Published : 17 Feb 2025 06:45 PM
Last Updated : 17 Feb 2025 06:45 PM
தென்னிந்திய சினிமாவில் பழி வாங்கும் பேயை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஏன் ‘நான் ஈ’ படத்தில் ஒரு பழி வாங்கியது! எம்.ஜி.ஆர்., ரஜினி நடித்த படங்களில் யானை பழி வாங்கியது. பாம்புகள் கூட பல ஜன்மங்கள் கழித்துப் பழிவாங்கிய படத்தைப் பார்த்திருக்கிறோம். முதல் முறையாகத் தனக்கு மிகக் கொடூரமாகத் தீங்கிழைத்தவர்களைச் சட்டப்படி ஒரு நாய் பழிவாங்குகிறது என்று கதை எழுதி ‘கூரன்’ படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி.
சித்தார்த் விபின் இசையமைத்து, மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் நாய் முதன்மைக் கதாபாத்திரத்திலும் அந்த நாய்க்கு நீதி பெற்றுக்கொடுக்கும் வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்கள். இவருடன் ஒய். ஜி. மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கனா புரொடக்சன்ஸ் சார்பில் வி.பி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ள இப்படத்தை, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படம் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில் ‘கூரன்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது:
“ என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் உண்மையிலேயே வித்தியாசமானது என்று சத்தியமாகச் சொல்லக் கூடிய கதை இது.
பலவகையில் இது வித்தியாசமான படம். வாய்பேச முடியாத ஆனால், அறிவுள்ள ஜீவனாக இருக்கும் ஒரு நாய், தன்னுடைய சட்டப் போராட்டத்திற்கு நீதிமன்றம் வரை சென்று சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொல்கிறது. அது எப்படிச் சொல்கிறது என்பதுதான் படத்தின் சுவாரசியம். இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை டூயட் இல்லை. நடனம் இல்லை.இதில் நடித்தவர்களில் நானும் ஒய்.ஜி. மகேந்திரனும் 80 வயதுக்காரர்கள்.
வயதை மீறிய உற்சாகமும் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் கடவுள் கொடுத்த பரிசு. ஓடிக் கொண்டே இருக்கிறேன், இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். எதையும் பாரமாகத் தலையில் போட்டுக் கொள்வதில்லை .கடைசி வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.உடனிருப்பவர்கள் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் .நான் அலுவலக வரும்போது அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஒன்றும் வேலை இல்லை என்றால் கூட அனைவருடனும் பேசிக் கொண்டிருப்பேன். ஏதாவது செய்து கொண்டிருப்பேன். ஏனென்றால் வீட்டில் உட்காரக்கூடாது என்று நினைப்பேன்.சக்கர நாற்காலியில் உட்காரும் வாழ்க்கை எல்லாம் வேண்டாம் என்று காலையில் 9:00 மணிக்கு அலுவலகம் வந்து விடுவேன்.
‘கூரன்’ படத்தை கொடைக்கானலில் ஜனவரி மாதக் குளிரில் படமாக்கினோம். குளிரில் நடுங்கிக்கொண்டே செல்வோம். படப்பிடிப்பு ஆரம்பித்ததும் நடுக்கமெல்லாம் போய்விடும். இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஜுரம் வந்ததே கிடையாது .அங்கே போனபோதுதான் முதல் முறையாக வந்தது.ஆனால் படப்பிடிப்புக்குப் போனால் எனக்கு எல்லாமும் போய்விடும். வியாதி என்பது நம் மனம் நினைப்பதுதான்.
வாழ்க்கையைச் சுலபமாக எடுத்துக் கொண்டால் கடைசி வரை நன்றாக இருக்கலாம்.என் எல்லாப் படத்திலும் ஏதாவது ஒரு மெசேஜ் இருக்கும். இந்தக் கதையைக் கேட்டவுடன் எனக்கு அது பிடித்திருந்தது.நாய் நீதிமன்றம் செல்கிறது. அதுவே புதிதாக இருந்தது.நான் எழுபது படங்களில் ஐம்பது படங்களில் மனிதன் நீதிமன்றம் சென்றது போல் தான் எடுத்திருக்கிறேன்.நாயோ பூனையோ போனது போல் எடுக்கவில்லை. அதுதான் புதிதாக இருந்தது. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களை, தாங்கள் அன்பு செய்த நாயுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
இந்தப் படத்தை டெல்லியிலிருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அவர் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை, கண்கலங்கினார். சில படங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது. திரை எழுத்தாளன் படைக்கும் கதாபாத்திரங்கள் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். இவனைப் போல வாழ வேண்டும் என்கிற மாதிரி முன்னுதாரணமாக அந்தப் பாத்திரம் இருக்க வேண்டும். கத்தி எடு தலையை வெட்டு என்று படம் பார்த்து விட்டு வெளியே செல்கிறவனும் கத்தி எடுத்து கையை வெட்டு, தலையை வெட்டு என்று செய்து கொண்டிருந்தால் இளைய சமுதாயம் என்ன ஆவது? அந்தப் பொறுப்புணர்வு வேண்டும் .சினிமா என்பது சாதாரணமானதல்ல. இந்தப் படத்தில் கத்தி இல்லை; ரத்தம் இல்லை;துப்பாக்கி சத்தம் இல்லை; ஆனால் ஒரு சக்தி வாய்ந்த விஷயம் இருக்கிறது.அதை நாங்கள் சத்தமாகத் தீவிரமாகச் சொல்லாமல் உணர்வுபூர்வமாக யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறோம்.
ஒரு காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று தெரியும். இப்போது வில்லன் செய்யும் அவ்வளவு கெட்ட செயல்களையும் கதாநாயகர்கள் செய்கிறார்கள். யார் வில்லன், யார் கதாநாயகன் என்றே தெரிவதில்லை.படம் பார்க்கும் இளைஞர்களை நாம் எப்படிக் கொண்டு போக வேண்டும்? சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை. அதை நாம் சரியாகச் செய்தால் இந்த சமுதாயத்தை திருத்த முடியும்.இயக்குநர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அந்தப் பொறுப்புணர்வும் கடமையுணர்வும் சமூக உணர்வும் வேண்டும்.
நான் பத்து ஆண்டு காலமாகச் சில படங்களில் நடித்து வருகிறேன். எனக்குத் திருப்திகரமாக அமைந்த படம் இது. நான் அனுபவித்துச் செய்து இருக்கிறேன்.இரண்டு மணி நேரம் அழகாக அமர்ந்து பார்க்க வைக்கும் படியான படம். அவ்வளவு நேர்த்தியாக உள்ளது” என்று பேசினார். படத்தில் நடித்திருந்த நாயும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வின் மேடையில் படக் குழுவினருடன் கலந்துகொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT