Published : 05 Jan 2018 11:53 AM
Last Updated : 05 Jan 2018 11:53 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷுடன் வரலட்சுமி

 

பொங்கல் போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒன்பது படங்கள் வெளியாக முட்டிமோதிக்கொண்டிருந்தன. அந்தப் பட்டியலில் இருந்து விஷாலின் ‘இரும்புத்திரை’, ‘கலகலப்பு - 2’, விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ஆகிய படங்கள் வெளியேறி குடியரசு தினத்தன்று வெளிவர முடிவுசெய்துவிட்டன. எஞ்சிய ஆறு படங்களில் அரவிந்த்சாமி நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள ‘மதுரவீரன்’ ஆகிய படங்கள் தணிக்கை முடிந்து தயாராகிவிட்டன. ஆனால், ரேஸில் முன்னால் இருந்த சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, விமலின் ‘மன்னர் வகையறா’ ஆகிய படங்கள் தணிக்கைக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கின்றன. சென்னை மண்டலத் தணிக்கை மாற்றம், புதிய அதிகாரி வருகை எனக் குழப்பத்தில் இருப்பதால் இந்தப் படங்களைப் பார்த்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறதாம். இருந்தாலும், கடைசி நேரத்தில் எல்லாம் அதிரடியாக நடந்துவிடும் என்கிறார்கள். இதனால் பொங்கல் ரேஸில் திரையரங்குகளைப் பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

புதிய நாயகி

டந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றவர் ஜூலி. பிறகு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமாக்கியது. ஏற்கெனவே குறும்படம் ஒன்றில் நடித்துள்ள ஜூலி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்த வருகிறார். இந்நிலையில் K7 புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த துரை சுதாகர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது. எனக்கு நல்ல அறிமுகமாக இந்தப் படம் இருக்கும்” என்று தனது முதல் சினிமா வாய்ப்பு பற்றி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஜூலி.

கானாவுக்கு மரியாதை

யக்குநர் பா.ரஞ்சித் ‘காலா’ படத்தின் டப்பிங் வேலைகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் பல நிகழ்வுகளை நடத்திவருகிறார். வரும் ஜனவரி 6-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்திலிருக்கும் சி.எஸ்.ஐ பெயின்ஸ் பள்ளியில் மாலை 6-மணிக்குத் தொடங்கி மாறுபட்ட கானா இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னையின் கானா இசைக் கலைஞர்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள். ஐரோப்பிய ஆப்பிரிக்க இசைகளான ராப், ராக் கானா ஆகிய மூன்று இசை வடிவங்களுக்கும் சரிசமமான மரியாதை அளிக்கும் இசை நிகழ்ச்சியாம் இது. அனுமதி இலவசம்.

நான்காவது முறையாக...

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்று இயக்குநர் வட்டாரத்திலிருந்து தகவல். ‘உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் விஜய்யும் இணையும் நான்காவது படம் இது.

கீர்த்தியின் சவால்!

முன்னணிக் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துவரும் கீர்த்தி சுரேஷ், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகிவிட்டார். “ நான் பள்ளியில் படிக்கும்போது தோழிகள் நீ யாருடைய ரசிகை என்று கேட்பார்கள். நான் அவர்களிடம் சூர்யாவின் ரசிகை என்று கூறினேன். என்னுடைய அம்மா மேனகா சூர்யாவின் அப்பா சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்திருக்கிறார். என் தோழிகளிடம் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று ஒரு சவால்போலக் கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகிவிட்டது. சூர்யா மிகவும் அமைதியானவர். ஆனால், நான் சந்தேகம் கேட்கும்போது எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்குப் பெயரே கிடையாது” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தனுஷுடன் வரலட்சுமி

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘வட சென்னை’ ஆகிய படங்களில் தற்போது நடித்துவருகிறார் தனுஷ். அடுத்து ‘மாரி-2’ படத்தில் நடிக்கிறார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் சொந்தமாகத் தயாரிக்கும் இந்தப் படத்தை பாலாஜி மோகன் எழுதி, இயக்குகிறார். தனுஷுக்கு இந்தப் படத்தில் ஜோடி சாய் பல்லவி. என்றாலும் இந்தப் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x