Published : 12 Jan 2018 11:07 AM
Last Updated : 12 Jan 2018 11:07 AM

நடிப்பை நிரூபிக்க வசனம் அவசியமல்ல: பூர்ணா பேட்டி

திகம் பேசாமல், பார்வைகளால் மிரட்டிய வித்தியாசமான வில்லியாக ‘கொடிவீரன்’ படத்தில் தோன்றினார் பூர்ணா. அடுத்து இயக்குநர்கள் மிஷ்கின், ராம் இருவரோடும் சேர்ந்து நடித்திருக்கும் ‘சவரக்கத்தி’ பூர்ணாவுக்கு மேலும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறது.‘கொடிவீரன்’ படத்துக்காக தன் நீண்ட தலைமுடியை இழந்தவர், ‘அன்டர் ஹேர் கட்’ ஸ்டைலில் தற்போது கோலிவுட்டில் வலம் வருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்.

‘கொடிவீரன்’ படத்துக்காகத் தலைமுடியைத் துணிந்து இழந்திருக்கிறீர்களே?

நான் புதிதாக நடிக்க வரும் நாயகி இல்லை. நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இப்போதும்கூட வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாவிட்டால் எப்படி? அதனால்தான் இந்தக் கதாபாத்திரம். கதைக்காக மொட்டை அடிக்க வேண்டும் என்று முதலில் கேட்கும்போது, ‘கண்டிப்பாக அந்தக் கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தால்தானே அப்படிக் கேட்பார்கள்’ என்றுதான் நினைத்தேன். ஆனால் படக்குழுவினர், ‘நீங்கள் கதையை கேட்டபிறகு முடிவெடுங்கள்’ என்றனர். அழுத்தமான கதாபாத்திரம். அதிகம் சத்தம் போட்டுப் பேசாத கதாபாத்திரமும். அதுதான் மிகவும் பிடித்தது. ‘வசனமே இல்லாமல் நடிக்கும்போதுதான் நம்மை நிரூபிக்க முடியும்!’ என்று சீனியர்கள் சொல்வார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை எனக்கு ‘கொடிவீரன்’ உணர்த்தியது.

நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்தக் கதாபாத்திரமும் பெயர் வாங்கிக் கொடுத்ததா?

எப்போதும்போல ஒரே மாதிரி செய்யும் கதாபாத்திரம் அல்ல. சிலர், ‘உங்கள் கேரக்டரை இன்னும் நிறைய காட்சிகளில் வைத்திருக்கலாமே?’ என்று கேட்கிறார்கள். நான் கதை கேட்கும்போது என்ன சொல்லப்பட்டதோ அத்தனை காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுவிட்டன. ஒரு படத்தில் நாம் மட்டுமே கிடையாதே. எல்லோருக்கும் இடமளிக்க வேண்டுமே. நாம் ஐந்து காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அங்கே என்ன நிரூபிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அப்படிப் பார்த்தால் என்னோட கேரியரில் ‘கொடிவீரன்’ நடிப்புக்காக நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறது.

இயக்குநர்கள் மிஷ்கின், ராம் ஆகியோருடன் ‘சவரக்கத்தி’ பட அனுபவம் எப்படி?

இதில் படம் முழுக்க வருவேன். நான், மிஷ்கின் சார், ராம் சார், நாங்க மூவரும்தான் படத்தை ஆக்கிரமித்து இருப்போம். இரண்டு இயக்குநர்களோடு சேர்ந்து நடித்த ஒவ்வொரு நாளும் முதல் படத்தில் நடிக்கும்போது ஒருவித பதட்டமும், பயமும் இருக்குமே அந்தமாதிரிதான் இருந்தது. ஆதித்யா இயக்கத்தை மிக அழகாகக் கையாண்டு இந்தப் படத்தை தந்திருக்கிறார்.

படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

இரண்டு பசங்க, நிறைமாத கர்ப்பிணி என்று மூன்று குழந்தைகளின் தாயாக, கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். படத்தில் முதன் முறையாக நானே டப்பிங் பேசியிருக்கிறேன். படப்பிடிப்பில் லைவ் வாய்ஸ் போகும்போதே என்னோட குரல்தான் சரியாக இருக்கும் என்று தீர்மானித்துவிட்டார்கள். முடிந்தவரை மெனெக்கெட்டிருக்கிறேன். அதோடு எனக்குக் காது கேட்காத கதாபாத்திரம். அந்த கதாபாத்திரைத்தைச் சுற்றி நடக்கும் இயல்பான நகைச்சுவையை வைத்திருக்கிறார்கள். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தபிறகு யதார்த்த வாழ்வில்கூட காது கேட்காமல் இருந்தால் இன்னும் சந்தோஷம் என்று தோன்றியது. காது கேட்பதால் அவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கே!

நாயகியாக நடித்த நீங்கள் திடீரெனக் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்றதும் எப்படி உணர்ந்தீர்கள்?

நாயகி, குணச்சித்திரம் இரண்டும் வேறு வேறு என்றெல்லாம் என்னால் பிரித்து பார்க்கத் தோன்றவில்லை. ஒன்றரை ஆண்டுகள் இடைவேளிக்குப் பிறகுதான் ‘கொடிவீரன்’ படத்தில் நடித்தேன். தொடர்ந்து படம் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை. நல்ல அழுத்தமான கதாபாத்திரமும், பெயர் சொல்லும் கதைகளும் அமைந்தால் மட்டுமே ஏற்கிறேன். இப்போது இந்த ‘அன்டர் கட்’ ஹேர் ஸ்டைலிலேயே நடியுங்கள் என்று பல படங்களில் வாய்ப்புகள் வந்திருகின்றன. அதிலும் வித்தியாசம் இருந்தால்தான் ஏற்க வேண்டும் என்றிருக்கிறேன். ஆக, கதாபாத்திரத் தேர்வில் என் பாதை சரியாகவே நகர்கிறது.

படங்கள் ஆக்கம்: கவிதா சச்சி, கிரண் ஷா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x