Last Updated : 09 Mar, 2025 07:01 AM

 

Published : 09 Mar 2025 07:01 AM
Last Updated : 09 Mar 2025 07:01 AM

விஜயின் காலைச் சுற்றிய பாம்பு! | ப்ரியமுடன் விஜய் - 15

திரையிலும் தொலைக்காட்சியிலும் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பல தளங்களில் புகழ்பெற்றவர் சி.ரங்கநாதன். விஜயை வைத்து அவர் இயக்கிய ‘கோயமுத்தூர் மாப்ளே’ படமாக்கப்பட்ட நாள்களின் நினைவுகளை இந்த வாரம் பகிர்ந்துகொள்கிறார்:

“சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகராகப் புகழ்பெறுவது எளிது. ஆனால், உழைக்கும் மக்களும் நடுத்தர வர்க்கமும் ஏற்றுக்கொள்ளும் ஒரு ‘சக்சஸ்ஃபுல் ஹீரோ’ வாக ஆவது மிகக் கடினமானது. எப்படிப்பட்ட கதைகளில் நடிக்க வைத்தால், விஜயை மக்கள் கொண்டாடும் ஒரு ஹீரோவாக ஆக்க
முடியும் என்கிற சூத்திரம் அறிந்து அவரை உருவாக்கியவர் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் போட்டுக்கொடுத்த அஸ்திவாரம்தான் விஜயின் வெற்றிப் பயணத்துக்குப் பாதை போட்டுக் கொடுத்தது. ‘நாளைய தீர்ப்பு’ படத்துக்குப் பிறகு பிரபல மான பத்து இயக்குநர்களை நேரில் போய் பார்த்தார் எஸ்.ஏ.சி. ‘என் மகனுக்குச் சம்பளம் வேண்டாம். காஸ்டியூம் நாங்களே ஏற்பாடு செய்துகொள்கிறோம். என் மகனுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ என்று கேட்டார். ஆனால், அப்போது மறுத்த அந்தப் பத்து இயக்குநர்களும் பின்னாளில் விஜயின் கால்ஷீட் கேட்டு வந்தார்கள். மகனை அப்படி ‘சக்சஸ்ஃபுல் ஹீரோ’வாக உருவாக்கிக் காட்டினார் எஸ்.ஏ.சி. அப்பாவின் இயக்கத்தில் விஜய் தொடர்ந்து நடித்த தொடக்கக் காலப் படங்கள் அனைத்திலும் நான் தான் இணை இயக்குநர் என்பதால் விஜயை உருவாக்க எஸ்.ஏ.சி. சார் எவ்வளவு சிரமங்களையும் ஏச்சுப் பேச்சுகளையும் சந்தித்தார் என்பது எனக்குத் தெரியும்.

அதேபோல் ‘அப்பா என்கிற பலம்தான் நமக்கு இருக்கிறதே..’ என்று விஜயும் அலட்சிய மனப்பான்மையுடன் சினிமாவுக்கு வரவில்லை. நடிப்பு, நடனம், சண்டைப் பயிற்சி, பாடும் திறமை என அனைத்துத் திறமை களையும் வளர்த்துக்கொண்டார். சினிமாவுக்கு மிகவும் உண்மையாக இருந்தார். ‘எனக்கு இது தெரியாது’ என்று சொல்லவே மாட்டார். சண்டைக்காட்சிகளில் சில ஆபத்தான ஆக்‌ஷன் களுக்கு ‘டூப் வெச்சுக்கலாம்’ என்று அப்பா சொன்னால், ‘டூப்பை பத்தி எங்கிட்ட பேசாதீங்க.. தயவு செஞ்சு அப்பாவை ‘செட்’லேர்ந்து வெளியே அனுப்பிட்டு வாங்க. அவர் இங்க இருந்தா ரொம்ப பயப்படுவார். ஃபைட்டர்ஸ் யாராவது டூப் போட்டுக்கிறாங்களா? நானும் அவங்கள மாதிரி ஃபைட் கத்துகிட்டுத்தானே வந்திருக்கேன்.. ஹீரோன்னா வலியில்லாம அடியில்லாம ஃபைட் பண்ணிட முடியுமா?’ என்று கேட்டு அப்பாவை ‘செட்’டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு சண்டைக்காட்சியில் நடிப்பார்.

