Published : 21 Feb 2025 04:52 PM
Last Updated : 21 Feb 2025 04:52 PM
புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் வழிகாட்டுதலில் கடந்த 12 ஆண்டுகளாக இயக்கி வருகிறது ‘மறுபக்கம்’ எனும் மாற்றுத் திரைப்படக்குழு. இக்குழுவினர் ஒருங்கிணைத்துள்ள 13வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா சென்னையில் இன்று மாலை தொடங்கியது. இவ்விழா பிப்ரவரி 21 முதல் 28 வரை 8 நாள்கள் நடக்கிறது.
சென்னையின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பண்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து ‘மறுப்பக்கம்’ நடத்தும் இந்த விழாவில் 80 புதிய, விருதுகள் பெற்ற, அதிக கவனம் பெற்ற இந்திய, பன்னாட்டு ஆவணப்படங்கள், குறும்படங்கள், பரிசோதனைப்படங்கள், அனிமேஷன் படங்கள், கைபேசிப் படங்கள் திரையிடல் காண்கின்றன. இந்தியாவின் பல பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் நேரில் கலந்து கொண்டு, தங்களது படைப்புக்களைத் திரையிடுவதோடு, கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவிருக்கின்றனர்.
மேலும் இந்தத் திரைப்படவிழாவில் இங்கிலாந்து, கனடா, ஈரான், சீனா, ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்பெயின், ஹோண்டுரஸ், கேமரூன், இந்தோனேசியா, வங்கதேசம், லித்துயேனியா, பல்கேரியா, உக்ரேன், ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ப்ரான்ஸ், ப்ரேசில், அமேரிக்கா, போல்ந்து, நிகரகுவா, ரஷ்யா, தென் கொரியா, எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து பன்னாட்டு படங்கள் பிரிவில் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.
சென்னையின் முக்கியக் கல்வி நிறுவனங்களான டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக்கல்லூரி, ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், எத்திராஜ் பெண்கள் கல்லூரி, எம்ஜிஆர் திரைப்படக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐகாட் டிசைன் மற்றும் ஊடகக் கல்லூரி ஆகிய இடங்களில் இத்திரைப்படவிழா நடைபெறும். மேலும் இவ்விழாவின் அங்கமாக, சத்யம் சினிமா, பெரியார் திடல் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் ஆகிய இடங்களிலும் படங்கள் திரையிடப்படும். மேற்குறிப்பிட்ட இடங்களில் படங்கள் பார்க்க கட்டணமில்லை என்றாலும் பார்வையாளர்கள் கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும்.
தமிழ்நாட்டில் ஆவணப்படம் எடுக்கும் மற்றும் பார்க்கும் பண்பாட்டை ஊக்குவிக்கவும், குடிமக்கள் மத்தியில் கலைப்பூர்வமான, அறிவுப்பூர்வமான உரையாடல்களை வளர்த்தெடுக்கவும் இந்த விழாவை மறுப்பக்கம் நடத்துகிறது.
சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா வணிகநோக்கமின்றி ஆர்வலர்களின் நிதியுதவியுடன் மட்டுமே நடத்தப்படுவதால், ஆர்வமுள்ள, வாய்ப்புள்ள ஆவணப்படக் காதலர்கள், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் இப்படவிழாவுக்கு நிதியளித்து ஒருங்கிணைப்பதில் பங்கேற்கலாம். இத்திரைப்படவிழாவின் இயக்குநர் அமுதன் ஆர்.பி.கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள 9940642044 / 9444025348 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT