Published : 30 Dec 2017 09:25 AM
Last Updated : 30 Dec 2017 09:25 AM
கோ
வையில் டாக்ஸி ஓட்டும் பிரபுதேவா, விபத்தில் சிக்கும் பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். மனிதாபிமானத்துடன் தன் உயிரைக் காப்பாற்றியவரைப் பார்க்க விரும்புகிறார் விபத்தில் இருந்து மீண்ட பிரகாஷ்ராஜ். இதற்காக தன் மனைவி பூமிகாவை, பிரபுதேவாவின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்துவருமாறு அனுப்புகிறார். ஆனால், பூமிகாவை பார்க்க மறுத்ததோடு, அவர் கொடுத்துவிட்டுச் சென்ற பணத்தையும் திருப்பி அனுப்புகிறார் பிரபுதேவா. அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்? அவருக்கும், பிரகாஷ்ராஜ் குடும்பத்துக்குமான உறவு என்ன? இவர்கள் மூவரும் நேரில் சந்தித்தார்களா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு உணர்வுபூர்வமான காட்சிகள் மூலம் விடையை விரித்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.
காதலின் உன்னதம் அதன் நேர்மையிலும், கண்ணியத்திலும் அடங்கியிருக்கிறது என்ற உண்மையை, நம் நினைவுகளைக் கிளறிச் சொல்கிறது இப்படம். திசைமாறிப்போன காதலர்களை வாழ்க்கை திரும்பவும் சந்திக்க வைக்கிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்ற எதிர்பார்ப்பையும், அதில் ஒளிந்திருக்கும் திருப்பங்களையும் இயல்பும் நேர்மையுமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் திரைக்கதை – உரையாடலை இணைந்து எழுதியிருக்கும் தங்கர் பச்சான், ஆர்.டி.தமிழ்செல்வி ஆகிய இருவரும்.
‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்று அம்பாசிடர் காரில் எழுதி வைத்திருக்கும் ஓட்டுநர் பிரபுதேவா. முன்பின் தெரியாத ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும்போது வேடிக்கை பார்க்காமல், தன்னிடம் இருக்கும் சொற்ப பணத்தைக் கட்டி அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிந்தபிறகு நிம்மதி அடைகிற சகமனித பேரன்பில் தொடங்குகிறது பிரபுதேவா கதாபாத்திரத்தின் அறிமுகம்.
எல்லாவற்றுக்கும் உச்சமாக, தன் காதலுக்கு கைநிறைய விலை கிடைத்தும், அதை விற்றுவிடாமல் தன் முன்னாள் காதலியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்து, காதலியின் கண்களைத் தவிர்க்கும்போதெல்லாம் செழியனாக வாழ்ந்திருக்கிறார் பிரபுதேவா. ‘‘நீங்க அழுதா எங்களால தாங்கமுடியாது. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்’’ என்று கூறும் மனைவியின் மடியில் கவிழ்ந்து குமுறும் காட்சியில் பிரபுதேவா மட்டுமல்ல, பார்வையாளர்களின் கண்களும் குளமாகின்றன.
பிரபுதேவா கதாபாத்திரம், காதலின் காயத்துக்கு தன் உதவிகளால் மருந்திட முடியாதா என ஏங்கும் பூமிகாவின் கதாபாத்திரம், உதவிகளை மறுக்கும் ஒருவனை தன் அருகில் வைத்துக்கொள்ளத் துடிக்கும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் என மூன்று முதன்மைக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டத்துக்கு நடுவே, காதலின் கண்ணியத்துக்கு அரியணை அளித்திருக்கிறார் தங்கர் பச்சான்.
அவர்கள் மூவருமே கதாபாத்திரங்களுக்கான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ‘‘அப்பா, நாம மறுபடியும் ஏழையாகிட்டோமா? நான் திரும்பவும் அந்த ஓட்டப் பள்ளிக்கூடத்துக்குத்தான் போகணுமா?’’ என்று கேட்கும் குழந்தை நட்சத்திரம் ஜோஷிகாவும் கவனிக்க வைக்கிறாள்.
பரத்வாஜின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு முதுகெலும்பாக தாங்கிப் பிடிக்கின்றன. ‘அழகழகே’, ‘சேரன் எங்கே’ ஆகிய 2 பாடல்களின் இசையும், வரிகளும் திரையரங்குக்கு வெளியே வந்தபிறகும் செவிகளுக்குள் ஒலிக்கின்றன.
தங்கர் பச்சானின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒளிப்பதிவும், கே.கதிரின் கலை இயக்கமும் படத்துக்கு கூடுதல் பலம்.
தேர்தலும், அரசியலும் வருமானத்துக்குரிய ஒரு நிகழ்வாக மாறிப்போனதை, காதல் கதைக்கு இடையே சாடியிருக்கிறார் இயக்குநர். பொழுதுபோக்கு என்ற பெயரில் தமிழ் சினிமாவும், தொலைக்காட்சியும் ஆபாசக் கிடங்காக ஆகிவிட்டதையும் கடிந்து கூறியிருக்கிறார். பெரியாரும் ஜீவாவும் உயிருடன் வந்து தமிழர்களைக் கடிந்துகொள்வது போன்ற பாடல் காட்சி, படத்தில் ஒட்டவைத்த ஒன்றாக இருக்கிறது.
காதலை முன்புபோல, முக்கிய உள்ளடக்கமாக தற்கால தமிழ் சினிமா கையாள்வதில்லை. முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும்கூட, ஒரு வெளிநாட்டுப் பாடல் காட்சி என்பதோடு முடிந்துவிடுகிறது காதல். அது கண்மூடித்தனமான பொழுதுபோக்கு, விடலைகளின் பருவகால பாலின்ப விளையாட்டு என்று காட்டிக் காட்டி, அதன் நேர்மையை முடிந்த அளவுக்கு நீர்த்துப்போகச் செய்துவிட்டு ஓய்ந்திருக்கிறது நம் திரையுலகம். இந்த சூழலில், காதலின் மென்மையை, அது கற்றுத்தரும் நேர்மையை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடத்துகிறது இந்தப் படம். காதலைக் கடந்து வந்தவர்கள், காதலில் வாழ்பவர்கள், காதலை தன்வசமாக்க விரும்புகிறவர்கள் ஆகிய அனைவரையும் இந்தப் படம் களவாடும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT