்களால் சாத்தியப்பட்டது. இதை நாம் இந்திய சாதிய சித்திரிப்பிற்கும் பொருத்திக்கொள்ளலாம். பொது சினிமா அல்லது வெகுஜன சினிமா என்று சொல்லப்படும் சினிமாக்களும் அதன் இயக்குநர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாலும், அவர்களது சினிமாக்களிலும் அரசியல் இருக்கிறது என்பதே நிஜம். இந்த உரையாடல் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது, அது படைப்பின் வழி வெளிவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்த மாற்றத்தைத்தான் நாம் கலையின் ஜனநாயகம் என்கிறோம். இந்த மாற்றத்திலிருந்துதான் உரையாடலைத் துவங்க முடியும். அந்த உரையாடலை முன்னெடுப்பதே பி.கே.ரோஸி திரைப்பட விழாவின் நோக்கம். எதிர்வரும் காலத்தில் இந்த உரையாடலை நாம் எந்தப் புள்ளியில் நிறுத்திக்கொண்டாலும், அந்தக் கணமே மீண்டும் பழைமைகள் மேலெழும் சாத்தியங்கள் இருப்பதால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தொடர்ந்து இயங்க வேண்டியிருக்கிறது.” என நீலம் பண்பாட்டு மையம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x