‘கோயமுத்தூர் மாப்ளே’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வில்லன் கரணும் அவ ருடைய அடியாள்களும் கையில் டியூப் லைட்களுடன் விஜயைச் சுற்றி வளைத்து டியூப் லைட்டால் அவரை மாறி மாறி அடிப்பார் கள், அப்போது விஜய் உடம்பாலும் கையாலும் அவற்றைத் தடுக்க வேண்டும். இந்தக் காட்சி
யில் டூப் வைக்க விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இது ஒரிஜினலாக இருந்தால் தான் வேல்யூ இருக்கும்’ என்று பிடிவாதமாகச் சொன்ன விஜய், ஐம்பதுக்கும் அதிகமான டியூப் லைட்டுகளை அவர் மீது கரணும் ஸ்டண்ட் கலைஞர்களும் உடைத்தபோது அவர் காட்டிய துணிச்சல் அபாரமானது. இந்தக் காட்சியில் கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் டியூப் லைட் சில்லுகள் கண்களைப் பதம் பார்க்க வாய்ப்பு அதிகம். அதேபோல், சினிமா படப் பிடிப்புக்காகப் பயன்படுத்தும் கண்ணாடியைக் கொண்டு அமைக்கப்பட்ட கதவை உடைத்துக் கொண்டுபோய் விழ வேண்டும். அந்தக் கண்ணாடி எளிதாக உடையுமே தவிர, கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் உடையும் கண்ணாடிச் சில்லுகளோடு போய் தரையில் விழும்போது அவை கிழித்துவிடும். உயரமான இடத்திலிருந்து குதிக்கும் காட்சிகளுக்காவது டூப் போட்டுக்கொள்ளலாம் என்றால் அதையும் கேட்கமாட்டார் விஜய். இன்னொரு சம்பவம். நான் ‘வந்தாரு ஜெயிச்சாரு’ என்கிற படத்தை இயக்கவிருந்தேன். விஜயை மனதில் வைத்துத்தான் அப்படியொரு தலைப்பை அந்தப் படத்துக்கு வைத்தேன். அந்தப் படத்தின் பூஜைக்கு விஜயை அழைத்தேன். அப்போது அவர் ‘தமிழன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ‘அண்ணா இப்போ ஃபைட் சீன் எடுத்துக்கிட்டிருக்காங்க.. முடிஞ்ச வரைக்கும் வந்துட டிரை பண்றேன்’ என்றார். சொன்னதுபோலவே நேரே படப்பிடிப்பிலிருந்து பூஜைக்கு வந்துவிட்டார். நானோ அவரைப் பார்த்ததும் பதறிவிட்டேன். ஏனென்றால் அவரது நெற்றியில் சண்டைக் காட்சியின்போது அடிப்பட்டு காயமாகி உண்மையாகவே ரத்தம் கசிந்திருந்தது. அவர் முதலுதவிகூட எடுத்துக்கொள்ளாமல் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு பூஜைக்கு வந்து விட்டார்.

சண்டைக் காட்சியில்தான் இப்படியென்றால் பாடல் காட்சி யில் நடனமாடும் போது ஒரு முழு ‘பி.ஜி.எம்’முக்கு ஆடும் வழக்கத்தைத் தொடங்கிவைத்த ஹீரோ என்றால் அதுவும் விஜய்தான். எனது படத்தில் வித்யாசாகர் இசையில் ஒரு பாடலையும் பாடினார். உதித் நாராயணன் - சாதனா சர்கம் விஜய் படத்துக்கு முதன்முத லாகப் பாடிய பாடல் ‘கோயமுத்தூர் மாப்பிள்ளைக்குப் பொண்ணு கிடைச்சா..’. மிகப்பெரிய ஹிட். அதையும் மற்றொரு டூயட்டாக படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தேதி பார்த்தால்’ பாடலையும் நீலகிரியின் வெஸ்டன் கேட்ச் மெண்ட் பகுதியில் படமாக்கினேன். இந்தப் பகுதிக்கு ஊட்டியிலிருந்து இரண்டரை மணிநேரம் டிராவல் செய்து செல்ல வேண்டும். அங்கே பசுமைப் புதர்கள் அதிகம். அதேபோல் புல்வெளிகளும் சின்னச்சின்ன ஏரிகளும் அதிகம். பசுமைப் புதர்கள் அதிகமுள்ள பகுதிகளை ஒட்டித்தான் இயற்கையான புல்வெளி களும் இருக்கும். விதவிதமான பச்சைப் பாம்புகள் கூட்டம் கூட்டமாக அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். எங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாது என்றுதான் அங்கே போய் படப்பிடிப்பைத் தொடங்கினோம். கிளைமேட்டும் வெயில் - குளிர் என இதமாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக விஜயும் சங்கவியும் ஆடிக் கொண்டிருக்கும்போது பச்சைப் பாம்பு ஒன்று விஜயின் காலைச் சுற்றிக்கொண்டு இறுக்கியது. நாங்கள் பதறிப்போய் அதை பிய்த்தெறிய ஓடினோம். விஜய், ‘இந்தப் பாம்புகள பார்த் தாலே குழந்தை மாதிரி அழகா இருக்கு. அதோட
உயிருக்கு ஆபத்து இல்லாதபடி எடுத்துவிடுங்க’ என்று காலைக் காட்டியபடி அமைதியாக நின்றார். இந்தப் பதற்றமில்லாத தன்மையை விஜயிடம் அப்போதே நான் பார்த்தேன்.

விஜய் அமைதியானவர், அதிகமாகப் பேசமாட்டார் என்றெல்லாம் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும் ‘அவர் பேசத் தொடங்கினால் நிறுத்தமாட்டார்’ என்பது. பேசினால் மனம் விட்டுப் பேசிவிடுவார். அதற்கு அவரது நட்பையும் அன்பையும் பெறவேண்டும். இப்போது அவர் தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்றிருக்கிறார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர்.எப்படிச் சாதித்தாரோ அப்படியே அரசியலிலும் சாதித்து மக்களுக்கு நல்லது செய்வார். மற்றவர்களைவிட இதை நான் உறுதியாக நம்புகிறேன்.

(ப்ரியம் பெருகும்)

- சி.ரங்கநாதன்

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x