Published : 14 Feb 2025 06:52 AM
Last Updated : 14 Feb 2025 06:52 AM
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு குடும்பத் தினரும் நண்பர்களும் பவதாரிணியுடனான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் பவதாரிணியின் நெருங்கிய தோழியும் பிரபலப் பின்னணிப் பாடகியுமான ஷாலினி சிங், இசையஞ்சலி ஒன்றை நிகழ்த்த இருக்கிறார். அது பற்றித் தனது சமூக வலைதளப் பக்கத்தில்: “இசையையும் பாடல்களையும் நீங்கள் எவ்வளவு நேசித்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் பிறந்தநாளில், எனக்குத் தெரிந்த விதத்தில், இசை மூலம் உங்களைக் கௌரவிக்க விரும்புகிறேன்.
உங்களின் உலகத்தை அர்த்தப்படுத்திய பாடல்களை, உங்களுக்குப் பிடித்த அனிமேஷன் கிளாசிக் பாடல்களை, உங்கள் தந்தை மேஸ்ட்ரோவுக்காக நீங்கள் பாடிய அற்புதமான பாடல்களை இதில் ஒன்றிணைக்க இருக்கிறேன். நீங்கள் எங்களைப் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் உங்கள் குரல், உங்கள் சிரிப்பு உள்பட நாம் பகிர்ந்து கொண்ட நட்பின் மகத்தான தருணங்கள் நினைவுகளாக அப்படியே உள்ளன.
இந்த இசையஞ்சலி உங்களை நினைவுகூர்ந்து கொண்டாடுவதற்கான எனது வழி. நம் பிணைப்பின் வெளிப்பாடு” என்று குறிப்பிட்டுள்ளார். இக்குரல் பதிவு இடம்பெற்றுள்ள காணொளியில் ஷாலினியும் பவதாரிணியும் நட்பைக் கொண்டாடும் காட்சித் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
85 வயதில் நாயகன்! - இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நேரத்தில் திரைக்கு வருகிறது காமெடி கிங் கவுண்டமணி, தன்னுடைய 85வது வயதில் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’. சாய் ராஜகோபால் இயக்கத்தில் யோகி பாபு உள்பட இருபதுக்கும் அதிகமான நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை, டிரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், கவுண்டமணியை பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து, ‘16 வயதினிலே’ தொடங்கி அவரை பிஸியாக்கிய திரைக்கதை திலகம் கே.பாக்யராஜும் கவுண்டமணியும் ஒருசேரக் கலந்துகொண்டனர்.
இவ்வளவு வயதிலும் மிகச் சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார் கவுண்டமணி. அது மட்டுமல்ல; உடன் நடித்தவர்கள் ஷாட்டுக்கு முன் ஒத்திகையில் ஈடுபட்டபோது, ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஊக்கமூட்டும் விதமாக கவுண்டமணியும் அவர்களுடன் வசனம் பேசி அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்திருக்கிறார்.
புதிய திரைப்பட நகரம்! - ‘வி1 கொலை வழக்கு’ ‘ஹர்காரா’ ஆகிய இரண்டு தரமான த்ரில்லர் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த நிறுவனம் பேரடிம் பிக்சர்ஸ் ஏடி லிமிடெட் (Paradigm Pictures AD). இங்கிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் உள்பட உலகின் பல நாடுகளில் மென்பொருள், நிதி நிர்வாகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு உள்பட பல துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பன்னாட்டு நிறுவனம் எஸ்ராம் & எம்ராம் (SRAM & MRAM). இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஹாலிவுட்டுக்கு இணையான திரைப்பட நகரம் ஒன்றை 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரிக்க முன்வந்துள்ளன. லண்டனில் நடந்த பிரத்யேக நிகழ்ச்சியில் இந்த இரு நிறுவனங்களும் தங்கள் தொழில் கூட்டணியை அறிவித்தன. பேரடிம் பிக்சர்ஸ் நிறுவனத் தலைவர் அரவிந்த் தர்மராஜ், எஸ்ராம் & எம்ராம் குழுமத்தின் தலைவர் சைலேஷ் எல். ஹீரானந்தானி ஆகியோருடன் பி.பி.சி., நெட்ஃபிளிக்ஸ் உயர்மட்ட நிர்வாகிகள், ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ புகழ் இயக்குநர் டேனி பாய்ல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எஸ்ராம் & எம்ராம் குழுமத்தின் தலைவர் நிகழ்ச்சியில் பேசும்போது: “எங்களின் இந்தக் கூட்டணி உலகத் தரம் வாய்ந்த திரைப்பட நகரத்தை தென்னிந்தியாவில் உருவாக்குவதாகும். எந்த நகரத்தில் அது அமையவிருக்கிறது என்பதை விரைவில் அறிவிப்போம்.
அந்தத் திரைப்பட நகரத்தில் ஐரோப்பா, அமெரிக்காவில் தொழில்நுட்ப திறமையாளர்களுடன் அதிநவீனத் தொழில் நுட்பத்தை ஒன்றிணைத்து, கதைசொல்லல் மற்றும் தயாரிப்பின் சிறப்பம்சங்களின் தரத்தை இந்திய சினிமாவில் குறிப்பாகத் தென்னிந்திய சினிமாவில் மறுவரையறை செய்வதாகும்” என்றார். தயாரிக்கவிருக்கும் படங்களின் பட்டியலையும் திரைப்பட நகரத்தில் இடம்பெறவிருக்கும் வசதிகளை யும் அறிவித்தார் அரவிந்த் தர்மராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT