Last Updated : 14 Feb, 2025 06:45 AM

 

Published : 14 Feb 2025 06:45 AM
Last Updated : 14 Feb 2025 06:45 AM

காதல் எப்போதும் பொதுவுடைமைதான்! | திரைப் பார்வை

சமூகக் காணொளி வலைதளத்தில் தன் கருத்துகளுக்காகப் புகழ்பெற்றிருக் கிறார் லட்சுமி (ரோகினி). அவருடைய மகள் ஷாம் (லிஜோ மோள்), தனது காதலைப் பற்றி அம்மாவிடம் கூறுகிறார். அதை உடனடியாக ஏற்கும் லட்சுமி, காதலனை வீட்டுக்கு அழைக்கும்படி கூறுகிறார். வந்ததும்தான் தெரிகிறது ஷாமின் காதலர் ஓர் ஆண் அல்ல; பெண் என்பது.

என்னதான் பிரபலமான கருத்தாளராக, பெண்ணியவாதியாக இருந்தாலும் ஒரு தாயாக மகளின் தேர்வு ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதால் லட்சுமி அக்காதலை ஏற்க மறுக்கிறார். அங்கிருந்து விரியும் கதையில் ஷாமின் தன்பாலினக் காதல் உணர்வு எந்த வகையில் நேர்மையானது என்பதை நோக்கிச் செல்லும் படத்தின் இறுதியில் எது வென்றது, காதலா, குடும்பமா என்பதை நோக்கிக் கதை நகர்கிறது.

ஆண் - பெண் இடையில் உருவாவது மட்டும்தான் காதல் என்கிற பொதுப்புத்திக்கு அமைதியாகச் சில அறிவியல் உண்மைகளைப் போகிற போக்கில் எடுத்துச் சொல்கிறது படம். மாற்றுப் பாலினத்தவர், பால் புதுமையினர் ஆகியோர் எதிர்கொண்டுவரும் சமூக ஏற்புச் சிக்கல்களைத் திறந்த உரையாடலுக்கு உட்படுத்தியிருக்கிறார் ‘லென்ஸ்’, ‘தலைக் கூத்தல்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநரான ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

முதல் காட்சியிலிருந்தே கதையின் சிக்கலைத் தொடங்கிவிடும் இயக்குநர், ஷாமின் காதல் வீட்டில் புயலைக் கிளப்பிய பின் அது சென்றடையும் இடத்தை அற்புதமான காதல் திரைப்படமாக வடித்துக் கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் ஆபாசமோ அருவருப்போ இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்புத் தகுதி. தன்பாலின ஈர்ப்புள்ள ஒரு பெண்ணுக்கு ஆணுடனான திருமணம் எப்படிப்பட்டதாக அமையும் என்கிற பிளாஷ் பேக் கண்ணீரைப் பெருக்குகிறது.

லட்சுமிக்கும் வீட்டுப் பணிப்பெண்ணான மேரிக்கும் (தீபா) இடையிலான தோழமையும் சகோதர உணர்வும் அக்கதாபாத்திரம் முக்கியப் பிரச்சினையில் ஊடாடும் விதமும் திரைக்கதையில் அழுத்தமாகப் பதிந்துள்ளன. மேரி திரும்பக் கொடுக்கும் 500 ரூபாய் விலைமதிப்பற்றது.

சமூகத்தின் அச்சில் வார்க்கப்பட்ட பெற்றோர்கள், தன் பாலினக் காதலை ஏற்பதின் பின்னாலுள்ள மனச் சிக்கல்களை அவர்களின் பக்கம் நின்று உரையாடியிருப்பதிலும் படம் நேர்மையான நடுநிலையை வகித்திருக்கிறது.

லட்சுமியாக ரோகினி, ஷாம் ஆக லிஜோ மோள், அவரது காதலியாக வரும் அனுஷா பிரபு, ஷாமின் தந்தையாக வரும் வினித், ரவீந்த்ராவாக வரும் இளைஞர் என அனைவரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். தன்பாலினக் காதலில் இருக்கும் நியாயங்களைக் கவித்துவமான காதல் காட்சிகளுடன் பேசியிருக்கும் இப்படம் பரவலாகச் சென்றடைய வேண்டிய ஒரு பாடம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x