Published : 26 Jan 2018 10:18 AM
Last Updated : 26 Jan 2018 10:18 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: பழங்குடிகளின் தலைவர்!

மாறுபட்ட கதாபாத்திரங்களை விரும்பி ஏற்று நடித்துவரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இதில் அவர் பழங்குடி மக்களின் தலைவராக 8 விதத் தோற்றங்களில் நடித்திருக்கிறார். இதில் கௌதம் கார்த்திக் இன்னொரு கதாநாயகன். ஒரு இடைவெளிக்குப் பிறகு காயத்திரி மீண்டும் முகம் காட்டியிருக்கிறார். படத்தை எழுதி இயக்கித் தயாரித்திருக்கிறார் ஆறுமுக குமார். பிப்ரவரி 2 அன்று வெளியாகும் இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படம் என்கிறார் இயக்குநர்.

26chrcj_mykin and ram மிஷ்கின், ராம் தலைசாய்க்க ஓரிடம்

ஜி.ஆர். ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், ராம், பூர்ணா உட்பட பலர் நடித்திருக்கும் படம் ‘சவரக் கத்தி’. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராமின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசும்போது, “இந்த உலகில் குடிக்க, வயிறார உண்ண, அன்பைப் பற்றிப் பேச, படிக்க, கவலை மறந்து தலைசாய்க்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம்தான்.

மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதைப் படிப்பாரா என்று எல்லோரும் கேட்பார்கள். அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்தப் புத்தகம் தேவைப்படுகிறதோ அதைப் படிப்பார். என்னுடைய படத்திலும் மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. அதற்கு மாறாக இந்தப் படத்தில் டார்க் காமெடி இருக்கும். என்னைப் பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச் சிறந்த கதை ‘சவரக் கத்தி’தான். இதில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றிவிட்டது” என்றார்.

அணைகள் கூடாது!

மலையாளத்தில் இதுவரை ஏழு படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ. நிஷாத் தமிழில் முதன்முறையாக இயக்கியிருக்கும் படம் ‘கேணி’. “எதிர்காலத்தில் மக்களுக்கு முக்கிய பிரச்சினையாகக் குடிநீர்தான் இருக்கும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை வணிகப்பொருள் ஆக்கவும், அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் மூலம் பேசியிருக்கிறேன்.

எனது முந்தைய படங்கள் போலவே இதுவும் சமூக விழிப்புணர்வை த்ரில்லர் பாணியில் பேசும்” என்கிறார் இயக்குநர். படத்தில் ஆச்சரியமான விஷயம் ஜெயப்பிரதா. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவருடன் பார்த்திபன், அனு ஹாசன், ரேகா, ரேவதி படத்தின் நட்சத்திரத் தேர்வு இது வேறுவகைப் படம் என்பதைச் சொல்கிறது.

நிலத்துக்காக நிலம்!

சாயப்பட்டறைக் கழிவால் நிலமும் நிலத்தடி நீரும் விவசாயமும் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் அவலத்தை ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் அமீரின் உதவியாளர் முத்து கோபால். இதில் விவசாயியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமீர், படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார். “இதுபோன்ற ஒரு துணிச்சலான கதையில் நாமே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

26chrcj_KALIDAS ‘காளிதாஸ்’ படத்தில் பரத், அன் ஷித்தல் right

அதனால் நிலத்தை விற்றுப் பணத்தைக் கொடுத்து படத்தை எடு என்றார் எனது அப்பா. சாயப்பட்டறைகளால் பாழ்பட்ட நிலங்கள் பற்றி முதலில் பேசவரும் இந்தப் படத்துக்கு நிலத்தை விற்ற பணமே உதவி இருக்கிறது” என்கிறார் அறிமுக இயக்குநர் முத்து கோபால்.


பரத்தின் தீரன்

‘கடுகு’ படத்துக்குப் பிறகு பரத் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘காளிதாஸ்’. ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் கிரியேட்டிவ் ஹெட் சிவநேசன் தயாரிப்பில் குறும்பட இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பரத் காவல் துறை விசாரணை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து சுரேஷ் மேனன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். கேரளத்திலிருந்து புதிய வரவாக அன் ஷீத்தல் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தின் டீஸர் ட்ரைலரை வெளியிட்ட நடிகர் கார்த்தி, “பரத்தின் தீரனாக இந்தப் படம் அமையட்டும்”என்று வாழ்த்தியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x