Published : 19 Jan 2018 10:44 AM
Last Updated : 19 Jan 2018 10:44 AM
இ
னம், மொழி, நிறம், தோற்றம், பால், வர்க்கம் என பேதங்கள் எதுவானாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து, காதல் தனது ஆன்மாவைக் கண்டடைவது காலாகாலமாகத் தொடர்வதுதான். இந்த ஆன்மத் தேடலை பதின்ம காதலின் வழியே சொல்கிறது ‘எவ்ரி டே’ திரைப்படம்.
கூச்ச சுபாவம் கொண்ட பதின்ம வயதுப் பெண்ணொருத்திக்குக் காதல் வருகிறது. ஆனால், தான் நேசிக்கும் காதலனுக்கும் அவனது அப்போதைய உடலுக்கும் தொடர்பில்லை எனத் தெரியவரும்போது அதிர்ச்சியடைகிறாள். அன்று மட்டுமல்ல; ஒவ்வொரு நாள் புலரும்போதும் அவளைக் காதலிக்கும் ஆவி புதிய உடல் ஒன்றில் தனது தினத்தைத் தொடங்குகிறது. அவளுக்கு மட்டுமல்ல; அவளது காதலனான அந்த ஆவிக்கும் இந்த ‘நாளொரு மேனி’ கூடு பாய்தலை முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆவியின் தேகப் பயணமும் அதைத் தேடும் அவளின் ஊகப் பயணமுமாக, ஒவ்வொரு நாளும் தங்களைப் புதிதாய்க் கண்டடைந்து காதலைக் கொண்டாடுகிறார்கள். ஆண், பெண், கறுப்பு, சிவப்பு, ஒல்லி, குண்டு என்று உடலின் அடையாளங்களைக் கடந்து தினசரி புதுப்புது புதிராகத் தொடரும் நேசிப்பின் சுவாரசியமே, ஒரு கட்டத்தில் அவர்களின் காதலுக்கு எதிராகத் திரும்புகிறது.
அமெரிக்காவின் விருது வென்ற எழுத்தாளரான டேவிட் லெவிதன் இதே பெயரில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட நாவலைத் தழுவியே ‘எவ்ரி டே’ படத்தின் கதையை உருவாக்கி உள்ளனர். தத்தித்தடுமாறும் டீனேஜ் காதலைச் சுமக்கும் பெண்ணாக 17 வயதாகும் அங்கொவ்ரி ரைஸ் (Angourie Rice) நடித்துள்ளார். டெபி ரியான், ஜஸ்டிஸ் ஸ்மித், மைக்கேல் க்ராம் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.
மைக்கேல் சூஸி (Michael Sucsy) இயக்கிய காதலும் ஃபேண்டஸியும் கலந்த இத்திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியாகிறது. கால் நூற்றாண்டுக்கு முன்னர் அதிகப்படியான விருது திரைப்படங்களைத் தந்து திவால் நெருக்கடியில் காணாமல் போன ஓரியன் பிக்சர்ஸ் பட நிறுவனம், மீண்டெழுந்து வெளியிடும் முதல் திரைப்படம் என்ற வகையிலும் ‘எவ்ரி டே’ கவனம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT