Last Updated : 19 Feb, 2025 01:06 PM

 

Published : 19 Feb 2025 01:06 PM
Last Updated : 19 Feb 2025 01:06 PM

நகர மறுக்கும் சடலம் | தஞ்சையிலிருந்து ஒரு நாட்டார் கதை!

தமிழ்நாட்டு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நடைபெறும் இதுபோன்ற கொலைகள், பொதுவெளியில் மிகக் கொடூரமாக நிகழ்த்தப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மத்திய மாவட்டங்களில் காதும் காதும் வைத்தமாதிரி சொந்த ரத்தங்களையே கொன்றுவிட்டு, அதைத் தற்கொலையாக ஜோடித்துவிடுவது உண்டு. அப்படிச் சாதிமாறிக் காதலித்த குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட பல பெண்களை நாட்டார் தெய்வங்களாகவும் மாற்றியிருக்கிறார்கள்.


நிகழ்தலைமுறையில் சினிமா பயின்று ‘எமகாதகி’ என்கிற படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் தஞ்சையைச் சேர்ந்தவர். தஞ்சை வட்டார மக்களின் வாழ்வில் பல அசைக்க முடியாத நம்பிக்கைகள் உண்டு. தற்கொலை செய்துகொண்டு இறந்து போனவர்களின் உடல்களை வைத்து விடிய விடியப் பெண்கள் கூடி மாரடித்து அழ வேண்டும். அப்படி அழுதால்தான் இறந்தவரின் சடலத்தை இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லமுடியும். இறந்தவரின் ஆத்மா இப்படிச் சுற்றமும் நட்பும் தனது சாவுக்காகச் சரியாக அழவில்லை என்றால், எவ்வளவுபேர் கூடினாலும் தனது சடலத்தை இறந்தவரின் ஆவி தூக்க விடாது. அந்த அளவுக்கு ‘பேய் கணம்’ கணக்கும். இது நம்பிக்கையை பின்னணியாக வைத்து, அதனுடன், ஒரு சாதி ஆணவக் கொலைச் சம்பவத்தையும் பொருத்தி ‘எமகாதகி’ படத்தை எடுத்திருக்கிறார் பெப்பின் ஜார்ஜ். “ஓர் இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாகக் கொண்டுள்ள கதை என்பதால் முழுப் படத்தையும் தஞ்சாவூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கினோம்” என நம்மிடம் தெரிவித்தார் இயக்குநர்.

‘எமகாதகி’ படத்தில் ரூபா கொடவாயூர், கீதா கைலாசம், ராஜப்பன்
​​​​​


அமானுஷ்ய ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘எமகாதகி’யின் டைட்டில் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர், ‘உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா’ மற்றும் ‘மிஸ்டர்.பிரக்னெண்ட்’ ஆகிய படங்களின் மூலம் கவந்த ரூபா கொடவாயூர். ரூபாவின் காதலனாக ‘பிளாக்‌ஷிப்’ புகழ் நரேந்திர பிரசாத்தும் ரூபாவின் அம்மாவாக கீதா கைலாசமும் நடித்துள்ள இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக உலகம் முழுவதும் படத்தை வெளியிடும் யெஷ்வா பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ஸ்ரீனிவாசராவ் ஜலகம் - கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள ‘எமகாதகி’ படத்துக்கு, ‘துருவங்கள் பதினாறு’, ‘டியர் காம்ரேட்’, ‘முதல் நீ முடிவும் நீ’, ‘கணம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘எமகாதகி’ மீண்டும் ஒரு ஹாரர் சீசனைத் தொடக்கி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x