Last Updated : 07 Feb, 2025 06:06 AM

 

Published : 07 Feb 2025 06:06 AM
Last Updated : 07 Feb 2025 06:06 AM

சுயசரிதை எழுத வைத்த சினிமா! | திரை நூலகம்

சினிமா குடும்பப் பின்புலம் ஏது மின்றி குக்கிராமங்களிலிருந்து வந்து திரையுலகில் அடையாளம் பெற்ற இயக்குநர்களின் வாழ்க்கை, திரைப்படத்தைவிட சுவாரசியம் மிகுந்தது. சேரன், பாலா தொடங்கி ‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ படங்களின் வழியாக உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்து வரும் பி.எஸ்.வினோத்ராஜ் வரை அவர்களின் வெற்றிக்கதைகளை வாசித்தால் இதை உணர முடியும்.

‘என்னுள் நீ எப்படி’ என்கிற இந்தச் சுயசரிதை நூலும் இந்த வரிசையில் இடம் பிடிக்கிறது. ‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நாயகனாக நடித்துக் கடந்த அக்டோபரில் வெளியான படம் ‘ஆலன்’. எழுத்தாளன் ஆக விரும்பிய தியாகு (வெற்றி) என்கிற 14 வயது சிறுவன் வீட்டைவிட்டு காசி மாநகரத்துக்கு ஓடிப்போய் துறவு மேற்கொள்கிறான்.

10 ஆண்டுகளுக்குப் பின் அவனுக்குள்ளிருக்கும் எழுத்தாளன் அவனைத் துரத்த, ஆன்மிகத்தைத் துறந்து காசியிலிருந்து வெளியேறுகிறான். அவனது பயணம் என்னவானது என்பதுதான் ‘ஆலன்’ படத்தின் கதை. விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்த இப்படத்தை எழுதி இயக்கியவர்தான் இந்த நூலின் ஆசிரியரான சிவா.ஆர்.

வெள்ளூர் என்கிற பின்தங்கிய விவசாய கிராமத்தில், வறுமையின் நிழலில் பிறந்து வளர்ந்தாலும் வாசிப்பால், தன் வாழ்க்கையை விசால மாக்கிக் கொண்டிருக்கிறார் நூலாசிரியர். வாசிப்பும் திரையரங்க அனுபவமும் அவரை சினிமா இயக்கம் என்கிற லட்சியக் கனவைச் சிறு வயதிலேயே வரித்துக்கொள்ளச் செய்கின்றன.

என்றாலும் குடும்பத்துக் காகச் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்துபோய் உழைத்துப் பொருள் சேர்த்து, தன் குடும்பத்துக்கான அவ்வளவு தேவைகளையும் நிறைவேற்றியபின், பட்டுப்போகாத தன்னுடைய பால்யக் கனவான சினிமா இயக்கத்தை ‘ஆலன்’ திரைப்படம் வழியாக வென்றெடுத்த கதையைச் சுயசரிதையாகப் படைத்திருக்கிறார்.

சிறு வயதில் சினிமா தனது வாழ்க்கைக்குள் எப்படி வந்தது என்பதில் தொடங்கி, தனது புலம்பெயர் வாழ்க்கை, ‘ஆலன்’ படத் திரைக்கதைக்கான தாக்கம், அதை எழுதி முடித்தது, யாரிடமும் உதவியாளராகப் பணிபுரியாமல் சரியாகத் திட்டமிட்டுப் படத்தை எடுத்து முடித்தது, படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் என ஒருவரது சுயசரிதையைச் சுவாரசியமாக எழுத வைத்திருக்கிறது ஒரு தமிழ் சினிமா. சினிமாவை நேசிக்கும் எவரொவரும் ‘என்னுள் நீ எப்படி?’ என்று சினிமா மீதான காதலை நினைவுபடுத்திப் புதுப்பித்துக்கொள்ள இந்நூல் கைகொடுக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x