Published : 03 Feb 2025 11:13 AM
Last Updated : 03 Feb 2025 11:13 AM
தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்த விரும்பாத ஒரு கருப்புப் பெட்டி தான் மனித மனம். ஆனால், இன்றைய நவீன மனிதர்களின் கருப்புப் பெட்டி என்பது அவர்கள் கையிலிருக்கும் ஸ்மார்ட் போன். அதை அலசி ஆராய்ந்தாலே வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறிவிடும்.
ஒரு மனிதன் தன்னையொரு திறந்த புத்தகம் என்று வெளியுலகத்துக்குப் பிரகடனப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அவன் தன் மரணத்துக்கு முன்பு வரையிலும் கூட, தன் சுயத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் என்று கருதுகிற அனைத்து ரகசியங்களையும் மனதின் அடியாழத்தில் புதைத்துவிடுகிறான்(ள்). ஆனால், இந்தக் கருதுகோள் கூட ஸ்மார்ட் போன் என்கிற டிஜிட்டல் கருவி வருகிற வரைதான். இன்று, ‘உன் ஸ்மார்ட் போனைக் கொடு! நீ யாரென்று சொல்கிறேன்!’ என்று சொல்கிற அளவுக்கு தனி மனித ரகசியங்கள் அனைத்தையும் டிஜிட்டல் யுகம் என்பது வேவு பார்த்துத் திருடிக்கொள்வதை அல்லது அம்பலப்படுத்திவிடுவதை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் படம் படம் தான் ‘ரிங்.. ரிங்..’.
விவேக் பிரசன்னா, அர்ஜுனன், பிரவீன் ராஜா, டேனியல் ஆகிய நால்வரும் பள்ளிக் காலம் முதல் ஒன்றாகப் படித்த நண்பர்கள். அவர்களில் விவேக் பிரசன்னா, அர்ஜுனன் இருவரும் திருமணமானவர்கள். பிரவீன் ராஜா - சாக்ஷி இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. டேனியலும் ஜமுனாவும் காதலர்கள். இந்த நான்கு ஜோடிகளும் பிரவீன் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய வீட்டில் சந்தித்துப் பிறந்த நாள் விருந்துடன் அரட்டை அடிக்கத் தொடங்குகிறார்கள்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு அந்தப் பிறந்த நாள் நிகழ்வை மேலும் சுவாரசியப்படுத்தும் விதமாக விவேக் பிரசன்னா ஒரு விளையாட்டு விளையாடலாம் என்கிறார். அந்த விளையாட்டு இதுதான்: ‘அனைவரும் அவரவர் ஸ்மார்ட் போன்களை சாப்பாட்டு மேஜை மேல் வைக்க வேண்டும். யாருக்கு அழைப்பு, மெசேஜ், வந்தாலும் அவற்றை அந்த 8 பேரும் பொதுவில் தெரிந்துகொள்ளும் விதமாக ‘ஸ்பீக்கர்போன்’ மோடில் வைத்து பேச வேண்டும்.
வரும் மேசேஜ்களையும் வாட்ஸ் ஆப் சாட்களையும் அனைவருக்கும் காட்ட வேண்டும். இதன் மூலம், குடும்பத்துக்கும் சமூகத்துக்கு ஒழுக்கமாக நடந்துகொள்வதில் இந்த 8 பேரில் யார் சிறந்தவர் என்பது தெரியவரும்’. இந்த விபரீத விளையாட்டுக்குச் சிலர் தயங்கினாலும் விவேக் பிரசன்னா தரும் அழுத்தத்தால் ஒப்புக்கொள்கிறார்கள்.
இதன் பின்னர்தான், பரிசுத்தவான்கள் என்று பரஸ்பரம் கருதிக்கொண்டிருந்த ஒவ்வொருவரது முகத்திரையும் தாறுமாறாகக் கிழிந்து தொங்குகிறது. இறுதியில் இந்த விளையாட்டு நன்மையில் முடிந்ததா, இல்லை நண்பர்களின் பிரிவில் முடிந்ததா என்பதை அறிய நீங்கள் இப்படத்தை அவசியம் பாருங்கள்.
எல்லாருக்கும் நாங்களே நல்ல தம்பதி எனக் காட்ட விளையும் விவேக் பிரசன்னா - ஸ்வயம் சித்தா தம்பதியின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் திருட்டுத்தனங்கள் வெளிப்படும்போது சூடு பிடிக்கும் கதை, ஏற்கெனவே காதலி ஒருவர் இருக்கும்போது, ஒரு பாதுகாப்புக்கு என்கிற தன்னம்பிக்கை குறைவான மனநிலையுடன் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் டேனியல் காதலைச் சொல்லி வைக்கும் அபத்தம் வெளிப்பட்டு நிற்பது வரை அதிரடியாக ரகசியங்களின் குட்டி உடைந்தபடி இருப்பது வீட்டின் ஒரே ஹாலில் கதை நடந்தாலும் சுவாரசியமாக இருக்கிறது.
பிரவீன் ராஜா - சாக்ஷி அகர்வால் காதலில் இருக்கும் எதிர்பாராத் தன்மை திரைக்கதையின் இறுதிப் பகுதியைக் காப்பாற்றுகிறது. அர்ஜுனன் - சஹானா தம்பதியின் தாம்பத்தியப் புரிதல், இன்று பெரும்பாலான ஜோடிகளிடம் இருக்கும் சிக்கல். நான்கு ஜோடிகளின் ஸ்மார்ட் போன்கள் பொதுவில் வைக்கப்படும்போது வரும் அழைப்புகள், மேசேஜ்களால் அவர்களது வாழ்க்கையில் பெரும் புயல் அடிக்கப்போகிறது என்று எதிர்பார்த்தால், தங்கள் சிக்கல்களை அவர்கள் எவ்வாறு கடக்க முற்படுகிறார்கள் என்பதை இயக்குநர் சக்திவேல் சித்தரித்த விதம் சிறப்பு. ரகசியங்களை எப்படிப்பட்டக் காரணங்களுக்காக மறைக்கலாம், மறைக்கக் கூடாது என்பதைச் சொன்ன விதத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர். .
தியாகு கதாபாத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னா, பூஜாவாக வரும் சாக்ஷி அகர்வால், கதிராக வரும் டேனியல், சிவாவாக பிரவீன் ராஜா, அர்ஜுனாக வரும் அர்ஜுனன், அவரது மனைவியாக வரும் ஸ்வயம் சித்தா, இந்துவாக வரும் சஹானா, டேனியலின் காதலியாக வரும் ஜமுனா என அனைவரும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
வசனத்தை மட்டும் வைத்து, ஒரே இடத்தில் ஒரு முழுக் கதையை விறுவிறுப்பாக நகர்த்த முடியும் என்று காட்டியதற்காகவே இயக்குநர் சக்திவேலைப் பாராட்டலாம். அதேநேரம், ஒரு மாறுபட்ட டிவி சீரியல் பார்க்கும் அனுபவம் போன்றும் பலருக்குத் தோற்றம் தரலாம். இக்குறையைத் தாண்டி நவீன வாழ்க்கையின் கருப்புப் பக்கங்களை வெட்ட வெளிச்சமாக்கும் படமாக கவர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT