Published : 28 Feb 2025 06:47 AM
Last Updated : 28 Feb 2025 06:47 AM
“திகில் படங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால், ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ என்கிற வகைமையில் தமிழ் சினிமா இதுவரை ஒரு திரைப்படத்தைக் கூட எடுக்க முயன்றதில்லை. அதை, 200 சதவீதம் சாதித்தி ருக்கிறோம்” என்கிறார் ‘மர்மர்’ என்கிற படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஹேம்நாத் நாராயணன். அதீதமான திகில் காட்சிகளுக்காக, தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கும் இந்தப் படம் உருவான பின்னணி குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
ஒரு திகில் படத்துக்கு ‘முணுமுணுப்பு’ என்கிற பொருளில் ‘மர்மர்’ எனத் தலைப்பு வைத்தது ஏன்? - ஊரே அடங்கிவிட்ட இரவில், உழைத்த களைப்பில் நீங்கள் அமைதியான தூக்கத்துக்காகக் கண் மூடி அயர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அப்போது, உங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களில் யாராவது ஒருவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தால்கூட உங்கள் தூக்கம் கெட்டுவிடும். அவ்வளவு ஏன், பக்கத்து வீட்டில் யாராவது இடைவிடாமல் முணுமுணுத்தாலும் உங்களை அது தொந்தரவு செய்யும். இந்தப் படத்தை நீங்கள் பார்த்தால், இரண்டு நாள்களுக்கு மனதளவில் பெரிய தொந்தரவாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
அதைத் தாண்டி, தீய சக்தியைக் கட்டுப்படுத்துவதற்காக மந்திரங்களை முணுமுணுத்துக் கூற வேண்டும் என்கிற ஒரு முறை வழக்கத்தில் இருக்கிறது. அது, இப்படத்தின் காட்சி ஒன்றில் இருக்கிறது. தவிர ‘மர்மர்’ என்கிற தலைப்பில் ‘மர்ம’ என்கிற சொல்லும் வருகிறது. இப்படித் தலைப்புக்கு நியாயம் கற்பிக்கும் காரணங்கள் படத்தில் நிறையவே இருக்கின்றன.
ஹாலிவுட்டில் உருவாகி வரவேற்பைப் பெற்ற ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ படங்கள் சிலவற்றைப் பற்றிக் கூறுங்கள். தொண்ணூறுகளில் இருந்தே இந்த வகைமை யில் அமைந்த அதிரடியான ஹாரர் படங்களை ஹாலிவுட் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறது. அவற்றில் ‘தி ப்ளார் விச் புராஜெக்ட்’ (The Blair Witch Project -1999), ‘ரெக்’ (Rec - 2007), ‘பாரா நார்மல் ஆக்டிவிட்டி’ (Paranormal Activity - 2007), ‘குளோவர்ஃபீல்ட்’ (Cloverfield - 2008), ‘ஆஸ் அபவ் ஆஸ் பிலோ’ (As above as below - 2014), ‘ஹோஸ்ட்’ (Host - (2020) என உலகம் முழுவதும் ரசிகர்களை மிரட்டிய ஏராளமான படங்களைக் கூற முடியும்.
இவ்வகைப் படங்களின் இலக்கணம் என்ன? - தமிழில் ‘ஓர் இரவு’, ‘கேமரா எரர்’ என இரண்டு படங்களை இந்த வகையில் எடுத்து விட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், இந்தப் படங்களுக்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருப்பதாகக் கேள்விப் பட்டேன். இசை இருந்தால் அவை நிச்சயமாக ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ படங்கள் கிடையாது. அதேபோல் லைவ் ஒலிப்பதிவில் படம் எடுக்கப் பட்டிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கிய ஒலிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது. கதாபாத்திரம் உலவும் இடத்தில் ‘லைவ்’ ஆக என்ன ஒலி இருக்கிறதோ அதுமட்டும்தான் அங்கே ‘சவுண்ட் ஆம்பியன்ஸ்’ ஆக இருக்க வேண்டும். இந்த இலக்கணத்துக்குக் கட்டுப்பட்டுப் படமெடுத்து ரசிகர்களை மிரட்ட வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். இந்திய சினிமாவின் தனிப்பெரும் சவுண்ட் இன்ஜினியர் தபஸ் நாயக்கிடம் 200 படங்களுக்கு மேல் உதவி யாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட கெவின் ஃபிரடெரிக் தான் ‘மர்மர்’ படத்தின் ஒலி வடிவமைப்பாளர்.
