Published : 21 Feb 2025 06:53 AM
Last Updated : 21 Feb 2025 06:53 AM
திரைப் பிரசங்கி என்கிற முத்திரையை, சமீபக் காலமாக வில்லன், குணச்சித்திரம் எனக் குறைவான வசனம் பேசும் கதாபாத்திரங்களில் தோன்றி மாற்றி வருகிறார் சமுத்திரக்கனி. அந்த வரிசையில் ‘திரு.மாணிக்கம்’ அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
இப்போது , தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட ‘ராமம் ராகவம்’ அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார். ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு விழாவில் சமுத்திரக்கனியை இயக்கிய பத்துக்கும் அதிகமான இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநர் பேசும்போது “சமுத்திரக்கனி அண்ணன் அப்பாவாக இதுவரை 21 படங்களில் நடித்திருக்கிறார். தந்தை தசரதன் சொன்ன காரணத்துக்காக ராமன் வனவாசத்தை ஏற்றார். அது ராமாயணம். மகன் ராகவன் சொன்னதற்காக அப்பா எங்கே போனார் என்பதுதான் இந்தப்படம். எந்த வீட்டிலும் ராகவன் போல் ஒரு மகன் இருக்கக் கூடாது” என்றார்.
உலகத் தரமான ‘சப்தம்’ - பட அறிவிப்பின் போதே கவனம் ஈர்த்தது இயக்குநர் அறிவழகனின் ‘சப்தம்’. இப்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி, ‘இவ்வளவு நாள் காக்க வைத்ததற்கு நியாயம் செய்துவிட்டீர்கள். ட்ரைலரிலேயே ஒலி உலகத்தரம்’ என இணையவாசிகளைப் பாராட்ட வைத்திருக்கிறது. இதுவரை ‘ஈரம்’ உள்பட 4 படங்களைக் கொடுத்து விட்டாலும் ‘ஈரம்’ படமே இயக்குநரின் அடையாளம்.
‘ஈரம்’ படத்தில் தண்ணீரை வைத்து திகில் காட்டிய அவர், இப்போது ஒலியை வைத்து ‘சப்தம்’ படத்தின் வழியாகத் தரமான திகில் அனுபவத்தைத் தர வந்துவிட்டார். ஒலியின் வழியாக அமானுஷ்யச் சக்திகளைக் கண்டறியும் ‘கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டராக ஆதியும், ஒலி வடிவில் வரும் ஆவியிடம் சிக்கும் கதாநாயகியாக லட்சுமிமேனனும் நடித்திருக்கிறார்கள்.
‘ஈரம்’ படத்தின் ட்ரைலரை ‘கட்’செய்த சாபு ஜோசப்பை ‘சப்தம்’ படத்தின் படத்தொகுப்பாளராக ஆக்கியிருக்கிறார் அறிவழகன். ‘ஈரம்’ படத்தில் மனோஜ் பரமஹம்சாவிடம் உதவியாளராக இருந்த அருண் பத்மநாபனை ‘சப்தம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக ஆக்கியிருக்கிறார். ‘எனது நம்பிக்கையை இந்த இரு தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமல்ல; நடிகர்கள் உள்ளிட்ட மொத்த குழுவும் காப்பாற்றியிருக்கிறது. இவர்கள் அனைவரையும் தாண்டிச் சென்றிருப்பவர் ஆடியோகிராபர் உதயகுமார். அவர் இந்தப் படத்தின் இன்னொரு கதாநாயகன்’ என டிரைலர் வெளியீட்டு விழாவில் பாராட்டினார் இயக்குநர்.
எழுந்து வரும் இருவர்! - கதை பிடித்தால் தவிர ஒரு படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைப்ப தில்லை. ‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு அவர் தமிழில் இசையமைத்திருக்கும் படம் ‘ஜென்டில்வுமன்’. கடந்த மாதம் வெளியான ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ படத்தில் நடிப்பில் மிரட்டியிருந்தார் அப்படத்தின் நாயகி லாஸ்லியா. அதேபோல், ‘ஜெய்பீம்’ படத்துக்குப் பிறகு கவனம் பெறாமல் போனார் லிஜோ மோள்.
கடந்த வாரம் வெளியான ‘காதல் என்பது பொதுவுடைமை’யில் அவரின் அசுரத்தனமான நடிப்புக்குப் பாராட்டுகள் குவிந்தன. நல்ல நடிப்புத் திறன் இருந்தும் சரியான கதைகள் அமையாமல் இந்த இருவருமே தடுமாறிவந்த நிலையில், ‘ஜென்டில்வுமன்’ படம் இருவருக்கும் கனமான கதாபாத்திரங்களைக் கொடுத்திருக்கிறது. பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஓர் ஆணிடம் சிக்கும் இந்த இரண்டு பெண்களும் ஒரு புள்ளியில் சந்திப்பதுதான் கதை.
இருவருமே மிரட்டியிருக்கிறார்களாம். இந்த இருவரையும் டீல் செய்யும் இரட்டைவால் குருவியாக நடிப்பு அசுரன் ஹரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார். படத்தை எழுதி, இயக்கியிருப்பவர் ஜோஷ்வா சேதுராமன் என்கிற புதியவர். இப்படத்தின் மூலம் இந்த இரண்டு கதாநாயகிகள் மட்டுமல்ல, ஹரிகிருஷ்ணன், இயக்குநர் ஆகியோரும் பிஸியாவர்கள் என்கிறது கோலிவுட்!
நான்கு படங்களுக்கான உழைப்பு! - ஒரு படத்தின் ட்ரைலர் அல்லது இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவிலிருந்து அதிகபட்சமாக 10 பேர் கலந்துகொள்வார்கள். அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில் ' பட இசை வெளியீட்டு விழாவில் மேடை கொள்ளவில்லை.
நட்டி நடராஜ், ரியோராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்' நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்பட ஏராளமான நடிகர்கள் வந்திருந்தனர்.
பிறகுதான் தெரிந்தது, பாரதிராஜா - நட்டி- ரியோ ராஜ் - சாண்டி- யோகிபாபு கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மொத்தம் நான்கு கதைகள் என்பது. “நான்கு கதைகளிலும் நான்கு விதமான வாழ்க்கை, அவற்றை ஹைபர் லிங்க் வழியே இணைக்கும் ஒற்றைப் புள்ளி என வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணரவைக்கும் கதைக்களம். மும்பை - வேளாங்கண்ணி - சென்னை- திருத்தணி என நான்கு வெவ்வேறு ஊர்களில் கதை நடக்கிறது. நான்கு படங்களுக்கான உழைப்பைப் போட்டிருக்கிறோம்” என்றார் இயக்குநர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT