Published : 06 Feb 2018 08:48 AM
Last Updated : 06 Feb 2018 08:48 AM

சின்னத்திரை நடிகர்கள் மீது மக்களுக்கு பாசம் அதிகம்: நடிகை சனா நேர்காணல்

மிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் சனா. விஜய் டிவியில் விரைவில் தொடங்கவுள்ள ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடர் வழியாக சின்னத்திரையில் அறிமுகமாகிறார். ‘‘நான் சின்னத்திரை பயணம் தொடங்கிட்டேன்னு, நெருக்கமான சிலஃபிரெண்ட்ஸிடம்கூட இன்னும் சொல்லலை. சீரியல்ல என்னைப் பார்த்ததும் ஷாக் ஆகப்போறாங்க. ‘ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை?’ என்று அன்பான திட்டும் கிடைக்கப்போகுது’’ என்று பேசத் தொடங்குகிறார் சனா.

சின்னத்திரை பக்கம் போகும் எண்ணம் வந்தது எப்படி?

சின்னத்திரையில் புதிது புதி தாக வரும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் பெயரும், பாராட்டும் என்னை வெகுவாக ஈர்த்தது. சினிமாவை விட சின்னத்திரை கதாபாத்திரங்களையும், அந்த நடிகர், நடிகைகளையும் நமக்கு வேண்டிய ஆட்கள், சொந்தக்காரர்கள் போலவே மக்கள் பார்க்கிறார்கள். ரசிகர்களின் அந்த அன்பும், பாசமும் எனக்கும் கிடைக்கட்டுமே என்ற ஆசையில்தான் இங்கு வந்திருக்கிறேன்.

தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகையாக தனி இடம் பிடித்த நீங்கள், சின்னத்திரை பயணத்தை தமிழில் தொடங்குவது ஏன்?

சின்னத்திரை தொடர்களுக் காக கதை கேட்க ஆரம்பித்த தும் 20-க்கும் மேற்பட்ட தெலுங்கு கதைகள் தேடி வந்தன. ஆனாலும், நல்ல கதை, கதாபாத்திரம், அதை எடுத்துச் செல்ல நல்ல சேனல் ஆகியவை தான் எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. அந்த வகையில் விஜய் டிவியில் தொடங்க உள்ள ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடரின் கதை என்னை வெகுவாக ஈர்த்தது. தவிர, என்னைச் சுற்றி சுழலும் கதையும், கதாபாத்திரங்களின் வடிவமும் தனித்து இருந்தது. சின்னத்திரையில் அறிமுகமாக இது தான் சரியான வழி என்று களமிறங்கி, தற்போது ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன்.

இந்த தொடரில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

பணமும், அதிகாரமுமே வாழ்க்கையில் முக்கியம்; தன் மகன் மற்றும் குடும்பத்தின் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிற பெண். இது நெகடிவ் கதாபாத்திரம்போல தெரிந்தாலும், தனக்கு சரி என்று தோன்றுவதை தெளிவாக செய்கிற கதாபாத்திரம்.

‘ராஜபாட்டை’, ‘வஜ்ரம்’, ‘எனக்கு வேறு எங்கும் கிளை கள் கிடையாது’ என்று சில தமிழ் படங்களில் மட்டுமே முகம் காட்டியிருக்கிறீர்களே?

இங்கு ராதிகா, ரம்யாகிருஷ் ணன் போன்ற நடிகைகள் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பதுபோல, தெலுங்கில் எனக்கென ஒரு அடையாளம், இருப்பிடம் உருவாக்கி வைத்திருக்கிறேன். அதன் காரணமாக, இப்போதும் தெலுங்கு சினிமாவில் பிஸியாகவே இருக்கிறேன். அதனால் தான் மற்ற மொழிகளில் தேர்ந்தெடுத்தே ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகிவிட்டது. இப்போதுகூட, ஒரு மாற்றம் வேண் டும் என்ற ஆசையில் எடுத்த முயற்சிதான் சின்னத்திரை நடிப்பு.

தமிழ் சின்னத்திரை உலகம் எப்படி இருக்கிறது?

நான் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் சின்னத்திரை உலகுக்கு வரவில்லை. வேலையில் திருப்தி, மகிழ்ச்சி, பாராட்டு கிடைத்தால் போதும். அதெல் லாம் இங்கு நிறையவே கிடைக்கிறது. எப்போதும் இங்கு நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், மரியாதையை டெக்னீஷியன்களுக்கும் தருவார்கள். சின்னத்திரையிலும் அப்படித்தான் இருக்கிறது.

சின்னத்திரை பயணம் தொடங்கிவிட்டீர்கள். இனி இங் கும் பிஸிதானோ?

‘ஒருவழியாக சின்னத்திரைக்கு வந்துவிட்டோம்.. இனி நிறைய கதைகளை தேர்வு செய்து மாதம் முழுக்க நடித்துக்கொண்டே இருப்போம்’ என்ற திட்டமெல்லாம் இல்லை. நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் போதும். இந்த இரண்டும் தொலைக்காட்சி நேயர்களிடம் போய்ச் சேர வேண்டும். அதுவே என் விருப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x