இசையமைப்பாளர் சித்தார்த் விபின்தான் இவரை எனக்குப் பரிந்துரை செய்தார். கெவின் தனது குருவைப் பலபடி விஞ்சிச் சென்றுள்ளார். ஒளிப்பதிவாளர் ஜேசன், அவருடைய குழுவின் அபார உழைப்பு இப்படத்தை ஹாலிவுட் தரத்துக்குக் கொண்டுவந்துவிட்டது.
படத்துக்கு முன் திரையிடல் இருந்ததா? - ஆமாம்! தணிக்கை முடிந்த பிறகு ‘மர்மர்’ படத்தை ‘ரேண்டம்’ ஆக அழைக்கப்பட்ட 150 ரசிகர்களுக்குப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டினோம். படம் பார்க்கும்போது திரையரங்கில் இந்த 150 பேரின் ‘ரியாக்ஷன்’கள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள 10 ரகசியக் கேமாரக்களைப் பொருத்தி, படம்பிடித் தோம். இந்தப் பிரத்யேகப் பார்வையாளர்களின் ரியாக்ஷன்களை மட்டும் வைத்து ஒரு ட்ரைலர் உருவாக்கியிருக்கிறோம். அதை மார்ச் 1ஆம் தேதி
வெளிட இருக்கிறோம். இன்னொன்று, இந்தப் படக் காட்சியின் போது பயத்திலேயே ஒரு பெண்ணுக்கு ரத்தப்போக்கு வந்துவிட்டது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி கொடுத்து வீட்டுக்குச் செல்ல ஏற்பாடு செய்தோம். அவரோ. ‘எனக்கு என்ன ஆனாலும் சரி.. இந்தப் படத்தை முழுவதும் பார்க்காவிட்டால், என் தலை வெடித்துவிடும்’ என்று சொல்லி பிடிவாதமாக மீதிப் படத்தை அலறிய படியே பார்த்து முடித்தார். படத்தில் மொத்தம் 12 ‘ஜம்ப் ஸ்கேர்’கள் சரியான இடங்களில் வரும். எதுவொன்றும் வலிந்து திணித்ததாக இருக்காது.
என்ன கதை? - பொது இடம் ஒன்றில் ஒரு குண்டுவெடிப்பு சம்ப வம் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அது பற்றிய விசாரணைக்கு அங்கிருக்கும் சி.சி.டிவி. வீடியோக்களைதான் முதலில் ஆய்வு செய்வார்கள்.அவைதான் முக்கிய ஆவணங்களாக இருக்கும். ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ என்று வரும்போது அந்த சி.சி.டிவி ஆவணத்தைத்தான் நாங்கள் படமாகக் காண்பிக்கிறோம். அமானுஷ்ய உள்ளடக்கங்களை மட்டும் அதிகமாகப் பதிவிடும் 7 யூடியூபர்கள், ஜவ்வாது மலைக்குச் செல்கின்றனர்.
அங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் ஏழு கன்னிமார் நாட்டார் தெய்வங்களும் மங்கை எனும் சூனியக்கார ஆவியும் சுற்றித்திரிவதாக நம்பப்படு கிறது. இந்த நடமாட்டம் உண்மைதானா என்று அறிந்து அதை நேரடியாக கேமராவில் பதிவு செய்யும் இலக்குடன் இவர்கள் ஒரு குழுவாகச் செல்கிறார்கள். அவர்களுக்கு அங்கே என்ன ஆகிறது என்பதுதான் கதை. திரும்பி வராத அவர் களைக் கண்டுபிடிக்கச் செல்லும் காவல் துறை யினர் உடைந்து கிடக்கும் கேமராக்களைப் பறிமுதல் செய்து அவற்றில் பதிவாகியிருக்கும் காட்சிகளை ஒரு ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதிலிருந்துதான் திரைக்கதை தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT