Published : 02 Feb 2018 11:01 AM
Last Updated : 02 Feb 2018 11:01 AM
ச
முத்திரக்கனி, வேல ராமமூர்த்தி என்று தேர்ந்த நடிப்புக் கூட்டணி யோடு வேட்டி சட்டை, வீரம் ததும்பும் கதை என்று இம்முறை கவனமாகக் களம் இறங்கி இருக்கிறார், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அவருடன் உரையாடியதிலிருந்து...
கிராமம், ஜல்லிக்கட்டு, புழுதிச் சண்டை என்று இரண்டாவது படத்தில் வித்தியாசம் காட்டுகிறீர்களே?
மதுரை எங்கள் ஊர். அதுவும் சின்ன வயசுல இருந்தே எப்போது நேரம் அமைகிறதோ அப்போது எல்லாம் மதுரை, அதைச் சுத்தி இருக்கிற கிராமங்களுக்கு வந்து போய்க்கிட்டிருக்கேன். அதனாலேயே எனக்கு ‘மதுர வீரன்’
படத்தில் நடிக்கும்போது ஒரு மதுரை கிராமத்துப் பையன் உணர்வே இருந்தது. ஊர் பக்கம்போனதும், ‘நம்ம மாமன் மகன்
சண்முகம் வந்திருக்கான், நம்ம பாண்டி பேராண்டியாச்சே!’ என்று ஊர்க்காரர்கள் அன்பே என்னைச் சூழ்ந்தது. என்ன ஒண்ணு, சென்னையில் இருக்கும்போது ஜீன்ஸ் பேண்ட், டிசைன் டிசைனா சர்ட்னு இருப்பேன். அங்கே போனதும், வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டைனு மாறினேன்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் இயக்கம், பெரிய நடிகர்கள் என்று புதிய கூட்டணி அனுபவம் எப்படி இருந்தது?
இயக்குநர் முத்தையா அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பதால் ஒவ்வொரு கட்டத்தையும் நேர்த்தியாக உருவாக்கும் திட்டத்தோடு இறங்கினார். அவர் திட்டமிட்டு வேலை செய்யும்விதம் எனக்குப் பெரிய படிப்பினையாக இருந்தது. நிறையக் கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் சமுத்திரகனியிடம் பேசும்போது பொதுவிஷயங்கள், நாட்டு நடப்பு பற்றிய அவரது பார்வையில் நிறையத் தெரிந்துகொண்டேன்.
இது ஜல்லிக்கட்டைப் பற்றிய கதையா?
சின்ன வயதில் இருந்தே ஜல்லிக்கட்டு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படம் முழுக்க ஜல்லிக்கட்டும் அதன் பிரச்சினைகளையுமே பேசும். குறிப்பாக, ஜல்லிக்கட்டு விஷயத்தில் உள்ள அரசியல் பிரதானமாக இருக்கும். இந்தப் படத்துக்காக மக்களையும் காளைகளையும் ஒன்று திரட்டி புதிதாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி, படமாக்கினோம். இது நமது வீர விளையாட்டு, நமது பண்பாடு என்று மாணவர்களுக்கு ஒருமனதாக எப்படி உணர்வு வெளிப்பட்டு, அதன் வழியே போராட்டம் வெடித்தது என்பதையும் இதில் தொட்டிருக்கிறோம். அதுகூடவே காதல், சண்டை, வீரம், உறவுகளின் அன்பும் இந்தப் படத்தில் இருக்கும் மற்ற அம்சங்கள்.
‘மதுர வீரன்’ எம்.ஜி.ஆர் படத் தலைப்பு எப்படி??
எம்.ஜி.ஆரைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும். அதுவும் என் அப்பாவுக்கு அவ்வளவு பிடிக்கும். அவர்தான் எனக்கு எம்.ஜி.ஆர். படங்களைத் தேடித் தேடி பார்க்க வைத்தார். அவர் நடித்த படத்தின் தலைப்பில் நடிப்பதில் இன்னும் எனக்கு சந்தோஷம்.
பட வெளியீட்டு நேரத்தில் அமெரிக்காவில் சுற்றுகிறீர்களே?
சின்னச் சின்ன சொந்த வேலைகளுக்காக இங்கே தங்க வேண்டிய சூழல். பட வெளியீட்டு நேரத்தில் ஊரில் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். அதற்குள் என் வேலைகளை இங்கே முடித்துக்குகொண்டு சென்னைக்கு வந்துவிடுவேன்.
நடிக்க வருவதற்கு முன் போட்டோகிராஃபியில் கவனம் செலுத்தி வந்தீர்களே?
‘மதுர வீரன்’ படப்பிடிப்பில் கூட கேமராவோடுதான் திரிந்தேன். ஏன், இங்கே இப்போது அமெரிக்காவில்கூட புகைப்படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். போட்டோகிராஃபி என்றதும் சிலர், ‘ஒளிப்பதிவாளர் ஆக வேண்டியதுதானே?’ என்கிறார்கள். அப்படி ஆவேனா, இல்லையா என்பதெல்லாம் இப்போது தெரியவில்லை. சின்ன வயதில் இருந்தே போட்டோ எடுப்பது என்றால் அவ்வளவு பிடிக்கும். ‘சினிமாவுக்கு வா!’ என்று அப்பா அழைத்ததால் நடிக்க வந்தேன். போட்டோகிராஃபி எப்போதும் என் கூடவே இருக்கும். அதை என்னால் விட முடியாது. கேமராவை எப்போதும் கீழே வைக்க மாட்டேன்.
அப்பாவின் வழியில் உங்களுக்கும் உங்கள் அண்ணன் விஜய்பிரபாகருக்கும் அரசியல் ஈடுபாடு உள்ளதா?
அண்ணன் ஒரு ஆர்கிடெக்ட். அதுவும் இப்போது முழுக்க விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். என்னைப் பொறுத்தவரையில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதுவும் அப்பா மாதிரி சினிமாவில் பெயர் வாங்க வேண்டும். இப்போது என் கவனம் முழுவதும் நடிப்பில் மட்டும்தான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT